புதன், 29 ஆகஸ்ட், 2018

நம்பிக்கை வளர்ப்பவர்கள்


நிறைந்து வழியும்
கோவிலெங்கும்
வேண்டுதல்கள்.

முனு முனுப்பது
மந்திரமாகவோ
கோரிக்கையாகவோ
இருக்க கூடும்.

சிலரின்
கண்மூடிய தரிசனங்களில்
கண்ணீரும்.

நன்றி சொல்லும்
விழிகளில் மிளிரும்
வண்ணங்கள்
கடந்து போவோருக்கும்
பற்றிக்கொள்கின்றன
நம்பிக்கை வளர்ப்பவர்கள்
கடந்து போகிற பிரகாரங்களில்!

வெறும் வேண்டுதலோடு
நின்று விடாதவர்கள்
வந்து போகிற
நொடிகளில் தான்
சக்தி உருவெறும்
பலருக்கான
நம்பிக்கை ஸ்தலங்கள்!

நம்பிக்கை வளர்ப்பவர்களை
மேலும் வளர்ப்பதே
முறையன்றோ!

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

சுதந்திர கதைகள்

3ம் வகுப்பு
ஸ்கூலில் கூட்டி போன
காந்தி படம் தவிர
ஆரஞ்சு மிட்டாயும்,
"பட்டொளி வீசி பறக்குது பாரீர்"
பாட்டுமே
நினைவில் வந்து போகும்!

சமீப காலங்களில் 
சாலமன் பாப்பையாவும்
உடன் சேர்ந்திருக்கிறார்.

மனதில் எதோ
பதற்றம் பற்றிக் கொள்ள
சம்பந்தமே இல்லாமல்
திடீரென
வெள்ளையனை பற்றியும்,
வெகுண்டெழுந்த
வல்லமை பற்றியும்
இரவு நேர கதைகளில்
கொஞ்சம் சேர்த்திருக்கிறேன்!

விழி விரிய கேட்கும்
பிள்ளைகளுக்கு
பின் நாள் நினைவுகளில்
நிலைக்குமா?
சுதந்திர கதைகள்!

செவ்வாய், 15 மே, 2018

முதல் நாள்

முதல் நாள். ஐ டி கார்டுக்கு வரிசையில் நின்று, போட்டோ எடுக்கையில் ஆப்ரிக்கா சகோதரி  சொன்ன ஜோக் முழுதாக புரியவில்லை தான். ஏதோ சிரித்து வைத்ததில் புகைப்படம் அழகாக வந்திருந்தது. 

நன்றி சொல்லிவிட்டு போன் எடுத்து பார்த்துக் கொண்டேன். மணி 9:30. முதல் நாள் அல்லவா, ஒரு நல்ல பிம்பம் கிடைக்க சீக்கிரம் ஆபிஸ் வந்தாயிற்று.

புது மேனேஜர் போட்ட மெயில் செக் பண்ண யாஹூ மெயில் தொட்ட அடுத்த வினாடி பொலபொலவென கொட்டியது. காலைல எந்திரிச்சப்ப தான் ஒரு தடவை செக் பண்ணேன். அதுக்குள்ளே 124 புது மெயில்.

அதுல ஒண்ணு கூட எனக்கு வந்த மெயில் இல்லை. ஒருத்தன் கடன் வாங்குங்கிறான், ஒருத்தன் 40 வயசு காரன் என்னை  டேட்டிங் போக சொல்றான், ஒருத்தன் விட்டா கிடைக்காது சார், போனா வராது சார் வாங்க வாங்கன்றான். 

இந்த யாஹூ மெயில் படிக்கிறதுக்கு கம்ப்யூட்டர் தான் வசதி. மொத்தமா செலக்ட் பண்ணி delete பட்டன press பண்ணிடலாம். 

உங்க வசதியை பயன்படுத்துனதுல ஒண்ணு தெரிஞ்சுக்கிட்டேன் பாஸ். "ஆணியே பிடுங்க வேணாம்...னு நம்ம வடிவேல் அவ்ளோ டென்ஷன் ஆனதுக்கு நீங்க தான் காரணமா இருப்பீங்க".

"டொடைங்..." எட்டி பார்த்த வாட்சாப் செய்தியில் நண்பன் ஸ்டெரிலைட் ஆலை பற்றி கொந்தளித்திருந்தான். 'ஏன்தான் இப்படி கஷ்டம் மேல கஷ்டம் வருதுனு' மனசு பட படனு அடிச்சுகிச்சு. 

