செவ்வாய், 30 நவம்பர், 2021

தியாகிகள்

 கடன் தந்தார் நெஞ்சம் போல் கலங்கவே கூடியிருந்தது கூட்டம். எதுக்கு இப்ப இவ்ளோ கவலை? அதுவும் எல்லாருக்கும்? 

நாட்டு மேல கடன் கூடிகிட்டே போகுதே. நம்ம சந்ததிகள் கடனாளியா வாழணுமோங்கிற கவலையா? வாய்ப்பில்லையே ராஜா. 

பெட்ரோல் விலை பத்தி..? கண்டிப்பா இருக்கவே இருக்காது. வேற இன்ன பிற கவலைகளை பட்டியல் போட்டா கூட உக்காந்து பேசி அலசி ஆராய்ஞ்சு மெகா சீரியல் பாக்குற அளவுக்கு சந்தோசப்பட்டிருப்போமே. 

ஒருவேளை தலைவர் படம் ரிலீஸ் ஆகி ஒரு மாசம் ஆச்சே, அடுத்த படம் பத்தி தலைவர் எப்ப சொல்வாருங்கிற கவலையா இருக்குமோ?

கழுவி கழுவி ஊற்றி கொண்டிருந்த டீக்கடைக்காரர் கம்பீரமாக பாய்லரை தட்டிக் கொண்டிருந்தார். இந்த ஒரு பிசினஸ் தான் பெரிய முதலைங்க வாய்ல இருந்து தப்பிச்சிருக்குங்கிற தெனாவட்டா இருக்கலாம். அவராவது சந்தோசமா இருக்காரே. சந்தோசம் தான். 

கையில கத்தி எடுத்தவன் கத்தக்கூட முடியாம தான் சாவன்ங்கிறது நம்ம சலூன் கடை ரமேஷ் விசயத்துல சரியாத்தான் போச்சாம். உழைக்கிறவன் உயர்வான்கிறது தப்பான பழமொழியாம். டீக்கடை காரருக்கு அறிவுரை சொல்லும் நம்ம  ரியல் எஸ்டேட் ரியாஸ்  எதுக்குமே கவலை பட்டதே இல்லை தான். 

கொரோனா சாப்பாட்டுக்கு கூட நாதியல்லாம ஊர் தாண்டி, ஸ்டேட் தாண்டி ஓட விட்டப்பகூட பணத்தை திங்க முடியும்னு நிருபிச்சவன் ரியாஸ். அதுவும் தான்தோன்றி தனமா தின்னாகூட பணம் பன்னி மாதிரி குட்டி போடும்னும்  புரிய வைச்சவன்.

காசு சேக்குறது ஒரு கலை. அத கத்துக்கிட்டவன் சேத்துட்டுக்கிட்டே போறான். மத்தவனெல்லாம் செலவழிச்சே அழிஞ்சு போறான்னு பிள்ளைக்கு தலைல குட்டி சொல்லிக்கிட்டு இருக்குற துரைக்கு அந்த கலை வசப்படாமலே போயிருந்தது.  ஆனாலும் பிள்ளைக்கு அட்வைஸ் பண்றத டீக்கடை முன்னாடி கூட நிப்பாட்டல. 

திடிர்னு டீக்கடை முன்னாடி இருந்த கூட்டத்துக்கு நடுவுல எவனோ வானத்துக்கு எகிறி குதிக்க பக்கத்துல இருக்கவன் அம்மானு அலற. என்னடா நடக்குது? 

சந்தோஷத்துல தலை கால் புரியாது சரி. கையும், கையில இருக்குற போனுமா தெரியாது?  போன் இடிச்சு பல்லு பேந்து அடி பட்டவன் அலர்ற சத்தம் கூட்டத்தோட ஹேங்கிற சத்தத்துல வெளிய கேக்கலை. 

ரோஹித் அடிச்ச சிக்சர்ல லட்ச ரூபாய் போனும் காலி, அடிபட்டவன் ரெண்டு பல்லும் காலி. 

லாக் டவுன்ல பட்ட கஷ்டமெல்லாம் பறந்து போச்சு அந்த கூட்டத்துக்கு. பல்லுபோனவன், செல்லு போனவன் தவிர. 

டீமோட வெற்றில நம்ம நாடு பட்ட கஷ்டமெல்லாம் காணாம போயிடும்னு நம்ம தலைவர் ________ சொன்னது உண்மை தான் போல.  

தேசமே பெரிசுன்னு நினைக்கற கூட்டம் இல்லையா! கண்ணெல்லாம் கலங்கி போனேன்.


ஞாயிறு, 7 நவம்பர், 2021

ரொம்ப நல்லவன்டா நீ

வெள்ளையும் சொள்ளையுமா வந்து நின்னப்ப இவன் பெரிய அப்பா டக்கருனு தான் நினைச்சேன். வேலைக்காரனா தான் சேந்தான். 

கொஞ்ச நாள்லயே நான் தான் அவனுக்கு பாஸ்ங்கிறதையே  மறக்கடிச்சான். இது ஒரு டெக்னீக். 

'ஆளப்பனார் நான் உங்கள் அடிமை'ன்னு தான் ஆரம்பிப்பானுக. நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமா நம்ம தான் இவனுககிட்ட அடிமையாயிருப்போம். 

