வியாழன், 27 அக்டோபர், 2016

அதிகாலை எழுவது
எத்தனை சிரமம் -
எல்லாம் மறக்கடிக்கும்
பட்டாசும், புதுத் துணியும்!!

இனிப்பு, காரம்,
பலகாரமென
வாசல் தோறும்
கோலம் -
ஊரே விழாக் கோலம்!!

நண்பருக்கு, உறவுகளுக்கு
வாழ்த்துச் சொல்ல
தேடித் தேடி
வாழ்த்து அட்டை
வாங்கிய காலமுண்டு!

அட்டை எதற்கு?
"Happy Diwali"
வெறும் ஒற்றை வார்த்தை
புன்முறுவல்கள்
இட்டு நிரப்பும்
எல்லோர் முகத்திலும்!!

இந்த வருடம்
கொண்டாடுவதில்
கொள்ளை இன்பம் தான்,
இது வரை
கொண்டாடிய நாட்களை
நினைக்கியிலே
பொங்கும் இன்பம் தான்!!

வரப்போகும் தீபாவளிக்கு
சேர்த்து வைக்க
நிறைவோடு நிகழட்டும் -
மகிழ்வோடு  கொண்டாட்டம்!!!

தீப ஒளி திருநாள்
வாழ்த்துக்கள்!!!

சனி, 23 ஜூலை, 2016

குருவி தலையில்
பனங்காய் -
கருத்து!

வெள்ளி, 22 ஜூலை, 2016

படபடக்கும் சிறகுகள்
மேலும் கீழுமாய்
கோலமிடும்.

உடன் நகரும் கார்னியா
பிதுங்கும் நுனியில்
மிக அருகாமையில்
சடக்கென கடந்து போகும் -
வண்ணத்துப்பூச்சி 
உள்ளெழுப்பும்
அதே உணர்வுகளைத் தான்
ஒவ்வொரு முறையும்
எழுப்பிவிட்டு போகின்றன
உன்னை பற்றியதான நினைவுகள்!!

வியாழன், 21 ஜூலை, 2016

ஆங்காங்கே அலைக்கழியும்
படகோரம்
சிறு மரத்துண்டு! 

திங்கள், 30 நவம்பர், 2015

அலட்சியம்


என்ன அவசரம்...?
படிக்கலாம்,
பரீட்சைக்கு இன்னும்
நாள் இருக்கே!


முந்தைய நாள் வரை
தொடரும் அலட்சியம்!


புத்தகமும் கையுமாய்
முடிந்த இரவோடும்
எரிகிற விழியோடும்
தேர்வறை வாசம்!


எல்லாம் மறந்தது போல்
இருக்கும்.

தேர்வறை சீட்டை
ஞாபகப் படுத்திய
அம்மா மாதிரி
யாரேனும் உடன் தேவை
தேர்வறையிலும்!

நினைவில் நின்றதும்
இட்டுக் கட்டியதுமாய்
முடித்துக் கட்டி
வெளியேறுகையில்
உடன் தொடரும் -
நமக்கு நாமே
சமாதானம்!

"அடுத்த முறை
இதே தவறு
நிகழக்கூடாது"

இப்போதும்
தொடர்ந்துகொண்டேதானிருக்கிறது -
எல்லா நிலைகளிலும்,
எல்லா இடங்களிலும்!!!

புதன், 25 நவம்பர், 2015

அளவுகோல்

பள்ளிநாட்கள்
முதல் அறிமுகம் !

கணக்கு வகுப்புகளில்
மட்டுமல்லாது
எல்லா நிலைகளிலும்
உபயோகப்படுத்தப் பட்டன

சம்பந்தமே இல்லாத
வேறு வேறு அளவுகோலோடு
நட்பு வட்டாரமும்,
பெற்ற வட்டாரமும்.

தேருமோ, தேராதோ??
வினாக்களுடனே
சுற்று வட்டாரமும்!

எல்லா அளவுகோல்களையும்
கடந்து வந்த நானும்
கையோடு வைத்திருந்தேன் -
என்னால் முடிந்த அளவுகோல்!

பற்பல சோதனைக்கப்பாலும்
முடிவுக்கே  வர முடியவில்லை -
சரியான அளவுகோல் தானா இது?

சரியென குறிக்கிற
புள்ளிகளில் இருந்து
சிறிதோ பெரிதோ
நகர்ந்தே முடிகிறது -
கோணங்கள் மாற்றி
பார்க்கிற ஒவ்வொரு
பார்வையுலும்!

முயற்சிகள் இன்னும்
தொடர்ந்தாலும் ...

தூர எறிந்துவிட்டு
நகர்கிற நிமிடங்களில் தான்
உணர முடிகிறது ...
வாழ்வின் மகத்துவம்!

புதன், 19 செப்டம்பர், 2012

சிறு தேங்காய் துண்டு,
பொறிக்குள் மாட்டிக்கொண்ட எலி
சுவைக்குமா?