நானும் நாலு வார்த்தை நல்லா நீட்டி முழக்கி கருத்தை பதிந்து வைத்தேன். இதை facebookல போட்டா பத்து பதினைந்து லைக் வரும். இந்த வாட்சப்ல யார் படிச்சானு பாத்து பதில் எவனும் அனுப்பலைனா டென்ஷன் தான் வருது. 

'நான் எவ்ளோ முக்கியமான விஷயம் அனுப்பியிருக்கேன். படிச்சவன் கட்டை விரலை காட்ட வேணாம், சுண்டு விரலாவது போடலாம்ல. சே பொறுப்பில்லாத குரூப்ஸ்'.

பிபி எகிறிய சமையத்தில் நேரம் கண்ணில் பட, மணி 10:02. அடப்பாவி லேட் ஆயிடுச்சே.  எல்லாத்துக்கும் இந்த  யாஹூவும் வாட்ஸாப்பும் தான் காரணம்.

வழியில் கண்ணில் பட்ட ஆசாமியை பிடித்து, இந்த பில்டிங் 17 எங்கே இருக்குனு கேட்டா, அது கார்ல தான் போகணுங்கிறான். நேரா போயி, லெப்ட்ல போயி,  ரைட்ல போயி, யு டர்ன் அடிச்சு...  இவன்  வழி சொல்றானா, நம்மள வைச்சு செய்யிறனானு தெரியல. மொத நாளே கண்ணை கட்டுனா எப்படி?

திரும்ப ஒரு தடவ ஆரம்பத்துல இருந்து சொல்ல சொன்னா வேற மாடுலேஷன்ல ஆரம்பிச்சுட்டான். எனக்கு எதோ இங்கிலிஷ் தெரியாதுன்னு நினைச்சுட்டானா? 

ரொம்ப அவமான போச்சு. 'புரிஞ்சிருச்சு, புரிஞ்சிருச்சு... போங்க பாஸ்' என்பது போல் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.

"Hello you are going in a wrong way" - பெரிய கலங்கரை விளக்கம். வழி சொல்றாரு. இதை மட்டும் எவ்ளோ தெளிவா சொல்றான் பாரு பக்கி.

காது கேக்காதது போல் நடந்து எதோ ஒரு பக்கம் நுழைந்து வெளியே வந்துட்டேன்.

மறுபடியும் மொபைலை சரணடைந்தேன். கூகுள் மேப் போட்டா தெளிவா சொல்ல போறான் . இதை போயி எதுக்கு அவன்ட கேட்டேன். என் புத்திய....

(இதுக்கு மேல நீங்க படிக்க மாட்டீங்கனு தெரியும். மீதி நாளைக்கு)


வாய்ஸ் ரெகக்னிஷன் வசதி. "ஹே கூகிள்! டிரைவ் பில்டிங் 17..." என்ற  உடன் ஸ்க்ரீனில் ரெடி பாதை. செமல! கூகிள் இருக்க பயமேன்.

சரி எவ்ளோ நேரம் ஆகுதுன்னு செக் பண்ணிக்கலாமேனு மொபைல பாத்தா பகீரென்றது. 32 மணி 22 நிமிடம். 

"காலைல எந்திரிச்சோம். ரெடி ஆகிட்டு மெயில் பாத்தோம். அட்ரஸ் நோட் பண்ணிட்டு கார் எடுத்தோம். எல்லாம் சரியா தானே போச்சு. வழில எதாவது ஆக்சிடெண்ட்டோ? நம்ம மூளைல ஏதும் அடி பட்டுருச்சோ?" - என நடுவுல பக்கத்த காணோம் விஜய் சேதுபதி ரேஞ்சுக்கு என்னென்னவோ தோன்றியது.

மறுபடி கூக்ளிடம் சரணடைந்தேன். "ஹே கூகிள்! ப்ளீஸ் கால்  வேலைக்கு ரெஃபர் பண்ண புண்ணியவான்" என சொன்ன அடுத்த நிமிடம் 'டண்டணக்கா நக்கா நக்கா' என்றது அடுத்த முனையில்  

"ஹே dude, ஹொவ் திங்ஸ் ஆர் கோயிங்? புது கம்பெனி, புது டீம். எல்லாம் எப்படி இருக்கு?" என ஆஜர் ஆனான்.

"புது கம்பெனி சரி, பில்டிங் 17 எங்கடா இருக்கு?"

