வியாழன், 9 அக்டோபர், 2008

குப்பை கூளங்கள்

பயன்பாட்டின் எச்சங்கள்
வழியெங்கும் -
பளீரென சுத்தமாயிருக்கிற
குப்பைத் தொட்டிக்கு
வெளியேயும், நடைபாதையெங்கும்!

புது முகங்களுக்கு மட்டும்
அறிமுகத்தில் எரிச்சலூட்டும்
கழிவுகள்!
பழகிய பின் யாரும்
முகம் சுளிப்பதேயில்லை.

நிலத்தடி நீரை
வீணே கடத்தி
யார்க்கும் உதவாது பண்ணும்
பாலீதின் குப்பைகள்.

பெருத்து, வீங்கி
மேடாகிப் போன
குப்பை மேடுகளிலிருந்து
காலராக்கள், மலேரியாகள்
இன்னும்
புது புது வியாதிகளை
பரப்பக் கிளம்பும்
கொசுக் கூட்டங்கள்.

ஒரு காலத்தில்
சுத்தமாய் இருந்ததாய்
யார் யாரோ பேசக் கேட்டதுண்டு.
சுத்தம் செய்ய
முனைப்புடன் எவரேனும்
துணிவதேயில்லை.

தெருக்கள், கிராமங்கள்,
நகரங்கள், மாநிலங்கள்,
தொகுதிகள், நாடு என
பயன்பாடின்றி
மினுக்கித் திரிகின்றன
குப்பைகள்.

செவ்வாய், 30 செப்டம்பர், 2008

தூரம் கடந்தவள்

சில நூறு
மைல்களுக்கு அப்பால்
நீயும் நானும்!

நாட்களை
நகர்த்துதல்
கொடியது தான்.
நொடிகளை நகர்த்துவதே
நெடியதாய் இருக்கிறது.

இரவுகளின் நீளத்தில்
பாதி
உன் நினைவுகளோடும்
கவிதைகளோடும்
கரைந்து போக,
கனவுகளோடு மீதி
நகர்த்த வேண்டியிருக்கிறது.

எத்தனை மைல்களுக்கு அப்பால்
இருந்தாலென்ன
எப்போதும் நீயே என்னை
ஆக்கிரமித்து இருக்கிறாய் -
நெருங்கியிருக்கையில்
நெருக்கத்தாலும்
பிரிந்திருக்கையில் பெரும்
காதலாலும்!

சலவைக்காரி

அது ஒரு
தொலைக்காட்சி விளம்பரம்.

ஒரு சோப்புக் கட்டி
குறுக்கே கடந்தவுடன்
பளிச்சென்றாகிறது
வெள்ளை சட்டை.

பார்த்தவுடன்
ஞாபகத்திற்கு வந்தது
நீ தானென்றாலும்
இதயம் அழுக்கு ஆக்கியதும்
நீ தானே!

மெழுகாகிறேன்

நேற்று வரை
உணர்ந்ததில்லை.
இன்று தான்
உணர்கிறேன்

நீ கொஞ்சம்
கூடுதல் அழகு
நேற்றை விட.

எங்கிருந்து
தரப்படுகிறது?
யாருமறியாது
எப்படி வந்தடைகிறது?
எதுவுமே புரியவில்லை.

ஒவ்வொரு நாளும்
புதுசு புதுசாய்
மெருகு ஏறுகிறாய்!

நானோ
மெழுகாகிறேன்!

ஆட்டுவிக்கிறாய்

கையசைவுகளுக் கெல்லாம்
கட்டுப்பாட்டு
வித்தைகள் நடந்தது.

அற்புத விளக்காய்
தேய்த்ததும் நடந்தது
விந்தைகள்.

'என்ன வேண்டும் கேள்'
எல்லாம் தந்தது
கம்ப்யூட்டர்.

என் ஆட்டுவிப்புக்கெல்லாம்
ஆட ஒரு ஆள்.
பெருமிதம் தன்னில்
திளைத்திருக்கையில்
நீ ஒரு பார்வை
பார்த்துவிட்டுப் போனாய்
அவ்வுளவு தான்!

அதிகாலை

மரங்களடர்ந்த
அதிகாலை.
பெருங்குரலெடுத்து
பேசிக்கொள்கின்றன
சிறிதும் பெரிதுமான
பறவைகள்!

உதறப்பட்டோ
மடித்து வைக்கப்பட்டோ
ஒதுக்கப்படுகின்றன
இரவு நேரத்து கனவுகள்!

இருளுக்கு பழகியிருந்த
கண்களை
அகல விரித்து
மெல்லிய வெளிச்சம்
ரசிக்கிற
புன் சிரிப்புகள்!

ஒரே மாதிரி விடிந்தாலும்
ஒவ்வொரு காலையும்
புத்தம் புதியது தான்!





சனி, 27 செப்டம்பர், 2008

பூக்கள்

பூங்காக்களில் என்றில்லை
நடந்து போகிற வழிகளிலும் கூட
எப்போதும் புன்னகையோடு.

ஒரு பூச்செண்டோ
இல்லை ஒரே ஒரு பூவோ
சொல்லமுடியாத வார்த்தை
இருக்க முடியுமா என்ன?

உன்னோடு
வெளியே போகிற நாட்களில்
நீ விரும்பி கேட்டு
வாங்கி கொள்கிற பூக்களில்
உனக்கு ஒரு சந்தோஷம்
ஒரு பூவே பூச்சூடி கொள்வதை
பார்ப்பதில் எனக்கோ பேரானந்தம்!