திங்கள், 13 ஆகஸ்ட், 2012

மிதப்பு


நிரம்பி வழிகிற 
மது கிண்ணங்களின்
உள்ளமர்ந்து, 
மிதந்து, 
கண்மூடி,
கைகள் படர்ந்து,
கால் பாதம் 
பியானோ இசைக்கிற வாகில் 
காற்தடம் நகர்த்தி, 
நீந்தி..
கரையேற மனமின்றி 
நீட்டி 
நெடுதூரம் பயணித்த
நாட்கள் 
பதிந்து வைத்திருந்த 
ஒலி ஒளி நாடா
தேயத் தேய அழுகிறது

கொட்டி தெரிக்கிற
சுவையோடு 
அகண்டு ஓடும் 
ஆற்றங்கரை 
அருகாமையற்று, 
ஏரி ஓரம் 
காத்திருப்பதை 
அறியாமையோ 
சோம்பேறித் தனமோ 
இல்லையென 
விதி மேல் பழி சொல்லி 
வீணே கிடக்கிறது
ஓடம்!

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

அம்மா

பிள்ளைக்கு என்னவெல்லாம் 
பிடிக்குமென பட்டியல் நீட்டி,
அதிகாலைக்கும் அதிகாலை எழுந்து
வகை வகை 
பண்டங்கள் அடுக்கி 
காத்திருக்கிறவளிடம்...
கைமேல் பலனாய் 
'வயிறு சரியில்லைம்மா'.

கேட்டதும் பதறுகிறவளிடம்
எரிந்து விழுந்து, 
விலகி நடக்கிறவனுக்கு
சுருட்டி எடுக்கிறது - 
நேற்றிட்ட கும்மாளமும்
அளவில்லா மதுபானமும்!

வியாழன், 9 ஆகஸ்ட், 2012


கிறுக்கலாய் வழிகிற 
பேனா மை.

உன் புருவம் வளைத்து,
மென் புன்னகை தெரிய 
நீ படிக்க படிக்க 
கொஞ்சம் கொஞ்சமாய் 
அழகேரும்!

இன்றோ
தூரத்தில் தொலைந்த நாட்களில்
கணினி தட்டச்சில் 
உலகம் பரப்பலாம்
எனினும் நீயின்றி 
அழகேயில்லை!


இழுத்து மூடப்பட்ட 
தொழிற்சாலை.

'இனி 
எந்த சத்தமும் 
தூக்கம் கலைக்காது' 
நிம்மதியாய் வந்து குடியேறும்
தொழிற்சாலை வளாகத்து மரத்தில் 
பல ஊர்ப் பறவைகள்!

'கா கா கா' 
தினம் கூவி கூவி 
சோறு படைக்கும் 
குட்டி பெண் 
விமலா வீட்டில் மட்டும் 
இனி அடுப்பும் எரியாது 
படிப்பும் ஏறாது!


அவசரம்


உளி வழி 
புள்ளியில் பயணிக்கிற
சிற்பி!

பொறுமையிழந்து 
நகர்ந்து போய்,

படைத்து முடித்தவைகள் 
பார்த்து, வியந்து,
பாராட்ட  
திரும்ப வருகையில்...

பழைய புள்ளி முடித்து 
அடுத்த புள்ளிக்கு
பொறுமையாய் 
நகர்ந்திருக்கிறது உளி.

அப்பப்பா முடியாதப்பா
வேலையில்லா மனிதனா நான்?
விரைந்து நகர்ந்த போது கூட 
உணரவில்லையே...
உடைத்து வீணாக்கிய 
வைர கற்கள் பற்றி!
மூளைப் பகுதியெங்கும்
படர்ந்து நிறைந்திருக்கும்
நியுரான் மண்டலங்களில்
திரும்ப திரும்ப 
பரிமாறப் படுகிற
உன் பெயரும்,
உன்னோடான ஞாபகங்களும்
திகட்ட திகட்ட 
பரிமாறப் படுகையில்...

தசை நாண்களால் 
பின்னப்பட்ட இதயத்திலா,
இடது பக்க அரைக்கோள 
மூளையிலோ
எங்கிருக்கும் 
என்றுணரப்படாத 
மனசின் வழி - 
வலியும், பெருங்குரலெடுத்த 
வேதனையும்
பரவி விரைகிற 
சாலையில் 
நிதானித்து  நகர்கிறது 
வாழ்க்கை!