"பில்டிங் 17ஆ. அப்ப நீ இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்லையா? சரி இப்ப நீ எங்கே இருக்க சொல்லு."

"பில்டிங் 1ல ஐ டி கார்டு கலெக்ட் பண்ணிட்டு கிளம்ப போறேன்"

"ஓகே, குட். காரை எடுத்துக்க ..."

"கார் எடுக்குறது, கீ போடறது, ஸ்டார்ட் பண்றதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ மேல சொல்லு."

"கூல் dude. முத நாளே ஏன் இவ்ளோ டென்ஷன்? ஜஸ்ட் டேக் அ ரைட் இன் மேரி அவென்யூ ..."  என அவன் சொல்வதை கேட்க பொறுமையில்லை.

"டே கூகிள் போட்டா 33 ஹௌர்ஸ் சொல்றாண்டா"

"என்னது 33 ஹௌர்ஸா. நீ என்ன ஆப்ஷன் சூஸ் பண்ண?"

"என்ன ஆப்ஷனா....??? புரியலை"

"மேப்ல  என்ன டிரான்ஸ்போர்ட் மோட் சூஸ் பண்ண? காரா, பப்ளிக் ட்ரான்ஸ்போர்டா, வாக்கிங்கா, இல்லை கிரவ்லிங்கா?" என்றவன் சிரித்து கடுப்பேற்றினான்.

"சரி அங்கேயே வெயிட் பண்ணு. வில் பீ தேர் இன் 5 மினிட்ஸ்" என்றவனின் தயவால் எப்படியோ பில்டிங் 17 வந்தடைகையில் மணி 10:21.

"முதல் நாள் அமர்க்களம். நல்ல வந்தேன்டா ஆபிஸ்" என்றவாரே கார் கதவை திறக்க முயன்ற நேரம்  "சரி, உன் மொபைல் குடு. என்ன அட்ரஸ் போட்டேனு பாப்போம்" என்றவாரே மொபைலை வாங்கினான்.

கூகிள் மேப் தட்டி பார்த்தவனிடமிருந்து மறுபடி ஒரு பெரிய சிரிப்பு. "மச்சி, பில்டிங் நம்பர் போட்ட, கம்பெனி பேர் சரி , ஊர் பேரை ஏன்டா விட்டுட்டுட? நீ போட்ட அட்ரஸ் நம்ம ஆபீஸோட சிகாகோ அட்ரஸ்." என கெக்களித்தவன் "உன்னை நம்பி வாய்ஸ் ரெகக்னிஷன் போட்டது பத்தாதுன்னு ஆட்டோமேட்டிக் கார் வேற போடுறானுகளாம்... பாவம் மச்சி" என்றவனின் பேச்சை காதில் வாங்காதது மாதிரி பல் இளித்து விட்டு நழுவினேன்.

(மீதி நாளைக்கு)
ஐ டி கார்டை தேய்த்து கதவு திறந்தேன். ஈ காக்கா இல்லை.

மேனேஜர் என்ட்ரினா மாலை என்ன, வரவேற்பு என்னனு காலம் காலமா தமிழ் படம் பாத்து வளர்ந்தவன். என்னை இப்படி சோதிக்கலாமா?

இன்னைக்கு வரைக்கும் நம்ம ஊரு படத்துல ஸ்டைல மாத்தவே இல்லை. நாட்டாமை செம்பு மாதிரி இதெல்லாம் நம்ம அடையாளம். இவனுக என்னடானா... சே என்றிருந்தது.

மெயில் எடுத்து ஒரு முறை செக் செய்து கொண்டேன். மெயில்ல கீழே இருந்த மொபைல் நம்பருக்கு கால் பண்ண எதிரே வந்து நின்றார் Mr.P.

"Welcome Mr..." என் முழுப் பெயரையும் சொல்ல முயன்று தட்டு தடுமாறினார். 

என் பேருக்கே இவ்ளோ டெரர்ரர் ஆனா எப்படி? நம்ம ஊரு ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்டனுகளெல்லாம் தெரியாது போல. 

"யூ கேன் கால் மீ Mr. A"  என சொல்லவும் முழு பல்லையும் வெளிக் காட்டியவருக்கு வயசு 30க்குள்ள தான் இருக்கணும்.

"Let me introduce the team" என்றவாறே உடன் அழைத்து போனார். முதல்ல ஒரு நாலு பேரு தான் இருந்தாங்க. அறிமுகமெல்லாம் நல்ல தான் இருந்துச்சு. ஆளாளுக்கு கைகுடுக்குறேனு கிளம்புனப்ப தான் மேனேஜர்னா எவ்ளோ கொலை வெறில இருக்கானுகன்னு தெரிஞ்சது.

அதல ஒரு வளந்து கெட்டவன் ஒருத்தன் கை கொடுக்குறேன்ற பேர்ல புத்தூர் கட்டுக்கு ஆரம்ப வேலை பாத்தது பத்தாதுன்னு, முதுகுல தட்டுறேன்னு டெர்ரர் பண்ணிட்டான். 

நம்ம ஊரு ஆளுங்க வெளிநாடு வந்தாலும் பழக்கத்த மாத்திக்கிறது இல்லை. இதே இடத்துல எனக்கு பதிலா இந்த ஊருக்காரன் இருந்தா இப்படி நடந்திருப்பானா? சரி விடுங்க பாஸ், நம்ம ஊருக்காரான நம்மளே வீட்டுக் கொடுத்தா எப்படி?!

இவ்ளோ கலவரத்துக்கு இடைலயும் தான் உண்டு தன் வேலை உண்டுன்னு ஒரு நண்டு மொபைலை நோண்டிட்டு இருந்தான். என்னடா நண்டுனு மரியாதை இல்லாமனு யோசிக்கிறீங்களா? அவன் ஒரு அப்பரன்டீஸ்.

அப்படி என்னதான்டா பண்ணிட்டு இருக்கானு எட்டி பாத்தா, 'இங்கே ஒரு பீஸ் மாட்டிக்கிச்சு. வந்து பாக்குறீங்களா,  இல்லை ஆட்டோ பிடிச்சு பார்சல் பண்ணவானு' எதோ ஒரு குரூப் கிட்ட discuss பண்ணிக்கிட்டு இருக்கான். 

"என்னடா இது சின்னப்பிள்ளைத் தனமா இருக்கு ராஸ்கல்???!!!".

அடுத்த நிமிஷம், ஜே ஜே னு ஒரு கும்பல். இத்தனை பேரும் எனக்கு ரிப்போர்ட் பண்ணுவானுகளானு நினைச்சப்பவே பாதி மயக்கத்துக்கு போயிட்டேன். 

                                                                                அதுக்கு மேல நடந்த கூத்த நாளைக்கு சொல்றேன்.

எதோ அவனுகளை காப்பாத்த வந்த ஆபத்பாண்டவன் ரேஞ்சுக்கு வார்த்தையென்ன மரியாதையென்னனு  தூள்கிளப்பீட்டாங்க. டே போதும்டா, உள்ள என்னவோ பண்ணுது.

பேசி பேசி டயர்டு ஆகி சாப்பிட கிளம்பிட்டோம். மணி 12. 1 மணி சாப்பாடெல்லாம் இந்தியாவில் தான். இங்கே 12 மணி அடிச்சா டான்னு சாப்பிட கிளம்பிடுவானுக.

அமெரிக்கன், இத்தாலியன், மெக்ஸிகன், எத்தியோப்பியன், இந்தியன் என ஒவ்வொரு கவுண்டரிலும் மெனு பார்த்து பார்த்து டயர்ட் ஆகி ஒரு வழியாய்  மெடிட்ரேனியனில்  தஞ்சமடைந்தேன். மத்த கவுண்ட்ரெல்லாம் நாளைக்கு பாத்துக்கலாம். ஃபலாஃபல் - நம்ம ஊரு பருப்பு வடை மாதிரி 10 போட்டு கூட சாலட் டைப்ல நிறைய அயிட்டம் சேர்த்து. அது ஒரு டிஃபரென்ட் டேஸ்ட். மாசம் ஒரு தடவை இந்த மெனு இல்லைனா எதோ மிஸ் பண்ற மாதிரி இருக்கும். நாலஞ்சு பெப்பர் (இது மிளகு இல்லை பச்சை மிளகாய் டைப்) எடுத்துகிட்டேன். அதை கடிச்சுக்கிட்டு சாப்பிடற சுவையோ சுவை.

"இந்தியன் ட்ரை பண்ணலை?" எனக் கேட்டவனிடம் ஒரு சின்ன புன்னகை. 

'பிறந்ததுல இருந்து அதைத் தானே சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன். இப்பவும் வீட்டுல டெய்லி இந்தியன் தான். வெளில சாப்பிடும் போதாவது வித்தியாசமா இருக்கணும்.'

