வியாழன், 29 ஜனவரி, 2026

உந்து சக்தி


கனியன் பூங்குன்றனார் வழியில்

நாம் செல்வதால்

கடந்தும் நாடு பல

மிளிரும் தமிழின் ஒளி.


தாயுமானவரின் எண்ணம்

சுமந்தபடி

இயங்கும் செயல்கள் வழி

உலகே உயர்வு பெறும்.


தானாய் இயக்கமில்லை

என்னை செலுத்துகிற

உந்து சக்தியிலே

அணுக்கள் தந்தவர்கள்!


தாத்தன், ஓட்டனென

ஓடித் தாண்டி பல

பரன் பரை தந்ததடா 

பண்பவை அத்தனையும்!


நண்பன், சொந்தமென

தெரிந்தோர் மட்டுமில்லை

ஆசான் தந்ததென்பேன்

செய்யும் சிறப்பனைத்தும்.


செவ்வாய், 27 ஜனவரி, 2026

உலக உருண்டையும்... சில தறுதலைகளும்!

இந்த கதையோட ஆரம்பம் ஒரு பெரிய 'வெடி' (Big Bang) ல ஆரம்பிச்சதுன்னு சொல்றாங்க. அது என்னவோ, நாம அங்க இல்ல... ஆனா அந்த வெடிப்புல இருந்து வந்த ஒரு தூசி தான் இன்னைக்கு சதா ஃபோன் தூக்கிக்கிட்டே திரியுது.

குரங்குல இருந்து வந்த குட்டி கோமாளி

முதல்ல நம்ம ஆளுங்க எல்லாம் மரத்துக்கு மரம் தாவிக்கிட்டு, பழம் தின்னுட்டு ஜாலியா தான் இருந்தாங்க. அப்புறம் என்ன லூசுத்தனம் வந்ததோ தெரியல, "நானும் மனுஷன் தான்"னு ரெண்டு கால்ல நிமிர்ந்து நின்னாரு நம்ம தாத்தா. நின்னுட்டு சும்மா இருக்காம, ஒரு கல்லு எடுத்து இன்னொரு கல்லுல தட்டி 'நெருப்பை' கண்டுபிடிச்சாரு.

அன்னைக்கு ஆரம்பிச்சது தான் இந்த 'டெக்னாலஜி' கொடுமை. சுட்ட கறியை தின்னதும் மூளை வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சு. "ஏன் நாம கஷ்டப்பட்டு வேட்டையாடணும்? ஒரு இடத்துல தங்கி விவசாயம் பண்ணுவோம்"னு ஒரு ஐடியா பண்ணாங்க. அங்க தான் ஆரம்பிச்சது 'சொத்துத் தகராறு'.



ஆளப் பிறந்தவர்கள் (மன்னராட்சி காலம்)

கொஞ்ச நாள்ல, "இந்த ஏரியா, அந்த ஏரியா இந்த இடம் அந்த இடம்னு"ன்னு சண்டை போட்டுக்கிட்டாங்க. அதுல எவன் அதிகமா அடிச்சானோ அவன் 'ராஜா'. அவனுக்கு ஒரு கிரீடம், நாலு மந்திரிங்க, ஒரு குதிரை. பாவம் அந்த ராஜா நாலரை மணி நேரம் தான் ஒரு நாளைக்கே தூங்க முடியுமாம்.

இந்த ராஜாங்களுக்கு ஒரு வியாதி. இங்க இருக்குறது பத்தாதுன்னு, பக்கத்து நாட்டுல இருக்குற தங்கத்தையும், பொண்ணையும் தூக்கிட்டு வரணும்னு கிளம்பிடுவானுக வானரப் பயலுக. மாரத்தான் ஓடுற மாதிரி மைல் கணக்குல ஓடிப் போய் சண்டை போடுவாங்க. இடையில எவனோ ஒரு புண்ணியவான் "கடல் வழியா போனா சீக்கிரம் போயிடலாம்"னு சொன்னான். அவ்வளவுதான்... "வாஸ்கோடகாமா"ல இருந்து "கொலம்பஸ்" வரைக்கும் எல்லாரும் படகை எடுத்துட்டு கிளம்பிட்டாங்க.

வெள்ளைக்காரன் செஞ்ச வித்தை (தொழிற்புரட்சி)

நம்ம ஆளுங்க எல்லாம் ராஜா, மந்திரி, மண்ணாங்கட்டின்னு சுத்திட்டு இருந்தப்ப, அந்த பக்கம் ஒருத்தன் 'ஆவி இன்ஜினை' (Steam Engine) கண்டுபிடிச்சான். அதுவரைக்கும் கையால வேலை செஞ்சவன் எல்லாம் மெஷின் பக்கம் போனான்.

இந்த வெள்ளைக்காரங்க இருக்காங்களே... அவனுங்களுக்கு ஒரு குசும்பு. "நாங்க ரொம்ப நாகரிகமானவங்க, உங்களுக்கு டிரஸ் போட சொல்லித் தாரோம்"னு சொல்லி உள்ள வந்தானுங்க. அப்புறம் அவனுக இருக்கதையும் உருவிட்டு ஓடுன கதை தான் நமக்கு தெரியுமே. வந்த இடத்துல வியாபாரம் பண்றேன்னு ஆரம்பிச்சு, அப்புறம் "இந்த நாடே என்னோடது தான், மரியாதையா வரி குடு"னு சொல்லிட்டானுங்க. உலகமே அவனுங்க பாக்கெட்டுக்குள்ள போயிருச்சு. இப்பவும் கூட வெள்ளையா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்னு நம்பிட்டு திரியிற நமக்குத்தான் வைச்சான் பாருங்க ஆப்பு. அது கிடக்கட்டும், வெள்ளைக்காரன் கிட்ட இன்னும் இருந்திருந்தோம்னா எவ்வளவு முன்னேறி இருப்போம் தெரியுமான்னு ஒரு கூட்டம் பேசுமே… கேட்டிருக்கீங்க? அப்படியே செவுலத் திருப்பணும் போலத் தோணும். என்ன பண்றது சில விஷயங்களை காதுல கேக்காதது மாதிரி கடந்து போக வேண்டியிருக்கு. 

ரெண்டு 'பெரிய' சண்டையும்... ஒரு அமைதியும்

எல்லாரும் சொகுசா இருக்கும்போது, "எனக்கு ஒரு நாடு வேணும், உனக்கு ஒரு நாடு வேணும்"னு ரெண்டு உலகப் போர் நடந்துச்சு. கத்தி, கேடயத்தோட சண்டை போட்டவங்க, இப்போ 'ஆட்டம் பாம்' (Atom Bomb) வரைக்கும் வந்துட்டாங்க. உலகமே சுடுகாடாகுற நிலைமை வந்ததும் தான், "ஐயையோ... வேணாம்ப்பா... நாம ஒரு 'சங்கத்தை' (United Nations) ஆரம்பிப்போம்"னு சொல்லி சமாதானம் ஆனாங்க. 

இப்போதைய நிலைமை (டிஜிட்டல் உலகம்)

சண்டை முடிஞ்சதும் எல்லாரும் அமைதியா இருப்பாங்கன்னு பார்த்தா, இப்போ கைக்குள்ள ஒரு கருவியை வச்சிருக்காங்க. அன்னைக்கு ஒரு நாட்டு மேல சண்டை போட குதிரையில போனாங்க, இன்னைக்கு ஒரு ட்வீட் (Tweet) போட்டா போதும்... உலகமே பத்திக்கும்.

முன்னாடி 'மண்ணுக்காக' சண்டை போட்டோம், அப்புறம் 'பணத்துக்காக' சண்டை போட்டோம், இப்போ 'டேட்டா' (Data) க்காக சண்டை போடுறோம்.


அந்த பழைய குரங்கு இன்னைக்கு சூப்பர் மார்க்கெட்ல கியூல நிக்குது. ஆனா பாருங்க, அன்னைக்கு காட்டுல ஒரு பழத்துக்காக சண்டை போட்டான், இன்னைக்கு ஒரு கிலோ தக்காளிக்காக சண்டை போடுறான். வரலாறு மாறுது... ஆனா நம்ம மனுஷனோட அந்த 'நல்ல குணம்' (அடுத்தவன் சொத்தை ஆட்டைய போடுறது) மட்டும் மாறவே மாட்டேங்குது!


ஆதாரம்: 


Sapiens: A Brief History of Humankind – யுவால் நோவா ஹராரி (Yuval Noah Harari).


Guns, Germs, and Steel – ஜாரெட் டைமண்ட் (Jared Diamond).