இதுல இப்ப நிலைமை என்னனா சார்கிட்ட பேசும் போது இயற்கை உபாதையை கூட அடக்கி வைச்சுப்பேன்னா பாத்துக்கங்க. அடிமைக்கெல்லாம் அடிமைனு பேரு வைச்சா நல்லா இருக்காது, விட்டுறலாம். 

ஓகே, ஓகே. 'நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலைடா. யாருக்குடா இவ்ளோ பில்ட்-அப் கொடுக்கறான்ங்'கிற  உங்க மைண்ட் வாய்ஸ் நல்லா கேக்குது. 

ஆனா அதுல பாருங்க ஒரு சின்ன சிக்கல். 

சார், நம்ம ரெண்டு பேருக்குமே பொதுவான ஆளு. 

அவனை எனக்கு அறிமுகப் படுத்துனது எங்க ஊருல ஒரு பெரிய கை. ஊர்ல இருந்து வந்திருந்த  மாமா கூட போயிருந்தப்ப  தான் சார் அறிமுகமானாரு. 

'ரொம்ப நல்லவன்'னு சொன்னாங்க.

ரொம்ப குண்டா, கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு இப்ப யோசிச்சு பாத்தா ரொம்ப கேவலமா தான்  இருந்தான். இன்னைக்கு  எல்லாரும் நம்பி இருக்காதே நம்ம கதா நாயகனோட தயவை தான்.

இன்னைக்கு நீங்க அவனை பாக்கணுமே. கொஞ்சம் கூட சம்பந்தமே இருக்காது. 

இந்த கதையோட முடிவுல அவனோட பழைய போட்டோவ கண்டிப்பா பகிர்ந்துக்கிறேன்.  

இப்ப போட்டோவையும் பாருங்க. ஆம்பள, பொம்பள, விடலை பசங்க, பொடிசுகனு எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி. நம்ம ஆளு தான் இப்ப உலக அழகன்.  சூப்பர் ஸ்டார், காதல் மன்னன், கனவு கன்னி எல்லாம் சார் பக்கத்துல கூட நிக்க முடியாது. 

'சார் உலகமெல்லாம் சுத்திட்டு வந்தவரு' அப்படி இப்படினு பெரிய இண்ட்ரோவட தான் சாரோட அறிமுகம். 

நம்ம கிட்ட வேலை பாக்க போற பயலுக்கு என்ன ஒரு பில்ட்-அப்னு தோணுச்சு. 

இப்பவும் சொல்றேன். எப்படி பாத்தாலும் நம்ம ரேஞ்சுக்கு இவன் ஒரு ஆளே கிடையாது. ஆனா யாரும் ஒத்துக்க மாட்டேங்கிறாங்க.

சீட்டு விளையாட வருவான். சீட்டுக்கட்டை களைச்சு சும்மா சரக் சரக்னு அவன் போடுற அழகிருக்கே. வேற லெவல். 

காலங்காத்தால ஆரம்பிச்சு, மதியம் சாப்பாட்டுக்கு அப்புறம், சில சமயம் ரொம்ப நேரம் வரைக்கும் தூங்காம சீட்டாட்டம்னு நேரம் ஓடுச்சு. 

அப்பல்லாம் காசு வைச்சு சீட்டு விளையாட சார் ஒத்துக்கவே  மாட்டாரு. 

அதெல்லாம் இப்ப பழைய கதை. இப்ப எல்லாம் நம்மாளு எல்லா ஏரியாலயும் கல்லா கட்டுறாரு.

வெறும் சீட்டுக் கட்டோட எங்க நட்பு நிக்கல.  ரேஸுக்கெல்லாம் கூட்டிட்டு போயி கெத்து காட்டினான். 

ரேஸ் விடறதுல நம்ம ஆளு தலக்கு எல்லாம் தல. காரெல்லாம் உருண்டு, இடிச்சு, தீப்பிடிச்சு. யப்பா சாமி.  இந்த உட்டாலங்கடில்லாம் சினிமால தாண்டா பாத்துருக்கேன். அதுவே நம்ம கண்ணு முன்னாடி நடந்தா!? சும்மா தெரிக்க விட்டுருவாப்ல.

பாத்திங்களா? வேலைக்கார நாய்க்கு நான் குடுக்குற பில்ட்-அப்ப. அப்படிதான் ஆகிப் போச்சு. 

சாருக்கு என்ன பிடிக்கும்? எப்படி சார் கிட்ட பேசுறது? அவருக்கு புரிஞ்சிக்கிற மாதிரி எப்படி சொல்றது. இதெல்லாம் நல்லா தெரியலைனா சாரு பக்கத்துல கூட நிக்க முடியாது. 

என்ன கேட்டாலும் கேவலமா ஒரு பதில் வரும். அப்படி ஒரு வேலைக்காரன். 

சார் யாரு, சாருக்கு என்ன தான் தெரியும்? சார் குலம் கோத்திரம் என்ன? இப்படி எல்லாம் விசாரிக்கறதே ஒரு பொழைப்பா திரிஞ்சேன். 

