ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

முடியாத தொடக்கம்

 சுவாரஸ்யமாய் நகருகிற கதையின் கடைசி பக்கங்களிலிருந்து பிரிக்கவே முடியாத பதை பதைப்போடு புரட்டுகிறேன். கடிகார முள் கூட கவனம் திருப்பும் இரவு. காதடைத்த பேரமைதியோடு வழுக்கி ஓடுகிறது நேரம். 

கதையின் நாயகன் கதை மட்டுமே என்பதை புரிந்து கொண்ட எழுத்தாளர். மேலெதுவும் பூசாமல் இயல்பாகவே நகர்கிற கதையின் முடிவில் அந்த வேட்டை நாய் சீண்டுவாரற்று அலைகிறது. வாய் கட்டி வயிறு கட்டி சேர்த்த பணத்தை தலைமுறைக்கென எழுதிவிட்டு மாத்திரை மென்று நகர்த்துகிறான் நாட்களை அவன். 

என்ன கதையிது??? விறு விறுப்பான கதையின் முடிவு ஏன் இவ்வளுவு விரக்தியாய் என்று பிதுங்கும் கேள்விகளோடு படுக்கைக்கு நகர்கிறேன். மறுபடி மறுபடி அசை போடுவதற்கு அந்த முடிவே காரணமாயிருக்கலாம். 

பிரண்டு படுத்து முடிவிலிருந்து பின் நோக்கி நகர்கிற போது தான் கதை கொஞ்சம் தெளிவது உணர்ந்து அயர்ந்து தூங்க ஆரம்பிக்கிறேன். 

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

தேடல்

நகர்ந்திடா நாட்களை
விழி போக்கில்
விட்டு விட்டே
உறைந்திட்ட பனியென
ஒதுங்கினேன் சாய்ந்திட்டே!

பெருமுள்ளும் சிறுமுள்ளும்
எனை சாய்த்து
வெற்றி கொள்ள
நேரம் கடத்தியதாய்
விவரமில்லதொரு 
வெற்(று)றி  புன்னகை!

தொலையியக்கி கைமாற
உணருகிறேன்

யாரியக்க இப்படி நான்
எனை தொலைக்க
இயங்குகிறேன்

எனை இயக்கும்
உந்து கோளை
தேட வேண்டும் 
நகருகிறேன்

இயல்பது இயல்வதே! 
இருப்பதை உரைதீட்ட  
உருவென ஏறட்டும் 
தொடர்கிறேன்