The Wealth of Nations – ஆடம் ஸ்மித் (Adam Smith) & Das Kapital – கார்ல் மார்க்ஸ் (Karl Marx).


The Age of Extremes: The Short Twentieth Century, 1914–1991 – எரிக் ஹாப்ஸ்பாம் (Eric Hobsbawm).



அந்த "வேலைக்காரன்" இப்போது என்ன செய்கிறான்? (தொடர்ச்சி...)

அவன் பழைய கதையெல்லாம் உங்களுக்குத் தெரியும். ஒரு காலத்துல பெரிய பெட்டி மாதிரி குண்டா இருந்தவன், அப்புறம் ஸ்லிம்மாகி 'லேப்டாப்'னு பேர் வச்சான். அதுக்கப்புறம் நம்ம உள்ளங்கையிலேயே வந்து ஒட்டிக்கிட்டு 'ஸ்மார்ட்போன்'னு ஊர் சுத்துனான்.

ஆனா, இப்போ அவனோட லெவலே வேற. இப்போ அவன் வெறும் வேலைக்காரன் இல்லை, நம்ம வீட்டு 'வாத்தியார்' மாதிரி ஆயிட்டான்!

மேகத்துல வீடு கட்டிய மேதாவி (The Cloud): முதல்ல எல்லாம் அவன் எதாவது தப்பு பண்ணா, "மெமரி இல்லை"னு கண்ணை உருட்டுவான். இப்போ என்னடான்னா, "என்கிட்ட எதுவுமே இல்லை, எல்லாம் மேல இருக்கு (Cloud)"ங்கிறான். என்னடா மேல இருக்குனு பார்த்தா, கண்ணுக்குத் தெரியாத எதோ ஒரு இடத்துல நம்ம டேட்டா எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிருக்கானாம். "தம்பி, என் போட்டோ எங்கே?"னு கேட்டா, "மேகத்துல இருந்து இறக்கித் தாரேன்"னு சீன் போடுறான். மழை பெஞ்சா நனைஞ்சுடுமானு கேட்டா, கேவலமா ஒரு லுக் விடுறான் பாருங்க... அங்க நிக்குறான் அவன்!

புத்திசாலித்தனமான புது அவதாரம் (Artificial Intelligence): இதுல கொடுமை என்னன்னா, கொஞ்ச நாளா அவனுக்கு 'மூளை' அதிகமாயிடுச்சாம். அதுக்கு பேரு 'ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்' (AI) - அதாவது 'செயற்கை புத்திசாலித்தனம்'. முன்னாடி நாம சொன்னதை மட்டும் செய்வான். இப்போ, "நீ என்ன நினைக்கிறனு எனக்குத் தெரியும்"னு பயமுறுத்துறான்.

நேத்து ராத்திரி சும்மா போன்ல "பிரியாணி சாப்பிடணும் போல இருக்கு"னு என் பொண்டாட்டிகிட்ட சொன்னேன். அடுத்த நிமிஷம், ஒருத்தன் அந்த ஓரத்துல இருந்து எட்டிப் பார்த்து, "இந்தாப்பா பக்கத்து ஹோட்டல்ல பிரியாணி 50 ரூபாய் ஆஃபர்"னு விளம்பரம் காட்டுறான். இவன் வேலைக்காரனா இல்ல உளவு பாக்குற போலீஸான்னே தெரியல!

சாட்-ஜிபிடி (ChatGPT) எனும் சகலகலா வல்லவன்: இப்போ புதுசா ஒருத்தன் வந்திருக்கான். அவன்கிட்ட போயி, "எங்க ஊரு திருவிழாவுக்கு ஒரு பாட்டு எழுதித் தா"னு கேட்டா, பாரதியார் ரேஞ்சுக்கு பாட்டு எழுதுறான். "என் ஆபீஸ்ல லீவு எடுக்க ஒரு பொய் சொல்லி லெட்டர் குடு"னு கேட்டா, கண்ணுல தண்ணி வர மாதிரி உருக்கமா ஒரு கடிதம் ரெடி பண்றான். ஆனா ஒன்னு, நாம படிச்சுப் பார்த்து மாட்டிவிடாம இருக்கணும்!

