திங்கள், 6 ஜூலை, 2020

நீர் குமிழ்

இலை வழியாய்
நிழல் வழியும்
மரத்தடியே பாட சாலை

செவி நிறையும்  நேரமது. 
கண்கள்  கொஞ்சம் 
திசை மாற
குறி பார்த்து பறந்து வரும் 
விடுத்திட்ட 
சுண்ணாம்பு பாணம்

கொல்லென சிரித்திட்ட
நட்பின்  பால்
சுள்ளென கோபம் வரும்

நடந்ததை பகிர்ந்திட 
சொல்லி சொல்லி சிரிக்கிறாள் 
எனைப் பெற்ற 
என் பிள்ளை!

இன்னுமுண்டு 
பகிர்ந்த கதை 
பல நூறு!

சுறுசுறு எறும்புகள் 
துரு துரு கடித்து 
சிவந்திட்ட நினைவுகள்

மிதிபட்ட வேப்பம் பழம்,
உதை பட்ட சிறு கற்கள்,
தினந்தோறும் இருமுறை 
திகட்டாத தேனமுதாம் -
பள்ளி மணியோசை!

ஒன்றன் பின் ஒன்றாய் 
சிறு சிறு 
நீர் குமிழ்கள் 
மேலெழும்ப
அடியிருக்கும் பெட்டகம் தேடி
மூழ்கித் திளைக்கிறது
நாட்கள்

நண்பன் பகர்ந்திட்ட 
பள்ளி நாள் புகைப்படம்
பார்த்து பார்த்து!


கருத்துகள் இல்லை: