புதன், 23 மார்ச், 2011

புத்தம் புதிது

புது கற்பனை தானா?

இதற்கு முன் 
யாரேனும் சொல்லியிருக்க கூடுமோ?

இருந்து விட்டு போகட்டுமே!

உன்னைப்பற்றியதாய் 
இருப்பதாகையால் 
புத்தம் புதிது தான்!
ஒவ்வொரு கற்பனையும்!
தினமும் நடைபயிற்சி 
மிக நல்லது - நீ 
நடந்து போகிற சாலைவழி!

ஒரே கவிதை

தினமும் 
ஒரு கவிதை 
நீ ரசிக்க!

தினம் தினம்
ஒரே கவிதை 
நான் திளைக்க!

திங்கள், 21 மார்ச், 2011

ஒரு கவிதை எழுத வேண்டும்

எப்போதோ எழுதிய 
கவிதைகளையெல்லாம் 
எடுத்து பார்க்கிறேன்.
விழி விரிக்கிறேன்!!

நான்
நானே தானா
எழுதியிருக்கிறேன்?

எதை எதையோ கிறுக்கி
இப்போதோ வீணடிக்கிறேன்.

ஒன்றும் உரு பெறாது 
அரை குறையாய் விந்தி நடக்கிறது
ஒவ்வொன்றும்!

எப்போது வருவாய்?
ஒரு கவிதை எழுத வேண்டும்! 
மூச்சடைக்கிற புகையிடையில்... 
முடிந்த வேலைகளை காட்டிலும் 
முடிக்க வேண்டிய வேலைகள் 
மூச்சு முட்டும்.

காதடைக்கிற இரைச்சல்,
என்ன கத்தினாலும் யாருக்கும் கேட்காது 
என்றாலும் யார் யாரையோ திட்டி விரைகிற
பயணங்கள்!

சிவப்பு விளக்கு விழுவதற்கு
சில நொடி முன்னதாக
கடந்து விடவே 
துடி துடிக்கும்! 


எப்படியோ விரட்டி
எதை எதையோ துரத்தி 
விடை தெரியாது நகர்கிற 
ஒவ்வொரு நாட்களுக்கும் 
உயிர் தருகிறாய் 
உன் 
பரிவான வார்த்தைகளால்! 

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

இரும்பு கோடாரி

தங்க கோடாரி
வெள்ளி கோடாரி
இரும்பு கோடாரி
எது உனது எடுத்துகொள் என்றது
தேவதை!

என்ன இது
எதுவுமே என்னதில்லையே?
எதற்காக தேவதையின் இந்த கேள்வி?

குழப்பம் தீராது
"இரும்பு" என்றேன்.

ஒரு புன்னகை
வெளிப்படுத்தி
"நிஜமாய் தான் சொல்கிறாயா?"
என்றது தேவதை.

மூன்றும் கிடைக்க வேண்டாம்
இரும்பாவது கிடைக்கட்டுமே
எனக்கானதாய் இல்லது போனாலும்
திரும்பவும் திருத்தமாய்
கேட்கிறது தேவதை
நிஜமாய் தான் கேட்கிறாயா?

திருந்தவில்லை இந்த முறையும்...
திரும்பவும் அதே பதில்.

எடுத்துவிட்டு போ என்று
இரும்பை குடுத்து விட்டு
திரும்பி கொண்டது தேவதை
தருவதற்காய் வைத்திருந்த
வரங்களை தராமலே!

வியாழன், 9 அக்டோபர், 2008

குப்பை கூளங்கள்

பயன்பாட்டின் எச்சங்கள்
வழியெங்கும் -
பளீரென சுத்தமாயிருக்கிற
குப்பைத் தொட்டிக்கு
வெளியேயும், நடைபாதையெங்கும்!

புது முகங்களுக்கு மட்டும்
அறிமுகத்தில் எரிச்சலூட்டும்
கழிவுகள்!
பழகிய பின் யாரும்
முகம் சுளிப்பதேயில்லை.

நிலத்தடி நீரை
வீணே கடத்தி
யார்க்கும் உதவாது பண்ணும்
பாலீதின் குப்பைகள்.

பெருத்து, வீங்கி
மேடாகிப் போன
குப்பை மேடுகளிலிருந்து
காலராக்கள், மலேரியாகள்
இன்னும்
புது புது வியாதிகளை
பரப்பக் கிளம்பும்
கொசுக் கூட்டங்கள்.

ஒரு காலத்தில்
சுத்தமாய் இருந்ததாய்
யார் யாரோ பேசக் கேட்டதுண்டு.
சுத்தம் செய்ய
முனைப்புடன் எவரேனும்
துணிவதேயில்லை.

தெருக்கள், கிராமங்கள்,
நகரங்கள், மாநிலங்கள்,
தொகுதிகள், நாடு என
பயன்பாடின்றி
மினுக்கித் திரிகின்றன
குப்பைகள்.