குவாண்டம் - இங்கேயும் இருப்பான், அங்கேயும் இருப்பான்: இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன், சீக்கிரமே இவன் 'குவாண்டம்' (Quantum) அவதாரம் எடுக்கப் போறானாம். அது எப்படின்னா, ஒரே நேரத்துல இங்கேயும் இருப்பானாம், அங்கேயும் இருப்பானாம். அதாவது, நம்மகிட்ட வேலை செய்யுற மாதிரியே, பக்கத்து வீட்டுக்காரன் கிட்டயும் வேலை செய்வானாம். இவன் பண்ற வேலையை யோசிச்சாலே தலை சுத்துது.

அன்னைக்கு அவன் கணக்கு தெரியாம "ஒன்னும் ஒன்னும் பத்து"னு சொன்னப்பவே நினைச்சேன், இவன் பெரிய ஆளா வருவான்னு. இப்போ பாருங்க, உலகத்தையே ஒரு சிப்புக்குள்ள அடக்கிட்டு உட்கார்ந்திருக்கான்.

நம்மள அடிமையாக்கப் பார்க்குறானா, இல்ல நமக்கு உதவி செய்யுறானான்னு தெரியல. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்... இப்போ அவன் இல்லாம நம்மளால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல. அந்த 'வேலைக்காரன்' இப்போ 'கடவுள்' லெவலுக்கு வளர்ந்துட்டான். ஆனா என்னதான் இருந்தாலும், அவனுக்கு இன்னும் 'சார்ஜ்' ஏறலைனா வாய் திறக்கத் தெரியாது பாருங்களேன்... அதுலதான் நமக்கு ஒரு திருப்தி!

ஞாயிறு, 7 டிசம்பர், 2025

பாரதிக்கு நன்றியோடு

ஒரு பக்கம் அயல்நாட்டான் 

ஆட்டத்தின் வேதனை 

அவர் அடிபிடித்தே 

பிழைப்போட்டும் மறு கூட்ட 

போதனை 


வரலாறு அறியாத 

அறியாமை 

அறிவற்றோர் என நம்மை 

அடையாளம் செய்திட்ட 

சூழ்ச்சி சுழல் 


தலைசுற்றி மதிகெட்டு 

செய்வதேது புரியாது 

திக்கற்று நிற்கிலை நீ 


மொழியின் வலி பிடித்து 

கவிதை உளி பிடித்தாய் 

பழமை உடைகையிலே 

பதறிய மனதுடைத்தாய் 


மரபை அறிந்தவனே

புதிய அழகு செய்தாய் 

எவரும் உணரும்படி 

எளிமை சூடி வைத்தாய் 


உன்னை சிறைபிடிக்க 

எழுத்தின் கரமுடைக்க 

இயலா இங்கிலாந்தின் 

புதிய முகம் படைத்தாய் 


வயதும் நீளமில்லை 

பெரிதாய் பொருளுமில்லை 

தலைமுறை கடந்துமுந்தன் 

செயலுரம் செய்தவன் நீ 


இன்னும் தலைமுறைகள் 

பெருமை சூடிக்கொள்ள 

மீசை தந்தவனே 


இசைக்கும் வரிகள் தனை 

முன்னாள் படைத்து வைத்தாய் 

மொழிக்கு தலைப்பாகை 

ஒன்றும் செய்து வைத்தாய் 


எடுத்து சூடிக்கொண்டோம் 

கனவை ஏற்றிக்கொண்டோம் 

இனியும் வீணடிக்கா 

கொள்கை ஏற்றுக்கொள்வோம்





வியாழன், 4 டிசம்பர், 2025

விவசாயி

விளைஞ்சதெல்லாம் ஊருக்கு 

பயன்படவே கொடுத்துட்டு 

குடிசையில வாழ்ந்தாலும் 

கும்பிடனும் சாமி உன்னை 


ஏதேதோ வேலைசெஞ்சோம் 

நீ படைச்சதை தான் 

வாங்கித் தின்னோம் 


விதம் விதமா உடைவாங்கி 

தினந்தினமும் கட்டிக்கிட்டோம் 

என் தட்சணைய தரகருக்கு 

தாரைவாத்து கொடுத்து நின்னோம் 


சாமிக்கு உண்டியலு 

செஞ்சவனை என்ன சொல்ல?