அப்புறம் அதை மத்தவங்களுக்கும் எடுத்து சொல்லி என் பங்குக்கு நானும் 'சார் ரொம்ப நல்லவரு. பாத்து பக்குவமா பேசுனீங்கனா எல்லா வேலையும் நல்லா வைச்சு செய்வாரு'னு பிரமோட் பண்றதே வேலைனு திரிய ஆரம்பிச்சேன். 

அப்ப தான் சார் ஒரு ஜெர்க் அடிச்சாரு. 

எனக்கு இன்னொரு முகம் மட்டும் இல்லை, நெறய முகம் இருக்குனு. 

சும்மா தெரிக்க விட்றதுனா தெரியுமா? அது தான் நடந்தது.

டபுள், ட்ரிபிள் ஆகுறது கேள்வி பட்டிருக்கேன். நம்ம ஆளு அடிச்ச அடில ஆயிரம், பத்தாயிரம் மடங்குனு ஜம்ப் அடிச்சான் பாருங்க. 

என்ன மாதிரி ஒர்க் அவுட்னு தான் தெரியலை. பர்ஸ் பெரிசாச்சு, உடம்பு சிறிசாச்சு. 

சில பேர் வெயிட் லாஸ் பண்றேனு நோயாளி மாதிரி வந்து நிப்பாங்க. அப்புறம் நாளாக நாளாக அதுவே பார்த்து பழகிடும். 

ஆனா நம்ம ஹீரோ கதையே வேற. சும்மா ஜம்முனு வந்து நிக்கிறான். 

சாரை நம்ம ப்ரொமோட் பண்ண நிலைமை மாறி, இப்ப சார் தெரியும்னு சொன்னா தான்  நமக்கு ப்ரொமோஷன்கிற மாதிரி ஆயிருச்சு. 

'எனக்கு ஐ.ஜி ய தெரியும்னு' காமெடி பண்ணிட்டு திரியிற மாதிரி ஒரு நிலைமை. நம்ம ஜீக்கு தான் நம்மள தெரியவே தெரியாது. 

கொஞ்ச நஞ்ச நாளா என்ன? இந்த கருமாந்திரம் பிடிச்சவனோட வருஷக் கணக்குல பழகிருக்கேன். ஆனாலும் நம்மள ஒரு ஆளாவே மதிக்க மாட்டான். என்ன கொடுமை சார் இது?

இவனை எல்லாம் வச்சு செஞ்சிருக்கனும். ஆனா பண்ண முடியலை.

இடைல பெரிய ஹெல்த் ப்ராப்ளமாகி படுத்த படுக்கையா கிடந்தான். பிழைக்க வாய்ப்பில்லைனு எல்லா டாக்டரும் கைய விரிச்சுப்ப, வேண்டாத கடவுள் இல்லை. 

போகாத கோவில் இல்லை. இவனை விட்டா வேற நாதியில்லைங்கிற நிலைமை. என்ன பண்ண?

எல்லா நாட்டுல இருந்தும் பறந்தாங்க. அவன் டிரீட்மென்ட்டுக்கு செலவு பண்ண பணத்தை பாத்தப்ப தான் மிரண்டுட்டேன். சார் சாதாரண ஆளு அல்ல. இவன் எவ்ளோ பெரிய வேலைக்காரன்னு 

அப்பத்தான் புரிஞ்சிச்சு. இவன் வெறும் அப்பாடக்கர் மட்டும் இல்லை அம்மாடக்கர், அண்ணாடக்கர், அண்டர்டேக்கர், டக்கரோ டக்கர்.

இவ்ளோ தூரம் செலவு பண்ண ஒரு வேலைக்காரனுக்கு எப்படி பணம் வந்துச்சுங்கிறது தானே உங்க கேள்வி? 

வரக்கூடாதே?! எவனெல்லாம் நான் உங்களுக்கு வேலை செய்யத்தான் பொறந்திருக்கேன்னு சொல்லிட்டு திரியிறானோ, அவனெல்லாம் கொஞ்ச நாள்ல கணக்கில்லாம பணம் சேத்துருவானுகங்கறது  நமக்கு தெரியாததா என்ன? 

அப்படி இவன் யார் யார்கிட்டலாம் வேலை பாக்கிறாங்கிற லிஸ்ட் ரொம்ப ரொம்ப பெரிசு. 

நம்ம ஊரு அண்ணாச்சி தொடங்கி, பேங்க் ஆபீசர், இளைய ராஜா, சங்கர், ராஜா மௌலி, டாடா மட்டுமில்லை. உலக அளவுல பில் கேட்ஸ், லாரி பேஜ், எலான் மாஸ்க்க எல்லாருக்கும் நம்மாளு தான் வேலைக்காரன். என்ன தலை சுத்துதா? கொஞ்சம் பொறுமையா யோசிங்க. (தேவைப்பட்டா மறுபடியும் கதை ஆரம்பத்துல இருந்து கூட படிங்க)

இப்ப நீங்க ஓரளவுக்கு கண்டு பிடிச்சிட்டீங்க தானே? ஆமா அவனே தான். 

இந்த இடத்துல கொஞ்சம் இவனை பத்தி டீடைலா பேசி தான் ஆகணும்.

