வெள்ளி, 14 அக்டோபர், 2011

இனிக்கிற நினைவுகள்!
உன்னோடு நானிருக்கிற
அத்தனை புகைப்படங்களையும்
மறுபடி ஒருமுறை
புரட்டி பார்த்துவிட்டு
பாதுகாத்து வைக்கிறேன்
இதய அறைக்குள்
திரும்பவும்!
 பூக்கள் 
பறிக்கப்படுகின்றன
முட்களுக்கிடையில்
பாதுகாப்பாயிருப்பினும்  கூட!

கோவில் வாசலில்,
பேருந்து நிறுத்தங்களில்,
கூட்டம் கூடுகின்ற வழியிலெங்கும்
கூவி கூவி விற்கப்படுகின்றன!

அது ஒரு
பெண் பார்க்கும் படலம்
ஒரு பூவை
பூச்சூடி நின்றாள்!!

சனி, 26 மார்ச், 2011

விளையாட்டு திடல்

கோலிக்குண்டு,
கிட்டிபுல்,
கன்னமூச்சியில் ரெண்டாகும்
தெரு.
எல்லாம்
தாத்தா காலத்து வீட்டு
நினைவுகள்!

சின்ன சின்ன
விளையாட்டுக்கள்.
ஊரே விளையாட்டு திடல்.

கிரிக்கெட், டென்னிஸ்,
வாலிபால்
விளையாட ஆசைபடுகிற
பிள்ளைக்கு  இடமே இல்லை.

இரு, நான்கு சக்கர
ஆக்கிரமிப்பின்
சின்ன சின்ன
இடைவெளிகளே
விளையாட்டு திடல்!

ஒரு வேளை
இந்த இடைவெளிகளை
பெருமிதத்தோட
நினைவுகூர்கிற
காலம் வரலாம்...
பேர பிள்ளைகள்  
காலத்தில்!

முதலீடு

தாறுமாறாய் எகிறுகிற
தங்கவிலை
நம்பிச் செய்யலாமாம்
முதலீடு
குவிகிறது கூட்டம்!

மூணாவது படிப்பை
பாதியில் நிறுத்திவிட்டு
ஒரு வேலை சோற்றுக்காய்
பாத்திரம் கழுவுகிறாளே
பக்கத்துக்கு வீட்டில்
பிஞ்சு தங்கம்...
நம்பிச் செய்யலாமே
முதலீடு!
நிச்சயம் சாதிப்பாள்!!

வியாழன், 24 மார்ச், 2011

இரசனை

என்ன ஒரு 
அழகு!

என்ன ஒரு 
கம்பீரம்!

அடேயப்பா 
என்ன ஒரு நடை!
என்ன ஒரு செயல் திறன்!!

என்ன ஒரு 
இலாவகம்!

மயக்குதே நெஞ்சை...
என்னவொரு இனிமை!
எத்தனையருமையாய்
கோர்வையாய் வார்த்தைகள்,
வாக்கியங்கள்!

இரசனை தன்மைக்கு
எல்லைகளில்லை!
சின்ன திரை, பெரிய திரை, 
இலக்கியம், இசை, 
விளையாட்டு...

ஏதோ ஒன்றுக்கு 
அடிமை தான்!

சந்தடி பார்த்து 
சம்பாதித்து கொள்பவர்களுக்கும் 
இரசனை இருக்கத்தான் செய்யும்!
எங்கே தொலைப்பார்கள்
நம்மிடம் அடித்ததை? 

 
பரபரப்பாய்
பேச வைக்கிற,
கை தட்டி ஆரவாரிக்கிற,
கவலை தேய்த்து
கைகளில் கன்னம் தேக்கி வைக்க,
காரசாரமாய் விவாதிக்கவென்று
ஏதோ ஒன்று
போதுமாயிருக்கிறது!

பக்கத்துக்கு வீட்டு கதை
தொடங்கி
கிரிக்கெட், அரசியல்,
உலகப்பார்வை என
எல்லாவற்றிலும்
நேரம் தொலைத்து
தூங்கி போகிற வரை!

புதன், 23 மார்ச், 2011

பிச்சைக்காரர்கள்

வெறுப்பும் கோவமுமாய்
விரட்டியடிக்கப்படுகிற 
பிச்சைக்காரர்கள்!

"உழைத்து சாப்பிட வேண்டும்"
அறிவுரை பேசுகிற 
குப்பனுக்கு 
கலர் டிவியும், 
பொங்கல் சோறும் தவிர 
இனி லேப்டோப்பும், 
வாஷிங் மெஷினும் கிடைக்குமாம்!