பங்குக்கு கடவுளுன்னு 

நம்புவது நல்லாயில்லை 


உழுத பயன் கிடைச்சிருக்கும் 

உணவாகி செரிச்சிருக்கும் 

அழுத கதை கேட்டிடவே 

ஒருத்தனுக்கும் நேரமில்லை 



நிலமெல்லாம் விளைஞ்சிருக்கு 

கட்டிடங்கள் ஊர் ஊரா 

தனக்கும் ஒண்ணு வேணுமின்னு 

கடனாளி கூட்டமெங்கும் 


விவசாயி பொழைப்பு எல்லாம் 

ஓட்டாக்க சதி இருக்கு 

திரையரங்க வாசலுக்கும் 

கொத்துகொத்தா பணமிருக்கு 


ஊர் ஊரா மேடையிலே 

பேச்சு மட்டும் பெருத்திருக்கு 

பேசும் வாயும் கேட்ட காதும் 

முடமாவே படுத்திருக்கு 


எங்கெங்கோ தேடுறாங்க 

பெருஞ்செல்வம் சேக்கணும்னு 

மண்ணுதாண்டா புதையலுண்ணு

புரியாத அறிவோட 


லைக் ஒன்னும் கமெண்டுன்னும் 

போடுறதை விட்டுவிட்டு 

உழைப்புக்கு மதிப்பேற்ற 

சிந்திக்கணும் கேட்டுக்குறோம்!

வியாழன், 20 நவம்பர், 2025

வில்லாதி வில்லனுக

வில்லாதி வில்லனுக

எல்லாரும் சேத்து வைச்சான்

சேத்து வைக்கும் முன்னாடி

நல்லவனா இருந்துக் கிட்டான்


மூணு வேலை கடத்திடவே

வேலை வேண்டி சேந்தவனும்

நாளைக்கேனும் கெட்டவனா

ஆகவேணும் வேண்டிக்கிட்டான்


கண்ணைமூடி கனவுகண்டு

கலர் கலரா காருல தான்

எடுப்புவேலை பாத்திடத்தான்

விதம் விதமா ஆளை வைச்சான்


கனவைத் தேடி ஓடி ஓடி

அங்கே இங்கே மாட்டிகிட்டு

சிக்கி முக்கி திணறிக்கிட்டு

கோட்டை நோக்கி படையெடுத்து


பணப்பெட்டி மூடி தேடி

ஓடுறது பெருங்கூட்டம்

எவனாச்சும் எடுத்துகிட்டா

ஊரு திக்கும்!

ஓடி வந்து

எழுநூறு தேளு கொட்டும்


வெள்ளி, 31 அக்டோபர், 2025

கலாம் கலாம் (Kalam Kalam) - The Visionary


கலாம் கலாம் கலாம்

அறிவுக்கு முகமே 

அறிவியல் களமே 

உலகக்கண்ணில் இந்திய முகமே




விண்வெளி கலங்கள் 

படைத்திட்ட கரமே 

யாவரும் கேளிர் 

உரைத்திட்ட குணமே 


எளியதோர் குடும்பம் 

பிறந்திட்ட கோவே 

அரியதோர் செயல்கள் 

படைத்திட்டாய் நீயே


தூங்கிய கனவுகள் 

விழித்திட வந்தாய் 

நிகழ்த்திடும் கனவுகள் 

விளைந்திட செய்தாய்


புன்னகை ஏந்திய 

உன்முகம் கண்டோர் 

புதையலை கண்டதாய் 

சொல்லிட செய்தாய்


கலாம் கலாம் கலாம்

அறிவுக்கு முகமே 

அறிவியல் களமே 

உலகக்கண்ணில் இந்திய முகமே


மேடைகள் பலப்பல 

காத்திட்ட போதும் 

பிள்ளைகள் வென்றிட 

ஆவல்கள் கொண்டாய்


ஏங்கிய கண்களில் 

இலக்குகள் விதைத்தாய் 

அன்பினால் வெல்லலாம் 

வாழ்ந்து நீ சொன்னாய்


எம்மை விட்டு நீ 

செல்வது இல்லை 

என்னுடன் யாவுமாய்

 நீயே எங்கும்

வாழ்கிறாய் இன்றும் 


கலாம் கலாம் கலாம் 

சிரிக்கலாம் சிந்திக்கலாம் 

பேர் எடுக்கலாம் 

பிறர்க்கெலாம் கொடுக்கலாம் 

தமிழில் பிறந்ததால் 

என்றும் எங்கும் ஜெயிக்கலாம் 


ஜெய் ஜெய் கலாம் 

நீ சொன்னது கேட்டால் 

எளிதாய் எங்கும் 

நிலைப்பெற ஜெயிக்கலாம்