'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்துல நம்ம ரோபோ சங்கர் கேரக்டர் யாருன்னா நம்ம ஹீரோ தான்.   எதுவா இருந்தாலும் முதல்ல இருந்து ஆரம்பிக்கனும். எதையும் ஞாபகம் வச்சுக்கிற பழக்கம் கிடையவே கிடையாது. 

கொஞ்ச விஷயங்களை ஞாபகம் வைச்சுக்கிட்டு மீதிய ஊரு உலகமெல்லாம் இருக்குற தன்னோட அப்ரசிண்டுக கிட்ட கேட்டு தான் முடிவுக்கு வருவாப்ல. 

சாரோட மேத்தமேட்டிக்ஸ் கேக்கணுமே, ஆஹா ஓஹோ!

ஒன்னும் ஒன்னும் என்னடான்னு கேட்டா பத்துனுவான். எந்த வாத்தியார்ட்டடா  படிச்சான்?

அடுத்து பத்தும் ஒன்னும் பதினொன்னு சொன்னதும் அடிச்ச சரக்கு தெளிஞ்சிருச்சுன்னு நம்பி  பதினொன்னும், ஒன்னும் எவ்ளோன்னு கேட்டா அடுத்த செகண்ட் நூறும்பான். 

யப்பா சாமி இவன் கிட்ட பேசிக் கிட்டு இருந்தா நமக்கு கொஞ்சம் நஞ்சம் தெரிஞ்ச கணக்கும் மறந்து போயிரும். 

ஆனா பாருங்க, நம்ம சாரு தான் இப்ப எல்லாரோட கணக்கு வழக்கையும் பாத்துக்கிறாப்ல. சார் போடற கணக்குல தப்பே வராதாம். அடேங்கப்பா, என்னடா நடக்குதிந்த உலகத்துலே?

கணக்கு கூட வேணாம்பா. நேத்து ராத்திரி வரைக்கும் நல்லா பேசிட்டு இருந்துட்டு, காலைல ஹாய் சொல்லலாம்னு போனா நம்மள தெரியவே தெரியாதுன்னு சாதிக்கிறான். 

என்னென்னவோ சொல்லி பாத்தாச்சு. ம்ஹும் ஒரு பிரயோஜனமும் இல்லை. அந்த சீக்ரெட் கோட் என்னனு சொல்லுங்கறான். பெரிய கொள்ளைக் கூட்ட பாஸ் மாதிரி. 

அடங்கொப்பன் தன்னானே. கடைசி வரைக்கும் நீ யாருனு தெரியவே தெரியாதுன்னுட்டான். அவனுக்கு ஞாபக சக்தி இருக்கோ இல்லையோ அந்த சீக்ரெட் கோட் நம்ம தான் ஞாபகம் வைச்சுக்கணும். 

இன்னோரு கூத்தை கேளுங்க. நான் மறந்து போன என் கோட(code) வேற எவனோ ஒருத்தன் இவன்கிட்ட சொல்லி நான் குடுத்து வைச்சிருந்த பணத்தை லவட்டிட்டு போயிட்டான். 

எவ்ளோ எடுத்து சொன்னாலும் புரிய வைக்க முடியலை. எல்லாம் வேஸ்ட். அப்புறம் ரொம்ப நேரம் பேசி எங்க ரெண்டு பேருக்கும் புதுசா ஒரு கோட்னு முடிவு பண்ணிக்கிட்டோம். ஆனா என்ன பிரயோஜனம் போன பணம் போனது தான். 

என்னை மாதிரி எத்தனையோ பேருக்கு இவன்கிட்ட இதே ரோதனை தான். ஆனா அப்பறம் ஏன்டா இவனை நம்பி பணத்தை குடுக்குறீங்கனு கேட்டா, அதானே எனக்கும் தெரியலை.

எல்லார் சம்பள பணத்தையும் இவன்ட தான் குடுக்குறானுக. பேங்க் லோனுக்கு சார் கிட்டா தான் மாசம் மாசம் பணம் கட்டணும். போன் பில், கரண்டு பில், இன்சூரன்ஸ் பில் சகலமும் சார் நடத்துற A - Z சர்விஸ் மூலமா தான். 

அவ்வுளவு ஏன் டாக்டருக்கு பீஸ் கட்டி நம்ம உடம்ப செக் பண்ண போனா அவரே இவன் கிட்ட கேட்டு தான் நம்ம உடம்பு எப்படி இருக்குனு முடிவுக்கு வராரு. கடவுளை பாக்க கூட சார் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைச்சா தான் அப்பொய்ன்ட்மென்ட் கிடைக்கும். 

ஒரு நாள் மட்டும் நம்ம ஹீரோ லீவு போடட்டுமே சகலமும் அடங்கிரும். 

சாருக்கு பல மொழிகள் தெரியும். ஆனா ஒன்னு கூட நமக்கு தெரிஞ்ச மொழியா இருக்காது. இங்கிலிஷ் மாதிரி இருக்கும் ஆனா இங்கிலிஷ் கிடையாது. நமக்கு புரியிற மாதிரி இருக்கும் ஆனா புரியவே புரியாது. ஒவ்வொரு தடவை பேச போகும் போதும் இடைல ஒரு ஆளு கூடவே  இருப்பான். 

