சனி, 8 ஆகஸ்ட், 2026

மன்னர்க்கெலாம் மாமன்னர்

மன்னரென கோலெய்ச்சி
வென்றவர் தம் வரலாற்றில்
வாழ்ந்தவர்தம் நிலைபற்றி
குமைந்ததரு தடயங்கள் 

எரித்தனரோ ஒழித்தனரோ
தொலைத்தோமே பலவாறு 

குறிப்பேதும் உணராது
படித்தோடும் நாளிதிலே
உண்மைநிலை உணர்ந்தேனா?

என்மேலே திணிக்கின்ற
காந்தத் திரி கருத்துகளை
சுருக்கென்று சிதறி விட்டு
அடுத்தோடும் வேலைகளே
எடுத்தாளும் சிந்தனையை 

உண்ண ஒரு வழி தேடி
உடுத்திய பின் விழிதேடி
கடத்தியதன் கணக்கில்லை
இருப்பதுவும் இழப்பேனோ
கிடைத்தவைகள் படிப்பேனோ 

ஆண்டவர்கள் பெற்றவைகள்
அவரவர் தம் தலைமுறைகள்
உண்டனரோ கொண்டனரோ
ஊர்தந்து நின்றனரோ
உதவவில்லை எமக்குவெல்லாம் 

கற்றவர்கள் கைப்படவே
காவியங்கள், கைத்தடங்கள்
தந்தவைகள் அத்தனையும்
கடத்திடுவோம் தலைமுறைகள் 

பீடமில்லை மகுடமில்லை
வெற்றிவாகை கோலமில்லை
என்றாலும் வென்றவர்கள்
கற்றவர்கள்!
மாசில்லா கற்றலினால்
வென்றுவிட்ட மாமன்னர்

source: 

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.