நாலைஞ்சு டேபிளை இழுத்து போட்டு எல்லாரும் ஒரு வழியா செட்டில் ஆனோம். மூக்கைத் துளைக்கிற ஃபலாஃபல் சுவைக்கு நாக்கு தாளம் போட்டது. 

நம்ம ஊரு இட்லி பத்தி, தோசை பத்தி யாரோ கேட்டாங்க. என்ன பதில் சொல்ல. என் கவனம் எல்லாம் முழுதும் வடை ப்ளஸ் ஹம்மஸ்ல தான்.  எனக்கு கொஞ்ச நேரம் வேற எந்த அவயமும் வேலை செய்யலை. நாக்கு முக்க நாக்கு முக்க ...

பேஸ்கெட் பால் மேட்ச் பத்தி பெரிய டிஸ்கஷன். கோல்டன் ஸ்டேட் வாரியர் டீம்ல ஸ்டெப்கரி பேச்சு தான். அடுத்த எலக்ஷன்ல நின்னா கூட கண்டிப்பா வின் பண்ணிடுவான். நம்ம ஊரு ரஜினி ரேஞ்சுக்கு பாப்புலர்.

சாப்பாடு முடிஞ்சு ஒரு walk. சாப்பாட்டுக்கப்புறம் குட்டி தூக்கம் போடற சுகம் எல்லாம் கொஞ்ச நாள் தான். அது நல்லதும் இல்லைனு இந்த ஊர் டாக்டர்ஸ் சொல்ராங்க.

ஊருக் கதை, உலகக் கதை, சில சமயம் பிரபஞ்ச கதையும் தான். ஆனா கண்டிப்பா சினிமா காரங்க கதை கிடையாது. 

ம். அப்படி கூட சொல்ல முடியாது.  Netflix series பத்தி கண்டிப்பா பேச்சு இருக்கும். ரெண்டு நிமிசத்துல சொல்ற கதையை பத்து பதினஞ்சு எபிசொட், ஒவ்வொரு எபிசோட்லயும் பத்து பதினைச்சு கதை. சான்ஸே இல்லை. நெட்பிலிக்ஸ்ங்கிறத தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணா நீட்டும் பிளிக்ஸ்னு வைக்கலாம். 

Mr. Monk னு ஒரு சீரிஸ் வெறித்தனமா பாத்தோம். இப்ப நிறைய Block Mirror, Money Heist, Stranger things, Breaking bad னு அது ஒரு பெரிய லிஸ்ட். இந்த மாதிரி சீரிஸ் எல்லாம் இல்லைனா இந்த ஊருக்காரனுக முழு பைத்தியமாயிருவானுக. இப்பவே பாதி பைத்தியமா தான் சுத்துறானுக. 

மாசத்துக்கு எட்டு விசேஷம், பத்து கல்யாணம், ரெண்டு காது குத்துன்னு சுத்திட்டு திரிஞ்சவனுக நம்மல்லாம். இங்க வந்தா ஆபீசு விட்டா வீடு, வீடு விட்டா ஷாப்பிங், அதை விட்டா வீட்ல ஆபிஸ். இந்த கொடுமையை இதுக்கு மேல கேக்காதீங்க.

அப்பப்ப நண்பர்களை பாக்குறப்ப தான் கொஞ்சம் சார்ஜ் ஏத்திகிட்ட மாதிரி இருக்கும். 

நடந்துக்கிட்டே பேசி ஆபீசுக்கு மறுபடி வந்தாச்சு. முத நாள் பெருசா வேற எதுவும் வேலை இல்லை. லேப்டாப் கலெக்ட் பண்ணிட்டு, டீம் மெம்பர்ஸ் எல்லார் ட்டையும் மொக்கை போட்டுட்டு வீட்டுக்கு வந்தாச்சு. 
                                                                                               நாளைக்கு தான் ஆரம்பிக்குது நம்ம கதையே 

காலைல 9 மணிக்கெல்லாம் stand up.ஒவ்வொருத்தரும் short அண்ட் ஸ்வீட்டா கதையடிக்கணும். நான் நேத்து என்ன பண்ணேன்னா அப்படினு ஆரம்பிப்பானுக அப்புறம் இன்னைக்கு நான் என்ன பண்ணப் போறேன்னு சொல்வானுக. 