இவனே ஒரு எடுப்பு அதுல இவனுக்கு ஒரு தொடுப்பு. 

நம்ம சொல்றத எடுத்து சொல்லி, தேவைப்பட்டா 'அண்ணன் இந்த இடத்துல கொஞ்சம் நீங்க நோட்ஸ்  எடுத்துக்க, தேவைப்பட்டா சிப்ஸ் எடுத்துக்கனு' மானே தேனே போட்டுகிட்டுருப்பாரு. 

அதெல்லாம் நீ ஏன் போடறேனு நம்ம கேள்விலாம் கேட்கப்படாது. அப்புறம் ஒரு வேலையும் நடக்காது. 

சில சமயம் வேற ஒருத்தன் இருப்பான். பயங்கர கடுப்பா இருக்கும். வார்த்தைக்கு வார்த்தை ட்ரான்ஸ்லேட் பண்ணுவான். இடைல நீங்க இப்படிலாம் சொல்ல கூடாதுனு  நமக்கு அட்வைஸ் வேற  பண்ணுவான். கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம 'போய் படிச்சவன் எவனாவது இருந்தா கூட்டிட்டு வா'னு கேவலமா திட்டுவான்.  நாகரிகம் இல்லாத நான்சென்ஸ். இவனுங்களுக்கு தான் இந்த காலத்துல மரியாதை. கலி காலம்ங்க!

இது தான் நம்ம கதாநாயகனோட பழைய படம் 


இப்ப கைக்கு அடக்கமா ஒரு சைஸ், மடில வைச்சிக்கிற மாதிரி ஒரு சைஸ், இன்னும் எத்தனையோ அவதாரம். நாளொரு மேனி பொழுதொரு வெர்சன். 





ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

நடத்துனர்

வாயுயர்த்தி 

வழி பிடித்து

நாள் முழுதும் 

நடை நடந்து


வியர்வையிடை 

ஊடுருவி 


நின்றது யார் 

நகர்ந்தது யார் 

கண்கொத்தி பாம்பாகி 

கணக்கெழுதி 


தடுமாறும் 

வழியேனும் 

ஒற்றைக் கம்பி

ஒருச்சாய்த்து 

நிலை பிடித்து 


பை நிறையும் 

பணம் காக்க 

நாயாகி  

நகருமென் 

நாட்களுக்கு 

இடைநிறுத்த 

தேனீரே 

வாய்த்த பணம்   

பெரும் 

பேரமிர்தம்  


 

புதன், 25 ஆகஸ்ட், 2021

ராஜாங்கம் 2

 ஆஸ்பத்திரி நெடி வெளில தெரியாம இருக்கனு நினைக்கிறேன். லெயோனார்ட் ஆஸ்பத்திரியை சுத்தி அழகழகா பூ இருக்கும். டாக்டருக்கு காத்திருக்கிற நேரத்துல அங்கே இருக்க குட்டி கார்டென பாத்துகிட்டு  இருந்தா நேரம் ஈஸியா நகர்ந்திடும். தாத்தா கூட டாக்டர் பாக்க நான் தான் கூட போவேன். போனவுடனே டோக்கன் வாங்கணும். அப்புறம் அந்த நம்பர் கூப்பிடற வரை வெயிட் பண்ணனும். மத்த ஆஸ்பத்திரி போனா சுத்தி சுவரைத் தான் பாக்கணும். இல்லைனா பக்கத்துல உக்காந்திருக்கிற நபரோட எதையவது பேசிட்டு இருக்கலாம். நமக்கு அதுலெல்லாம் சுவாரிஸ்யம் இல்லை. கர்டென்ல இருக்குற ஒவ்வொரு பூவா பாத்துக்கிட்டிருந்தா பாதி வியாதி போயிரும்னு நினைக்கிறேன். அவ்ளோ அழகு. 


தாத்தா டாக்டர்ட பேசுறப்ப எதோ பக்கத்துக்கு வீட்டுக்காரர்ட பேசுற மாதிரி ரொம்ப கேசுவலா பேசுவாரு. ஒரு தடவைக்கு மூணு தடவ எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுப்பாரு. அதே மாதிரி எந்த டாக்டரும் தாத்தா கிட்ட பந்தா காட்டினதா ஞாபகமே இல்லை. ரொம்ப இயல்பா பேச வைச்சிருவாரு. எங்க ஊரு கைராசி டாக்டர் வீடு வரைக்கும் வந்து தாத்தாவை பாத்திட்டு போவாரு. தாத்தா மேல அவ்ளோ பிரியம். 

தாத்தா அடிக்கடி செக்கப்புனு மதுரைக்கு வேற போவாரு. அப்பவும்  தாத்தா கூட நான் போயிருக்கேன். சும்மா சன்னல் சீட்டுகிட்ட உக்காந்து வேடிக்கை பாக்குறதுக்கு தான். மத்தபடி நம்ம கூட போறதால ஒரு பிரயோஜனமும் இல்லை. பஸ்ல போறதுனா ஒரு சந்தோசம். அதே ஊர்க தான் திரும்ப திரும்ப கடந்து போறோம். ஆனா அப்பப்ப நிகழற  சின்ன சின்ன மாற்றங்களை ரசிக்க முடியும்.  புதுசா முளைக்கிற கட்டிடங்கள். பச்சை பசேர்னு இருந்த நிலங்கள் திடீர்னு பொட்டலா போறதுலாம் சிமிண்ட் செடி வளக்குறதுக்கு அப்பல்லாம் தெரியாது. ஒன்னும் புரியாம கடந்த நாட்கள். ரொம்ப நாள் வரைக்கும் நம்ம அரை டிக்கட்டு தான்.

