புதன், 8 ஜூலை, 2020

காலை வணக்கம்

நாலரை பில்லியன்
வருட கணக்கிற்கு முன்
காலை கணக்கில் உண்டா?

சுணக்கம்
விடவியலாது
படுக்கையில் மறுபடி
விழுகிற வாய்ப்பெனும்
வாய்த்ததுண்டா யாருக்கேனும்?

எப்படி இருந்தததென
எவரும் அறிந்திராத
அதே பூமி
இன்றும் புதிதாய் விடிந்திருக்கிறது

உணரப் படாதிருந்த
ஏதோ ஒன்று
விடை பட வேண்டிய
விழைப்போடு!

விழிப்புடன் தொடங்கலாம்
ஒவ்வொரு காலையும்!


செவ்வாய், 7 ஜூலை, 2020

பேரலை

ஓயாத வார்த்தைகள் 
உன் வசம்
ஒரு போதும் 
திகட்டாது இனித்திடும்

கேள்வி ஒன்று விடுத்த படி
பதிலும் நீயே அடுக்குவாய்
தலையாட்டும் பொம்மையாவேன்
காலை மாலை இரவுமாவாய்!

நிறுத்தும் நேர இடைவெளியில்
அரங்கேறும் புன்னகைக்கே
பிறந்து நானும் வளர்ந்தேனோ?!
பறந்து வானம் மிதந்தேனே!!

ஓயாத காதலே  உன் வசம்
ஒரு போதும் குறையாதே
பெருகிடும்

கிறுக்கல்கள் கவிதையென்றாய்
விசிறிய கசக்கல்கள்
சேர்த்து வைத்தாய்
நொடி நொடியாய் இனித்ததடி
நினைக்க மேலும் சுவைக்குதடி

ஓயாத பேரலை என் வசம்
ஒரு போதும் ஓயாது  மோதிடும்!!




திங்கள், 6 ஜூலை, 2020

நீர் குமிழ்

இலை வழியாய்
நிழல் வழியும்
மரத்தடியே பாட சாலை

செவி நிறையும்  நேரமது. 
கண்கள்  கொஞ்சம் 
திசை மாற
குறி பார்த்து பறந்து வரும் 
விடுத்திட்ட 
சுண்ணாம்பு பாணம்

கொல்லென சிரித்திட்ட
நட்பின்  பால்
சுள்ளென கோபம் வரும்

நடந்ததை பகிர்ந்திட 
சொல்லி சொல்லி சிரிக்கிறாள் 
எனைப் பெற்ற 
என் பிள்ளை!

இன்னுமுண்டு 
பகிர்ந்த கதை 
பல நூறு!

சுறுசுறு எறும்புகள் 
துரு துரு கடித்து 
சிவந்திட்ட நினைவுகள்

மிதிபட்ட வேப்பம் பழம்,
உதை பட்ட சிறு கற்கள்,
தினந்தோறும் இருமுறை 
திகட்டாத தேனமுதாம் -
பள்ளி மணியோசை!

ஒன்றன் பின் ஒன்றாய் 
சிறு சிறு 
நீர் குமிழ்கள் 
மேலெழும்ப
அடியிருக்கும் பெட்டகம் தேடி
மூழ்கித் திளைக்கிறது
நாட்கள்

நண்பன் பகர்ந்திட்ட 
பள்ளி நாள் புகைப்படம்
பார்த்து பார்த்து!


ஞாயிறு, 28 ஜூன், 2020

மந்திரம்

ஓவியம்: தன்யஸ்ரீ 




ரெட்டினா அனுப்பிய
சேதியை
சரி பார்க்க சொல்லி
திருப்பி அனுப்பிய
மூளை!

இரண்டுக்கும் இடையே
மல்லுக்கட்டும்
புது மாப்பிள்ளையாய்
பார்வை நரம்பு!

விரிய விரிய
பிரமிப்பில்
கண்ணின்  மணி!

விரலில் தீட்டியதென
நம்பு மறுக்கிற
அறிவுக்கு இது
மந்திரமென
சொல்லி
சமாளிக்க வேண்டியிருக்கிறது!

இயற்கையின் விரல்களை
கடன் வாங்கியிருக்கலாம்!
குத்தகைக்கு எடுத்திருக்கலாம்!!
தூரிகையென கொண்டிருப்பது
மந்திரக் கோலாகவேனும்
இருக்கலாம்!!!

ரசிப்பதற்கு
விஞ்ஞான விளக்கம்
தேவையில்லை
அஞ்ஞானியாய் இருப்பதே
போதுமாயிருக்கிறது!!

தேனிசை

குழல் வழி,
மீட்டும் விரல் வழி
ஊதல் காற்றின்
உடன் வரும்
இசை வெளி நிரம்பிய
இடந்தனில்
நாயகமோ குரல் வளம்!

இடம் வலம்
தலையாட்டும்!

இருக்கை இறக்கையென
உருமாறும்!

மூடிய கண்கள்
செவிக்குள் உட்கார்ந்தவாறே
இயல்புகப்பால்
சிறகடிக்கும்!!

சங்கீத ஞான
சபாக்களுக்குள்
எட்டி பார்த்த
நினைவலைகள்
நியூரான்களெங்கும்.

காதடைத்த 
கைபேசியில் 
தளும்புமுன் 
வார்த்தைகள்.
 
சுற்று வெளியெங்கும்
சூழ்ந்து கொண்டது
திகட்டாத தேனிசை!!


சனி, 30 மே, 2020

முதல் போனி

இன்னுமும் அந்த பழைய பஞ்சாங்கத்தை விட மாட்டேங்கிறேன்னு தோணலாம். ஆனா எந்த வேலையா இருந்தாலும் கடவுள் உதவி இல்லாம எப்படி?

எலுமிச்சம் பழத்தை டயருக்கு அடில வைக்க சொல்லி டிரைவர்ட குடுத்த்துட்டு சிதறு தேங்காய் போட வந்தேன்.

'கடவுளே! இந்த லாக் டவுன ஈடு கட்டுற மாதிரி உதவி பண்ணுப்பா'. நல்லா வேண்டிட்டு ஓங்கி உடைத்தேன் விடலை தேங்காயை. சிதறி சில்லு சில்லாய் உடைந்தது தேங்காய்.

பெரிய திருப்தியோடு நான் கார் நோக்கி திரும்பவும் டிரைவர் தலையை பிடித்து கீழ விழவும் சரியாக இருந்தது. 'என்னடா ஆச்சு!' பதறி ஓடி போய் பாத்தா சிதறிய தேங்காயின் சில்லு ஒன்று டிரைவர் தம்பியின் கண்ணை பதம் பார்த்திருந்தது.

'கண் டாக்டர் நான். இவனுக்கு treatment பாத்தா அது எனக்கு செலவா, வரவா???' . கடவுளே இப்பவே கண்ண கட்டுதே!

பட்டம்

தொடர் விவாதங்களில்
நைந்து நூலான
அதே பழைய முகங்கள்!

நீ சுட்டிக்கோடிட்ட 
நிகழ்வுகளை புறந்தள்ளி 
உனக்கு முன்னாலான 
நாட்களின் 
நூல் பிடித்தவாறே 
வானில் மிதந்து கொண்டிருந்தேன்!

பின்னொரு நாளில் 
கிழிந்த சட்டையாய்  
சீண்டுவாரற்று போயின
விவாதங்கள்!

நூலறுந்த பட்டம் 
பார்த்தவாறே பல கண்கள்!!