புதன், 14 அக்டோபர், 2020

விழியினில் பிறந்ததோர் 

ஒளியென நிறைகிறாய்

வழிகளில் வசந்தங்கள் 

தெளித்திட்ட பாதை நீ.


மொழியொரு  இசையென 

உணர்ந்ததும் உன்னாலே!

திகட்டாத அமுதென 

சுவைகளும் உன்னாலே!


கடவுளும் உடன் வர 

கடந்திடும் நிமிடமே - என்  

கனவுகள் மெய் பட 

கைப்பிடித்தாயடி!!


தினம் தினம் 

நிறைகிற இன்பமே நீ 

பிறந்த தினமின்று - எம் 

சிறந்த தினமடி!!


Happy Birthday Subha!! 


வெள்ளி, 2 அக்டோபர், 2020

கதை கதையாம் காரணமாம்

நானும் ரவுடி தான் தெரியுமான்னு கிளம்பியாச்சு. ரொம்ப நாளைக்கு அப்புறம் நண்பன் தயவுல மறுபடி பேனா. இன்னுமாடா நம்மள இந்த உலகம் நம்புது!!????

நானெல்லாம் கதை எழுத ஆரம்பிச்ச கதையே ஒரு பெரிய கதை. சிறுவர் மலர் பட கதைல ஆரம்பிச்சேன். அம்புலி மாமா, காமிக்ஸ் கதைகள், ராஜேஷ் கண்ணா, சுபா, சுஜாதா, மதன், உதயமூர்த்தி, பாலகுமாரன், வைரமுத்துன்னு இப்படி இன்னும் நீளமான பட்டியல்ல அத்தனை பேரையும் நீங்க திட்டிக்கலாம். 

எவ்ளவோ தாங்கிட்டீங்க இதை படிக்க மாட்டிங்களா என்ன?

நல்ல ஞாபகம் இருக்கு அந்த முதல் கதை வெளியான நாள். லியோனியோட பட்டி மன்றங்கள்ல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சு பாதி ஊரு வியாதி இல்லாம இருந்த நாட்கள். 

சமயத்துல பள்ளி நிகழ்ச்சிகள்ல கலந்துகிற ஞான சம்பந்தம் ஐயா. அடடா, இன்னைக்கும் வரைக்கும் ரொம்ப சாதாரணமா சிரிப்பையும் சிந்தனையும் கலந்து கலை காட்டும் அவரோட பேச்சுக்கு சேர, சோழ, பாண்டிய, பல்லவ சாம்ராஜ்யங்கள் அடிமை. 

பட்டுகோட்டை, கண்ணதாசன் பாட்டை பட்டிமன்றத்துல கேக்குற சுகம் இருக்கே. இன்னமும் நினைத்தாலே இனிக்கும் இரவுகள். 

எங்க வாத்தியார் மாரிமுத்து சாரும் அதுல ஒரு அங்கம். அவரோட பேச்சை கேட்டு பாடம் படிச்சவன். நம்மல்லாம் கதையோ கவிதையோ எழுதாம இருந்தா தான் தப்பு. 

அப்படித் தான் ஒரு நாள் ஒரு சின்ன காகிதத்துல கிறிக்கிட்டு திரும்ப திரும்ப படிக்கிறேன். பத்து நாள் கழிச்சு மறுபடி எடுத்து படிக்கிறேன். அட நம்மளும் எழுதுறோம்டா.  

கொஞ்சம் தைரியம், நிறைய தயக்கம். எங்க ஊருல ரொம்ப வெற்றிகரமா தொடங்கப் பட்ட சிவா இதழுக்கு அனுப்பிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். படிச்சிட்டு ஒதுக்கிட்டாலும் சரி. பதிச்சிட்டாலும் சரி. 

ஆனா நம்ம பேர் போட்டா ஒதுக்கிடுவாங்களோனு மறுபடி யோசனை. அப்ப நம்ம பேர் வேணாம். சுஜாதா ரேஞ்சுக்கு ஒரு பேர்னு முடிவாச்சு. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வார்த்தைனு ஒரு நாள் பூரா போராடி நாலஞ்சு பேர்  தயார். முன்னால ஊர் பேரை சேத்துக்கிட்டா அடடே பிரமாதம்.  தயார் பண்ண பேர்ல ஒண்ண சீட்டு போட்டு எடுத்து சாமிகிட்ட வேண்டிக்கிட்டு கதை அனுப்பி வைச்சேன்.

கதை எழுதுன நேரம் கம்மி தான். கதையாசிரியர் பேருக்கு  தான்  ரொம்ப நேரம் எடுத்தாச்சு. 

ஒரு சிறப்பான நாள்ல, கதைய  புத்தகத்துல பாக்குறேன். இன்னமும் அந்த இதழோட மணம் மனசுல நிக்குது. திரும்ப திரும்ப புரட்டுறேன்.  நம்ப முடியாம நடக்கிறேன். திரும்ப திரும்ப நம்ம கதை தானான்னு நம்ப முடியாம பாக்குறேன்.

பட்டாம் பூச்சி ஒண்ணு காதலியை பாக்காமலே பறக்க ஆரம்பிக்குது. சைக்கிளை எடுத்துட்டு ஊரெல்லாம் சுத்துறேன். 

சொல்ல முடியாத சந்தோஷம். அப்படி தான் சொல்லணும். யாருகிட்ட போயி சொல்ல முடியும்? 

என்ன கொடுமை சார் இது? எவன் நம்புவான் சொல்லுங்க. நான் தான் அனுப்புனேங்கறது ஏதாவது ப்ரூப் இருக்கா?? 

வீட்டுல சொன்னா யாருடா அந்த பிள்ளைன்னு டின் கட்டிருவாங்க. நானே படிச்சு டயர்டாகி மறுபடி படிச்சு தெளிய தெளிய தொடருறேன். எனக்கு நானே ரசிகனாகிகிட்டேன். நீயெல்லாம் நல்ல வருவாடானு எனக்கு நானே பல முறை சொல்லிக்கிட்டேன். அடுத்தும் கிறுக்க ஆரம்பிச்சேன். அதோட விளைவு தான் இப்படி இன்னொரு கதை. 

வேற ஒரு பேர்ல எழுதறதுக்கெல்லாம் ரொம்ப சரக்கும் கொஞ்சம் தைரியமும் வேணும். இது தான் இந்த கைப்புள்ள கதை எழுத ஆரம்பிச்ச கதை.