-- தாத்தா கை பிடித்து நாளை 

புதன், 18 ஆகஸ்ட், 2021

ராஜாங்கம்

குறுகலான வளைந்து நெளிந்த அந்த பாதையின் முடிவில் உடலை குறுக்கி தான்  வெளி வர முடியும். அந்த பகுதியில் வாழ்கிற நூர் அக்கா குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும்  நல்ல உழைப்பாளிகள். காலையில்  குழாயடி சண்டை தொடங்கி ஒவ்வொரு தினசரி நடப்புகளிலும் பலமுறை கண்ணில் படுவார்கள். என் கடந்த கால மன ஓவியம் பலவற்றில் அவர்களை பார்க்க முடியும்.

தாத்தா ஒவ்வொரு நாளும் அவர்கள் வீட்டு  வழியே தான் கடைக்கு போவார். தாத்தாவின் நல விசாரிப்பும் பெரிய புன்னகையும் பரிட்சயம். எண்பது வயது தாண்டிய பின்னாலும் தாத்தா வசம் கம்பீரம் என்றும் குறைந்ததில்லை. 

ரஜினி, கமல் கால கட்டத்திலேயே அவங்க எல்லாரையும் விட பெரிய ஹீரோ எனக்கு எங்க தாத்தா. என்னை வளர்த்த தாத்தா.

பெயருக்கு பின்னலான சாதி பெயரை நீக்கி விட்டால் 'ராஜாங்கம்'. பெயருக்கு ஏற்ற கம்பீரம். தாத்தாவை எதற்கேனும் எப்போதேனும் தயங்கி பார்த்ததில்லை. நல்ல பிள்ளைகளை பெற்ற சந்தோசம்  காரணமாயிருக்கலாம். 

அவரை விட வாழ்க்கை பற்றிய மிகத் தெளிவான பார்வை கொண்ட எவரையும் இன்றளவும் கடந்து வந்ததில்லை.

'ஹீரோ இன்ட்ரோலேயே நேரம் கடத்தாம நேரா கதைக்கு வா'ங்கிற உங்க டென்ஷன் தெரியுது. ஆனா பாஸ்,  இங்க கதையே அவர் தான்.

தாத்தாவை பத்தி கதை எழுதணும்ங்கிறது நீண்ட நாள் கனவெல்லாம் இல்லை. ஆனா ஒவ்வொரு நாளும் மனம் அசை போடுற பெருங்காவியம். 

எங்க வீட்ல சிரிக்கிற தாத்தா படம், நாடு கடந்து வந்ததுக்கப்புறமும் இன்னும் அப்படியே நெஞ்சுக்குள்ளாயே இருக்கு. முன்னை விட இப்ப இன்னும் அதிகமாகுற தாத்தா மேலான மரியாதைக்கு காரணம் சின்ன சின்ன விஷயங்கள்ல கூட அவர்ட பார்த்த சிறப்பான அணுகுமுறை. அதோட பாசத்துக்கு 200% மார்க்  வாங்குன எங்க அப்பத்தா.

ஊருக்கு முக்கியமான பகுதியில் பலசரக்கடை. பிளாஸ்டிக் வயரால் பின்னப்பட்ட சின்ன பலகை.  அவரது ஆசனம். சில முறை நானும் அதில் உட்கார்ந்து பார்த்திருக்கிறேன். மிக அசௌர்யமாக தோன்றும் அதே இருக்கையில் தாத்தா உட்கார்ந்திருக்கும் போது பாக்கவே சும்மா ஜம்முனு இருக்கும்.

கடைக்கு வருகிற வாடிக்கையாளர்களிடம் புன்னகையோடான அவரது உரையாடல் கடந்து போகிறவர்களை கூட கடைக்கு இழுக்கும்.கடைக்கு வருபவர்களுக்கு  கல்கண்டு, பேரிச்சம் பழம் என்று குழந்தை பெரியவர்கள் என்று ஆளுக்கேற்றவாறு கிடைக்கும்.  

தாத்தா சிரிப்புக்கும் பேச்சுக்கும் முன்னாடி கற்கண்டு எல்லாம் பெரிய விஷயமா என்ன? அந்த புன்னகையின் ஈர்ப்பு இன்னும் உயிர்ப்பில் இருக்கிறது - எங்கள் வீட்டில் எல்லோரது நினைவு சில்லுகளிலும்  அவரது புகைப்படத்திலும்.

சித்தப்பாக்கள் இரண்டு பேரும் தாத்தாவிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் பல. நான் தாத்தாவுடன் கொஞ்சம் அதிகம் செலவிட்டுருக்கலாம்.  பழைய ஞாபகம் சிறகடிக்கிற நேரங்களில் வருத்தம் வந்து போகும். 