ஒன்னுமே புரியாது நமக்கு. தெரிஞ்ச மாதிரி தலையாட்டனும். இடைல எதாவது ஒரு வார்த்தையை புடிச்சுகிட்டு ரெண்டு கேள்வி கேக்கணும். அப்படி ஏதுமே கேக்க தெரியலைனா என்ன சொன்னீங்கன்னு இன்னொரு தடவ கேட்கனும். 

என்னமோ அந்த ஒரு விஷயம் மட்டும் தான் புரியலைங்கிற மாதிரி. ரொம்ப முக்கியம். ரெண்டாவது தடவை சொல்லும் போது புரிஞ்ச மாதிரி ரியாக்ட் பண்ணனும். தப்பி தவறி சரியான ரியாக்சன் காட்டலைனா அப்புறம் நம்ம தான் ஆடு. இது தேவையா? 

இப்ப தானே ரெண்டாவது நாளு அதனாலன்னு நினைச்சுராதீங்க.  போக போக புரிய ஆரம்பிக்காது, பழகிடும். அவ்ளோ தான். stand upல நான் என்ன கமிட் பண்ணீங்கறத குறிச்சு வைச்சுகிட்டேன். சீட்டுக்கு போனதும் இதை யாருக்கிட்டு கொடுத்து வேலைய முடிக்கிறதுனு ரெண்டு பேரை பிடிச்சேன். மீட்டிங்னு இன்வைட் அனுப்பி ரெண்டு மணி நேரம் மொக்கை போட்டேன். யப்பா சாமி முடியலைன்னா நானே பண்ணித்தரேனு வேலைய வாங்கிட்டு போயிட்டான். 

ரொம்ப திறமைசாலினு நினைச்சிராதீங்க. அடுத்தவன்ட்ட வேலை வாங்குறது இருக்கே அது குடுத்த கடனை வாங்கிறதை விட கஷ்டம். 

அப்ப நீ குடுத்த கடனெல்லாம் வாங்குற அதி திறமைசாலியானு கேட்டுராதீங்க. ஊரு விட்டு ஊரு வந்ததுக்கப்புறமும் தொடர்ந்து நாமம் சாத்திக்கிட்டு தான் இருக்கானுக. அதை பத்தி எல்லாம் எழுதுனா நம்ம டெர்ரர் வடிவேல் சாருக்கு டஃப் குடுத்த மாதிரி இருக்கும். நம்ம கதைக்கு வருவோம். 

12 மணிக்கு வந்து வேலை முடிச்சத தரேன்னு சொன்னானுக. வரல. லஞ்சுக்கும் போயிட்டு வந்தாச்சு. குட்டி நடை முடிச்சு, அரை மணி நேரம் சேரை தேச்சு, ஒரு மெயில் தட்டி. ம்ஹும் ரெண்டு பேரும் எட்டி கூட பாக்கலை. 

"any அப்டேட்?" அப்படினு மெசேஜ் தட்டிட்டு நேரா அவனுக டேபிளுக்கே போயிட்டேன். எல்லாம் பண்ணியாச்சு ஒரே ஒரு சின்ன டவுட்டுனு ஆரம்பிச்சானுக. 

'ஓ நைஸ், sure என்ன டவுட்' னு கேட்டேன். நான் காலைல சொன்னதையே திரும்ப அப்படியே நமக்கு திருப்புறானுக. மறுபடியும் ஆரம்பத்துல இருந்து ஆரம்பிக்கலாமங்கிறானுக. அடப்பாவிகளா அப்பா நீங்க இன்னும் ஒண்ணுமே பண்ணலையாடா.

நாளைக்கு stand up ல இதை தான் impediments அப்படினு மறுபடியும் அரை மணி நேரம் பேசுவனுக. எதுவும் பேசலை நேரா என் டேபிளுக்கு திரும்பி வந்தேன். லைட்டா தலை வலிக்கிற மாதிரி இருந்துச்சு. ஒரு டீ எடுத்துக்கலாம்னு தோணுச்சு. 

திங்கள், 12 மார்ச், 2018

தெறித்தோடும் புரவிகள்...

எதிலும் நிலைக்காது,
ஒருமுகமாய் குவியாது
ஓடும் வழியெல்லாம்
சிதற விட்ட முயற்சிகளை

இழுத்து ஒருப்படுத்தி
நேர் செலுத்த
பரந்தாமன் பாதம்
வேண்டாம்.

அவன் வேதம்
உள்நிறுத்தி உணர வேண்டும்

பொய்த்தாள்

ஒரு கைல பேப்பர், ஒரு டீ (இல்லை காபி). இது பெரிய பாரம்பரியம். உலகத்துல எந்த பக்கம் போனாலும் இந்த ஸ்டைல் மட்டும் ஒரே மாதிரி தான்.

ஆனா இன்னைக்கு எப்பவும் போல இல்லை. நானும் எல்லா பேப்பரையும் புரட்டி பாத்துட்டேன். சொல்லி வைச்ச மாதிரி எல்லாரும் ஒரே மாதிரி தான். பிசிரு தட்டாம ஒரே மாதிரி எழுதி இருக்காங்க. 

எனக்கு நல்லா தெரியும். இது உண்மை இல்லை. வீட்டை விட்டு வெளிய வந்து  கத்தனும் போல இருந்தது. 

எவ்ளோ நேர்மையான ஆளு? அவரை போயி. சே!

இந்த நியூஸ் படிச்சிட்டு எவனெவன் என்ன பாடு படுத்துறானோ அந்த நல்ல மனுசனை? 

அப்ப இதுக்கு முன்னாடி நான் படிச்சு பகிர்ந்துகிட்ட எல்லா செய்தியும் இதே மாதிரி பெரிய புரட்டு தானா? 

சுவைக்காத டீ. பார்க்க சகிக்காத செய்தித்தாளோடு இப்படியா விடிய வேண்டும் இன்னைக்கு பொழுது?

நாளைக்கு வரலாறு பரிட்சைக்கு படிச்சுக்கிட்டிருக்கிற பையனின் தலை கோதி நகர்ந்தேன். 

இதே மாதிரி எத்தனை பொய் விதைக்கப்பட்டிருக்கிறதோ இந்த வரலாற்று புத்தகத்தில்!

ஞாயிறு, 11 மார்ச், 2018

குறுங்கதை

ஆங்காங்கே தீப்பட்ட மாதிரி  எரிச்சல். ரொம்ப கேர்லெஸ்ஸா   இருந்துட்டீங்கனு டாக்டர் சொன்னப்ப தலை சுத்திருச்சு. என்னன்னவோ மாத்திரை, ரெண்டு தடவை ஆபரேஷன் வேற. எவ்ளோ தான் செலவு பண்றது?
ஆனா பணத்த வச்சு என்ன பண்ண? என் சொத்தே உடம்பு தானே? இப்ப வந்த அறிவு அப்ப எங்க போச்சு? லைட்டா தெரிஞ்சப்பவே சுதாரிச்சிருக்கணும். விட்டுட்டேன்.

வெள்ள வேட்டி பளபளப்பில் கடந்து போன மாண்புமிகு டேஷ்க்கு இங்கே என்ன வேலை? இவன் எதோ பெரிய அறிவாளி மாதிரி பின்னால ரெண்டு பெரிய டாக்டர், கூடவே மாமா கணேஷ் (தொழில் ரீதியா வந்த பெயர்), குவாட்டர் சரசு அப்புறம் எவன் எவனோ. என்னமா ஜொலிக்கிறானுக!
மனசு பூரா பழைய கதை. அட பாவிகளா, விட்டுட்டோமோ!

 உடம்பு ரணம் மீறி எங்கெங்கோ வலித்தது.

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

பக்குவம்


சண்முகி அம்மாள் சமையல் பற்றி சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சுவை. அதுவும் தான் சமைத்த முறை பற்றியும், அதன் பின்னணி பற்றியும் அவங்க சொல்றதை  கேட்குறதுலயே பாதி  வயிறும் மனசும் நிரம்பிடும். சமையல் அனுபவத்தில் அம்மாவை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. ஒற்றை ஆளாக காய் வாங்குவதிலிருந்து பாத்திரம் அடுக்குவது வரைக்கும் ஆல் ரவுண்டர். கொஞ்ச நஞ்சமா என்ன? ஆறாவது வயதிலேயே கரண்டி தூக்கியவராயிற்றே.

நேற்று வரை தானுண்டு தன் வேலை உண்டென்று தான் இருந்தார்.  இதே போல் இதற்கு முன் எத்தனையோ முறை நடந்திருக்கிறது. திருவிழாவுக்கு வந்த சொந்தக்காரர்கள் ஒரே அடியாய் டேரா போட்டு அடித்த கூத்தெல்லாம் இந்த ஊருக்கே தெரியும். சண்முகி அம்மாளை அன்றைக்கு படுத்தின பாடெல்லாம். கேட்டா காது  வழியே இரத்தம் வந்திரும். கொஞ்சம் கூட ஒய்வு கிடைக்காமல் நாள் பூராவும் சமைத்து போட்டு, வேலை பாத்து இரவு தூங்கபோகையில் மணி இரண்டுக்கு மேலாகி விடும். அனால் அதெல்லாம் அவர் பெரிதாய் எடுத்துக் கொண்டதே இல்லை.

இந்த முறை வந்த பங்காளி கூட்டத்தின் சலம்பல் கொஞ்சம் ஓவராக தான்  இருந்தது. காரியத்துக்கு வந்தோமா, போனமான்னு இல்லாம வீட்டையே அலங்கோலம் படுத்திய பாடு இருக்குதே? அப்பா சாமி.

சரி, அதை விடுங்க. திடிர்னு சண்முகி அம்மாளுக்கு எங்கே இருந்து இவ்ளோ கோபம் வந்தது? வீட்டு பொறுப்பை என் கிட்ட கொடு இப்பவேனு இவ்ளோ பிடிவாதமா இருக்காங்க? அவனுகளை ஓட விடறேனா இல்லையானு பாருங்கறாங்க. எதுவும் புரியலை.

அவங்க கரண்டி பக்குவத்துல வாய் வழியே மூளைக்கு ஏறுன ருசி நம்பி குடுக்கலாம்ங்குது. அவங்களுக்கு தெரியாத பக்குவமாங்குது?  வயித்துப் பாட்டுக்குனு தலையாட்டுனது போதும்பா, கொஞ்சம் பாத்து பக்குவமா யோசினு சொல்லறாரு பக்கத்து வீட்டு மலையாள மாமா.  இன்னும் ஒரு முடிவுக்கும் வரலை மாமா! யோசிக்கிறேன்னு சொல்லிருக்கேன்.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

மறுபடி மறுபடி
திரைமுன் விரியும்
மறு ஒளிபரப்புகளில்
சேர்த்தல், மறைத்தல்,
மிகைப்படுத்தல் தூவி தூவி
ஒளிந்துகிடக்கும் உண்மை
எனக்கு மட்டுமேனும்
தெரியும் தூரத்தை
கடந்தாயிற்று!

அனுபவங்களோடு
அறிவு ஜீவிதத்தையும் கலந்து
ஒரு மசாலா கதை
தேற்ற தெரிந்த
தருணத்தில் தொலைத்தேன்
ஒரு வரலாறு
படைக்கிற யோக்கியத்தை!

சிரத்தை மிகு
உளியோடு
கை கோர்த்து,
நொடியென பறக்கும்
மணிகளை கடந்த பின்
கண்ணெல்லாம்
நிறையுமென் சிலையே!

ஊரார் கை கூப்பவோ
கை தட்டவோ
விழையவில்லை - யான்
உனை
நினைத்திட்ட கணத்தினில்
சூலெறி
செதுக்கப்பட்டேன் உன்னால்!


செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

இசை வெளி

ஆண் பாலா? பெண் பாலா?
ஆண்டவன் பாலா?
தெரியாது.

மழலையின் பாலும்
விளையாடும்
மெல்லிசையே - நீ
ஆண் பாலா? பெண் பாலா?
ஆண்டவன் பாலா?
தெரியாது!

நாசி வழி
உள் நுழைந்து 
நரம்பெல்லாம் நடமாடும்
காற்று உனை
பிறந்திட்ட கணம் தொட்டே
பிடித்திட்டேன்.

வெற்று வெளிகளில்
எப்பொருளும்
கனப்பதில்லையாம்
விஞ்ஞானம் சொல்லிக்கொடுத்தது!

பிடில் வழி,
யாழ் வழி,
குழல் வழி,
இனிக்கும் குரல் வழி
நடனமாடும் காற்றே!

நீ இல்லா 
வெற்று வெளிகளில்
எப்பொருளும்
கனப்பதில்லையாம்!

செவி வழி உன்னை
சுவாசிக்கிற தருணங்களில்
வாழ்வின் இனிமை
எடை ஏறி போக - புரிகிறது
நீயின்றி எப்படி எடையேறும்
பொருட்கள்?

புவியீர்ப்பு விசைக்கே
நீயன்றோ  விசை!

ஆண்பாலா? பெண் பாலா?
ஆண்டவன் பாலா?
தெரிய வேண்டாம்
உன் பால் சரணடைந்தே
இனிக்கிறது 
மூச்சு விடும் நொடியெல்லாம்!