ஞாயிறு, 28 ஜூன், 2020

மந்திரம்

ஓவியம்: தன்யஸ்ரீ 




ரெட்டினா அனுப்பிய
சேதியை
சரி பார்க்க சொல்லி
திருப்பி அனுப்பிய
மூளை!

இரண்டுக்கும் இடையே
மல்லுக்கட்டும்
புது மாப்பிள்ளையாய்
பார்வை நரம்பு!

விரிய விரிய
பிரமிப்பில்
கண்ணின்  மணி!

விரலில் தீட்டியதென
நம்பு மறுக்கிற
அறிவுக்கு இது
மந்திரமென
சொல்லி
சமாளிக்க வேண்டியிருக்கிறது!

இயற்கையின் விரல்களை
கடன் வாங்கியிருக்கலாம்!
குத்தகைக்கு எடுத்திருக்கலாம்!!
தூரிகையென கொண்டிருப்பது
மந்திரக் கோலாகவேனும்
இருக்கலாம்!!!

ரசிப்பதற்கு
விஞ்ஞான விளக்கம்
தேவையில்லை
அஞ்ஞானியாய் இருப்பதே
போதுமாயிருக்கிறது!!

தேனிசை

குழல் வழி,
மீட்டும் விரல் வழி
ஊதல் காற்றின்
உடன் வரும்
இசை வெளி நிரம்பிய
இடந்தனில்
நாயகமோ குரல் வளம்!

இடம் வலம்
தலையாட்டும்!

இருக்கை இறக்கையென
உருமாறும்!

மூடிய கண்கள்
செவிக்குள் உட்கார்ந்தவாறே
இயல்புகப்பால்
சிறகடிக்கும்!!

சங்கீத ஞான
சபாக்களுக்குள்
எட்டி பார்த்த
நினைவலைகள்
நியூரான்களெங்கும்.

காதடைத்த 
கைபேசியில் 
தளும்புமுன் 
வார்த்தைகள்.
 
சுற்று வெளியெங்கும்
சூழ்ந்து கொண்டது
திகட்டாத தேனிசை!!


சனி, 30 மே, 2020

முதல் போனி

இன்னுமும் அந்த பழைய பஞ்சாங்கத்தை விட மாட்டேங்கிறேன்னு தோணலாம். ஆனா எந்த வேலையா இருந்தாலும் கடவுள் உதவி இல்லாம எப்படி?

எலுமிச்சம் பழத்தை டயருக்கு அடில வைக்க சொல்லி டிரைவர்ட குடுத்த்துட்டு சிதறு தேங்காய் போட வந்தேன்.

'கடவுளே! இந்த லாக் டவுன ஈடு கட்டுற மாதிரி உதவி பண்ணுப்பா'. நல்லா வேண்டிட்டு ஓங்கி உடைத்தேன் விடலை தேங்காயை. சிதறி சில்லு சில்லாய் உடைந்தது தேங்காய்.

பெரிய திருப்தியோடு நான் கார் நோக்கி திரும்பவும் டிரைவர் தலையை பிடித்து கீழ விழவும் சரியாக இருந்தது. 'என்னடா ஆச்சு!' பதறி ஓடி போய் பாத்தா சிதறிய தேங்காயின் சில்லு ஒன்று டிரைவர் தம்பியின் கண்ணை பதம் பார்த்திருந்தது.

'கண் டாக்டர் நான். இவனுக்கு treatment பாத்தா அது எனக்கு செலவா, வரவா???' . கடவுளே இப்பவே கண்ண கட்டுதே!

பட்டம்

தொடர் விவாதங்களில்
நைந்து நூலான
அதே பழைய முகங்கள்!

நீ சுட்டிக்கோடிட்ட 
நிகழ்வுகளை புறந்தள்ளி 
உனக்கு முன்னாலான 
நாட்களின் 
நூல் பிடித்தவாறே 
வானில் மிதந்து கொண்டிருந்தேன்!

பின்னொரு நாளில் 
கிழிந்த சட்டையாய்  
சீண்டுவாரற்று போயின
விவாதங்கள்!

நூலறுந்த பட்டம் 
பார்த்தவாறே பல கண்கள்!! 

யானை பேச்சு


நன்றி - ஓவியம்: தன்யஸ்ரீ
நீலமில்லை வானம்
சாயம் போன  துணி
இன்னும் அழகாய்!!

சூரியக் கதிர்கள்
படுகிற நேரம்
மரத்தடியே
ஒழிந்திட்ட  நிழலோ
உச்சி வரை
ஏறி நின்று
எட்டி பார்க்கிறது!!

இலையின் பச்சை
திருடிய மாலை!

கூவி அழைக்க
கூடும் இருளை -
வென்று முடிக்க
கூடவே நடப்போம்
என்கிறதோ குட்டி யானை?



அந்திம காலம்

கூடடைய  விரித்த 
சிறகுகள்!

எதனுடன் கலந்தால் 
சாயம் மாறும் வானம்???
விடை தந்தவாரே 
வீடு  அடைகிற வேகம்!

இதுவும் கரைந்து 
கருமையாய் மாறும்!

உறைவதற்கில்லை, 
உணர்வதற்கே கடந்துபோகிறது ...
அந்திம காலங்கள்!

நன்றி : ஓவியம் - தன்யஸ்ரீ 

செவ்வாய், 26 மே, 2020

கண்ணாடி குளம்



கல்லெறிகிற
கலையில்
கரை கண்ட கைகள்!

எம்பிக் குதிக்கும்
தவளையாய்
உருமாறிய குதூகலம்!

உடைந்த சில்லுகளில்
நிறைந்து வழிகிறது
தொடுத்தவர் முகங்கள்!

ஒட்டவைக்கிற,
வெறித்து பார்க்கிற,
கடந்து போகிற
பார்வைகளாய்
பெருத்து  நிரம்பி வழியும்
எல்லா துண்டுகளிலும்
முன் நாட்களின்
குதூகலங்களே -
ஒன்று பன்மடங்காய்
சிதறல்கள்!!!