தாத்தா முகஞ்சுருக்கி பார்த்ததில்லையென்றாலும் ஒரே  அதட்டலில்  சர்வ நாடியும் அடக்கி விடுவார். பேச்சுக்கு எதிர் பேச்சு வாய்ப்பே இல்லை. ஒரே ஒரு முறை எதையோ கேட்கப் போய் 'போடா வீட்டுக்கு' என்ற ஒற்றை வார்த்தையில் டமால் ஆனாது நினைவிருக்கிறது. ஆனா எதுக்குன்னு தான் என்ன யோசிச்சாலும் ஞாபகம் வர மாட்டேங்குது.

மற்றவர்களின் அபிப்ராயம் தெரியவில்லை. எனக்கு தெரிந்தவரை அவரது பேச்சும் நடவடிக்கைகளும் துல்லியமாக இருக்கும். அவர்ட  குடுக்குற கணக்கும் அதே மாதிரி துல்லியமா இருக்கணும். தியேட்டர்க்கு போனா எந்த டிக்கெட் எடுக்கணும், என்ன இண்டெர்வல்ல சாப்பிடணும், எத்தனை மணிக்கு வீட்டுக்கு திரும்பணுங்கிற வரைக்கும் எல்லா டீடைலும் அவர்ட குடுக்கணும். முக்கியமா அதே மாதிரி நடக்கணும்.

ஒரு குடும்பம் இல்லை. சித்தப்பா குடும்பம், மாமா குடும்பம் எல்லாம் சேத்து அஞ்சு குடும்பத்தை கண்ட்ரோல்ல வைச்சிகிறது எவ்வுளவு பெரிய விஷயம். அதோட வெளியூர்ல இருக்குற சொந்தங்களோட நல்ல பழக்கத்துல இருந்தோம். 

இன்னைக்கு ஒவ்வொன்னுக்கும் பெரிய மீட்டிங், பட்ஜெட்டுனு நகருற நாலு மெம்பர் குடும்பத்துக்கே நமக்கெல்லாம் நாக்கு தள்ளுது.

அக்காவிற்கு கல்யாணம் ஆன புதிதில் ஒவ்வொரு முறை அத்தான் வீட்டுக்கு வரும் போதும் தாத்தா வீட்டில் தான் விருந்து. சித்தப்பா, சித்தி, மாமா குடும்பம் எல்லோரும் ஒரே வீட்டில் குடியிருக்கிற தருணம். பெரிய குதூகலம்.

அம்மா, சித்தி, அத்தை எல்லோரும் சேர்ந்து சமைக்கிற விருந்துக்கு இன்றும் நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிற நாக்கு. 

மாலை நேரங்களில் எல்லா பொடிசுகளும் வீட்டு வாசலில் விளையாட்டு . கோ கோ விளையாடியது இன்னும் ஞாபகம் இருக்கிறது. விளையாட்டு முடிந்து வந்தால்  உட்கார வைத்து பெரிய சட்டியில் கூட்டாஞ்சோறு ஊட்டி விடுகிற அம்மா.

அப்போது அம்மா சொல்கிற கதையில் மூணு மடங்கு சாப்பாடு உள்ளே இறங்கும். எவ்வுளவு சாப்பிட்டாலும் கடைசியில் போட்டி இழுத்து விடும்  சின்னூண்டு நொய் சாத ருசி எல்லாவற்றிற்கும் மேல். 

இன்னைக்கு எனக்கு கதை எழுதுற ஆர்வம் வர்றதுக்கு அம்மா தான் முக்கிய காரணமாயிருக்க வேண்டும். ஒரே கதையே நூறு தடவை சொன்னாலும் ஒவ்வொரு தடவையும் திரும்ப திரும்ப கேக்குற மாதிரி இருக்கும். அது தான் எப்படினு தெரியலை.

இரவு சாதம் முடித்து கலை கட்டும் மீட்டிங்கில் தாத்தா தான் பிரதானம். ராஜா காலத்து தர்பாரேல்லாம் இப்படித் தானிருந்திருக்க வேண்டும். அப்பாவும் சித்தப்பாக்களும்  இந்த மாதிரி  நிகழ்வுகளை ரொம்பவே விரும்புபவர்கள். எல்லாம் பேசி முடித்து வீட்டுக்கு கிளம்புகையில் இரவு மணி ஒன்றுக்கும் மேலாகி விடும்.

பெரும்பாலும் மறுநாள் ஞாயிற்றுக் கிழமையாய் தானிருக்கும் என்பதால் தூக்கத்துக்கு ஒன்னும் குறைவில்லை. மறுநாள் காலை சுட சுட ஹோட்டல் இட்லி, பேப்பர் ரோஸ்ட், சாம்பார் வடையோட கம கமன்னு விடியும். ஒரே ஜீவன் அப்பா மட்டும் கடைக்கு எட்டு மணிக்கு முன்பாகவே கடைக்கு கிளம்பி போயிருப்பார்.

