கடன் தந்தார் நெஞ்சம் போல் கலங்கவே கூடியிருந்தது கூட்டம். எதுக்கு இப்ப இவ்ளோ கவலை? அதுவும் எல்லாருக்கும்?
நாட்டு மேல கடன் கூடிகிட்டே போகுதே. நம்ம சந்ததிகள் கடனாளியா வாழணுமோங்கிற கவலையா? வாய்ப்பில்லையே ராஜா.
பெட்ரோல் விலை பத்தி..? கண்டிப்பா இருக்கவே இருக்காது. வேற இன்ன பிற கவலைகளை பட்டியல் போட்டா கூட உக்காந்து பேசி அலசி ஆராய்ஞ்சு மெகா சீரியல் பாக்குற அளவுக்கு சந்தோசப்பட்டிருப்போமே.
ஒருவேளை தலைவர் படம் ரிலீஸ் ஆகி ஒரு மாசம் ஆச்சே, அடுத்த படம் பத்தி தலைவர் எப்ப சொல்வாருங்கிற கவலையா இருக்குமோ?
கழுவி கழுவி ஊற்றி கொண்டிருந்த டீக்கடைக்காரர் கம்பீரமாக பாய்லரை தட்டிக் கொண்டிருந்தார். இந்த ஒரு பிசினஸ் தான் பெரிய முதலைங்க வாய்ல இருந்து தப்பிச்சிருக்குங்கிற தெனாவட்டா இருக்கலாம். அவராவது சந்தோசமா இருக்காரே. சந்தோசம் தான்.
கையில கத்தி எடுத்தவன் கத்தக்கூட முடியாம தான் சாவன்ங்கிறது நம்ம சலூன் கடை ரமேஷ் விசயத்துல சரியாத்தான் போச்சாம். உழைக்கிறவன் உயர்வான்கிறது தப்பான பழமொழியாம். டீக்கடை காரருக்கு அறிவுரை சொல்லும் நம்ம ரியல் எஸ்டேட் ரியாஸ் எதுக்குமே கவலை பட்டதே இல்லை தான்.
கொரோனா சாப்பாட்டுக்கு கூட நாதியல்லாம ஊர் தாண்டி, ஸ்டேட் தாண்டி ஓட விட்டப்பகூட பணத்தை திங்க முடியும்னு நிருபிச்சவன் ரியாஸ். அதுவும் தான்தோன்றி தனமா தின்னாகூட பணம் பன்னி மாதிரி குட்டி போடும்னும் புரிய வைச்சவன்.
காசு சேக்குறது ஒரு கலை. அத கத்துக்கிட்டவன் சேத்துட்டுக்கிட்டே போறான். மத்தவனெல்லாம் செலவழிச்சே அழிஞ்சு போறான்னு பிள்ளைக்கு தலைல குட்டி சொல்லிக்கிட்டு இருக்குற துரைக்கு அந்த கலை வசப்படாமலே போயிருந்தது. ஆனாலும் பிள்ளைக்கு அட்வைஸ் பண்றத டீக்கடை முன்னாடி கூட நிப்பாட்டல.
திடிர்னு டீக்கடை முன்னாடி இருந்த கூட்டத்துக்கு நடுவுல எவனோ வானத்துக்கு எகிறி குதிக்க பக்கத்துல இருக்கவன் அம்மானு அலற. என்னடா நடக்குது?
சந்தோஷத்துல தலை கால் புரியாது சரி. கையும், கையில இருக்குற போனுமா தெரியாது? போன் இடிச்சு பல்லு பேந்து அடி பட்டவன் அலர்ற சத்தம் கூட்டத்தோட ஹேங்கிற சத்தத்துல வெளிய கேக்கலை.
ரோஹித் அடிச்ச சிக்சர்ல லட்ச ரூபாய் போனும் காலி, அடிபட்டவன் ரெண்டு பல்லும் காலி.
லாக் டவுன்ல பட்ட கஷ்டமெல்லாம் பறந்து போச்சு அந்த கூட்டத்துக்கு. பல்லுபோனவன், செல்லு போனவன் தவிர.
டீமோட வெற்றில நம்ம நாடு பட்ட கஷ்டமெல்லாம் காணாம போயிடும்னு நம்ம தலைவர் ________ சொன்னது உண்மை தான் போல.
தேசமே பெரிசுன்னு நினைக்கற கூட்டம் இல்லையா! கண்ணெல்லாம் கலங்கி போனேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக