வெள்ளி, 20 மார்ச், 2026

வேறெங்கும் கிளைகளில்லை



எல்லோரும் கடந்து போன 

அதே சாலை தான் 


அலறியடித்துக் கொண்டு 

ஓடிய கூட்டமும் 

நிதானமாக நகர்கிற 

கால்களும்


எல்லைப்புள்ளியில் 

பரிசுடன் யாரோ 

காத்திருப்பதான புரளியை 

நம்ப மறுக்கிற 

பிடிவாதம் 


வழிதோறும் ஒளிர்கிற   

பரிசுகளை மொழிகொண்டு 

சேகரம் செய்தபடியே 

பயணிக்கிற பொறுமை 


பந்தய வாதிகளுக்கு

வாழ்க்கை 

எல்லைக்கோட்டுக்கு 

அப்புறம் தொடங்குமாம் 


உயிர்ப் பெருகிற வரிகளை

உணர்வுமையால் 

தீட்டியவாறே

வழியெங்கும் வாழ்கிறவர்களின் 

சுவர்க்கம் அங்கேயும் 

கிளை பரப்பி இருக்குமோ?

சனி, 14 மார்ச், 2026

ஞான பீடம்

இருபத்தி நான்கு வருட

தவமா விருது?

ஒரு மூன்றை குறைத்த 

வேகமா இவ்விருது?


ஒருதுளி 

மும்மொழி சேர்ந்த வேகத்தில் 

தெரித்த துளியோ?


ஒரு அரசுக்கும் 

பேரரசுக்கும் இடைவெளி 

பனிரெண்டு வருடமென ஒரு 

கடுந்தவ கணக்குண்டு


பதினான்கு வயது

பால வாசத்தையும் 

இரு வரிகளில் நீ 

இறக்கியபோதே 

எடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் 


தவமில்லா வரத்திற்கு 

உனக்கு தான் 

சம்மதமிருந்திருக்காது


நிழலாடிய ராஜாக்களுக்கும் 

குழலாடிய ரோஜக்களுக்கும் 

உன் வரி தானே முகவரி 


ஏழாயிரத்து ஐந்நூறு 

தடவைகளிலும் உன் பேனா 

அளித்த விருதுகளின் 

சுவையுணர்ந்ததால் 


ஏழோடு எட்டாய் அடுக்கிவிட்டு 

அடுத்த படைப்புக்கான 

பெருந்தவத்திருக்குள்

நுழைந்து விடுவாய் 


ஒவ்வொரு தவத்திலும்

எல்லோருக்குமான

வரமல்லவா 

வாங்கி வருகிறாய்

வெள்ளி, 13 மார்ச், 2026

வெற்றி


நீங்கள் கடந்துவந்த

பாதை வழியில் தான் 

காத்துக்கிடந்தது 


சற்றேனும் 

ஆசுவாசப் படுத்தச் 

சொன்னாரே பெரியவர் 

அதே இடத்தில் தான் 


மூச்சு முட்ட முட்ட 

இளைப்பாற மனமின்றி

ஓட்டமெடுத்தீர்களே 

அந்த நொடியில் தான் 


திரும்பிப் போக முடியாத 

ஒற்றை வழி பயணம்


வேதனையை சுமந்துகொண்டா 

மறுபடி விரையப் போகிறீர்கள்?

(கவி)தையவள்

கவிதைகள் எனச் சொல்லப்படுபவைகளில்
புரிந்தும் புரியாமலுமாய்
நிறைகிற சொல்லாடல்கள் 

இரசிக்கப்படவும்
வினா அள்ளித் தெளித்துமே
நகர்கிறது

“மொழியிலிருந்து
அந்நியமாகிப் போனோமோ?”
பதைபதைக்கிற மனதை
என்ன சொல்லி ஆற்றுப்படுத்துவது?

கட்டியவள் மனதைப் போலதான்
சில கவிதைகளும்
காலம் கடந்தும்
நம்மை
முட்டாளாகவே
உணரச் செய்கிறது 

ஞாயிறு, 8 மார்ச், 2026

கள்ள ஓட்டு

நிகழ்பவை அனைத்தும்
நாடகமா?
வேடிக்கை பார்ப்பவர்
உடல்நலத்தை
பந்தயம் கட்டிட
நிகழ்வதுவா?


எதற்கென உணரா
வேட்கையுடன்
கடத்திடும் நேரக்
கொள்கைகளை
திணித்தவர் போடும்
ஆட்டமிதில் 


எனக்கொரு வேடம்
வேண்டிடவே
நிறையுது கூட்டம்
திரை பிதுங்கி 


வந்ததன் நோக்கம்
நாமறியோம்
மேடைகள் நோக்கம்
அதுமறியோம் 


ஆடுகள் பண்ணை
மந்தைதனில்
தலைக்கொரு விலையெதும்
இருக்கிறதா?


பாதை தவறிய
ஆட்டுக்குட்டி
காத்திடும் கர்த்தரின்
அரவணைப்பு


உள்ளிரு இறைவனை
உணர்தல் விட்டு
ஓடுது யாத்திரை
பாதங்களே!


போர்முனை செய்திகள்
உச்சுக்கொட்டி
கையறு காலம்
கடத்திடவே நாளை
நாமும் வாக்களிப்போம் 


விழுந்தால் என்ன
விட்டால் என்ன
அத்தனை ஓட்டும்
கள்ள ஓட்டு 


பலமுறை வாதங்கள்
நிகழும் வரை
விரையமாகும் செயல்களேனில்
அத்தனை சக்தியும்
தீய சக்தி