-- தாத்தா கை பிடித்து நாளை 

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

பூக்காரி

பறித்ததும் 

பிரித்ததும் 


மேலொன்றும்

கீழொன்றும் 

நிறைத்ததும் 


இடம் பிடித்து 

வலம் இயங்க 

தொடுத்ததும் 


வெறும் நாரும் 

மணமேறும் 


கூவும் 

உன் குரலில் 

தெருவெல்லாம் 

மெருகேறும்!

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

தேரோட்டம்

வளையும் நெளியும் 

மொழியின் அழகில் 

மிதந்தேன்


நாவில் வசிக்கும்  

தேன் நீ


சுவாசம் தித்திக்கும் 

மணம் நீ 


பேசித் திரிந்தேன் 

கிறுக்கி மகிழ்ந்தேன் 


உனை 

சிந்தை இருத்தி 

செயலில் வடிக்க

கோவில் சிலையாய் 

தொடங்குதொரு

வெற்றித் தேரோட்டம்

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

திகை, அடை,

இரு, 

உணர், எழு,

தகர், 

விழை, இணை, 

துளிர், உழை,

வளர்,

இணை, பகிர்,

திளை, தொலை,

பிடி.


ஓம், ஓம்,

ஓம், ஓம்,

ஓம், ஓம் 

ஓம், ஓம் 


திகையோம்,

அடையோம்,

உணர்வுடன் 

இருப்போம்.


உணர்வோம்,

எழுவோம்,

தடை தனை 

தகர்ப்போம்.


விழைவோம்,

இணைவோம்,

இனியவை 

வளர்ப்போம்.


ஓம், ஓம்,

ஓம், ஓம்,

ஓம், ஓம் 

ஓம், ஓம் 


தளரோம்,

துளிர்ப்போம்,

வளர்ந்திட  

உழைப்போம்.


இணைவோம்,

பகிர்வோம்,

விளைந்திட 

திளைப்போம்.


சிறுமையை 

தொலைப்போம் 

பெருமையை 

பிடிப்போம் 


ஓம், ஓம்,

ஓம், ஓம்,

ஓம், ஓம் 

ஓம், ஓம் 

வெள்ளி, 30 ஜூலை, 2021

நன்றி நட்பே


 நடந்த நாட்கள்,

வானம் பார்த்த 

கதைகள்,

காது நிறைத்த 

சிரிப்பொலிகள்,

இருட்டு கிழித்த 

தித்திப்புகள்,

புத்தாண்டின் 

புன்முறுவல் காட்டிய 

உன் நடனம்,

நெகிழ்ந்து நெகிழ்ந்து 

சுவாசித்த இசை,

எல்லா சந்தங்களிலும் 

ஒட்டிக்கொள்ளுமுன் 

பாடல் வரிகள்,

ஒவ்வொரு முறையும் 

உணருகிறேன் 

வாழ்க்கை எவ்வுளவு 

அழகானது -

உன்னால்!

திங்கள், 19 ஜூலை, 2021

நிறையுமென் அகராதி 

பகிருமுன்  ஒற்றை வார்த்தை 


உதிர்வதும் 

வசந்த காலம் 

உதிர்ப்பதுன் 

உதடென்றால்!

புதன், 23 ஜூன், 2021

மூச்சே

 தாயவள் குரலினில் 

இசையானதென் தமிழே!

தயையுடன் தலை கோதும் 

தந்தையவன் குறும் பேச்சே!


ஓதுமொரு உளியெடுத்து 

செதுக்குமொரு ஆசானே! 

செவி மடுத்துடன் வளர்ந்த 

தோழனது தேன் பேச்சே!


விழியுணர் வழியிலெங்கும் 

கண் நிறையும் கலை நீயே!

வடிவான தமிழே உனை 

வணங்கிடவே பேறு பெற்றேன்!  


திங்கள், 21 ஜூன், 2021

போற்றி உனக்கே!

எழுத்தாணி கொடுத்தே நீ 

ஏற்றிவிட்டாய் ஏணியிலே! 

பழுத்திட்ட பாசமூட்டி 

கொழுத்திடவே  வளர்த்ததும் நீ!


உழைப்பதுவே தொழுதலென 

உணர்ந்ததுவும் உன்னாலே!

களைப்பில்லா களிப்பொன்று

விழைத்திட்ட செயலோனே!! 


கந்தலாய்  கலங்கிய நாளில் 

தந்தையானாய் 

தெளிந்திட உயர்ந்திட நானும் 

பெருமிதமானாய்!

போற்றி உனக்கே!



ஞாயிறு, 28 மார்ச், 2021

பற

சிறகிருக்க பறவை 

மிதக்குதது வானில் 
உறவெனவே உடனே  
பறக்குமென் நட்பு

விரிந்திருக்கும் மண்ணில் 
எல்லைகள் இல்லை 

காற்றிருக்கும் தூரம் 
போதவில்லை பயணம் 

மனம் விரிக்கும் வெளியில் 
தடைகளெதுவும் இல்லை 
விரிந்திருக்கும் மனதில் 
நெருங்குமோ கவலை 

தூக்கி திரிவதில்லை
சேர்ப்பதில்லை உணவை

உண்டவுடன் செரிக்கும்
கிடைத்த இடம் இனிக்கும்

பறக்க வா நண்பா 
சிறப்பினை உணரு!