செவ்வாய், 26 மே, 2020

கண்ணாடி குளம்



கல்லெறிகிற
கலையில்
கரை கண்ட கைகள்!

எம்பிக் குதிக்கும்
தவளையாய்
உருமாறிய குதூகலம்!

உடைந்த சில்லுகளில்
நிறைந்து வழிகிறது
தொடுத்தவர் முகங்கள்!

ஒட்டவைக்கிற,
வெறித்து பார்க்கிற,
கடந்து போகிற
பார்வைகளாய்
பெருத்து  நிரம்பி வழியும்
எல்லா துண்டுகளிலும்
முன் நாட்களின்
குதூகலங்களே -
ஒன்று பன்மடங்காய்
சிதறல்கள்!!!


திங்கள், 25 மே, 2020

வண்ணங்கள் உள்ளெழுப்பும்
விசாரிப்புகளை
விவரிக்க தேடுகிறேன்
பிறந்த மொழி
அகராதியின் பக்கங்கள்!

இன்னுமும் விளங்காத
வாழ்க்கையின் அர்த்தங்களை
சொல்லுகிற - உன்
விரல், தூரிகை
பிடித்து நடந்தால்
கிடைத்திடுமோ!!!????



- நன்றி - தன்யஸ்ரீ 

ஞாயிறு, 10 மே, 2020

தெய்வங்கள்

 கோயில்களின் நீண்ட பிரகாரங்களில்
நின்று  பிரார்தித்து
நடந்து போகிற தெய்வங்கள்!

தெய்வங்கள்
கருவறையில் நிரப்பிட்ட
விண்ணப்பங்களில்
பிள்ளைகள் பெயர்கள்!!

காய்கறி, பழங்கள்
நிறைந்து வழியும்
சந்தைகளில்
கவனமாய் தேர்ந்தெடுக்கிற
கைபட்டு சுவைகூடும்.
ஊட்டமும் குடி
பின் வீடு சேரும்!

உயிர் பெற்ற
நாள் முதல்
நீ
பார்த்து பார்த்து
வளர்ந்திட்ட உயிரிது!

உன் விரல்
செதுக்கி செதுக்கி
வெளிப்பட்ட
சிலையிது!

வருடம் ஒரு நாள்
வந்து போகும் நினைவல்ல!
அம்மா நீ
காற்று வருடும்
சுவாசம் போல
என்னுள் நிறைந்தவள்!

புதன், 1 ஜனவரி, 2020

முதல் மொழி

முற்றும் புரியாத 
முதல் மொழி 
தமிழ்!

சுற்றிலும் சுற்றிய 
புன்னகை,
கண்கள் மொய்த்த 
பெரும் பார்வை.

இனிப்புகள் பரிமாற 
சந்தோச கூச்சலோடே 
கொஞ்சுதல் நிறைந்த 
புரியாத பிராயத்தே -
அஞ்சுதல் களைத்த 
முதல் மொழியும் 
தமிழ்!

தாலாட்டில், சீராட்டில்
எனை சுற்றி 
நிகழ்வுகளில்  
தூக்கி வளர்த்திட்டது 
தமிழ்!

வருடம் தோறும் 
நினைவு படுத்தும் 
நாட்களில் 
தமிழில் வரும் வாழ்த்துக்களில் 
மட்டுமே மணக்கிறது 
நான் பிறந்த வாசனை!!

செவ்வாய், 29 அக்டோபர், 2019

Big shame

நான் படித்த அறிவியல் 
கூட்டு பிரார்த்தனை செய்கிற 
அறிவை கொடுத்திற்று.

தேடிச் சேர்த்த 
தகவல் ஏதும் 
ஒழுங்கற்று உதவுதலன்றி 
யார் யார் பின்னோ 
தயவு தேடி ஓடிற்று.

சிற்றிளம் பிஞ்சே 
உனை காக்க 
உதவிடாத 
திறன், பொருள், அதிகாரம் 
எல்லாம் குப்பையடா.

புதன், 17 ஏப்ரல், 2019

ஒட்டெதற்கு?


முடியாட்சி காலங்களில்
வழியில்லை!

வந்தவனை வாழ்த்திடனும்!
நொந்த நொடி
புலம்பிடலாம்! - அன்றி
வேறெதுவும் வழியில்லை!
பூட்டன், பூட்டி,
ஒட்டன், ஒட்டி காலமது!

குடியாட்சி நடக்கிறது.
தெளிவில்லை!

தேறியவனை பொறுத்திடனும்,
கூடி கூடி நொந்திடனும்!

உண்மை தெளிந்திடும்
உரமில்லா காரணத்தால்
இன்றேனும்  வழியில்லை!

ஒவ்வொரு ஓட்டையும்
சிறுக சிறுக சேர்த்தாலன்றி
விழுந்து விட்ட ஓட்டையை அடைக்க
வழியேயில்லை!

வியாழன், 28 பிப்ரவரி, 2019

வெளி வருமா???

பிரமாண்ட கதைகளின்
நாயகர்கள்
அங்குலம் அங்குலமாக
விவரிக்க படுகிறார்கள்.

சூழ்ச்சிகள், துரோகங்களை
முன்னறிகிறார்கள்,
உடைத்தெறிகிறார்கள்.

கோடான கோடி
எளியவர்கள் -
புகழ்ச்சி பாடுவதிலும்
மெய் மறந்து
உச்சி குளிர்வதிலும்
பொழுது நகர்த்துகிறார்கள்.

உச்ச கட்ட போரில்
காணாமல் போன
கோடியில் பாதியை
கணக்கில் எடுக்காமல்
வெற்றி பரணி பாட
பின்னொரு கூட்டம்
புறப்படுகிறது!

இப்படியாக நீளுகிற
புராண கதைகளின்
தொடர்ச்சியாகவே
நீளுகிறது நடப்பவைகளும்!!!