புதன், 22 ஜூன், 2022

சம்பிரதாயம்

 சில சம்பிரதாயங்களை மீறக்கூடாது. பெட்ரோல், மன்னிக்கணும் காஸ் போடறதுக்கு பெரிய வரிசைல காஸ்ட்கோல வெயிட் பண்ற மாதிரி. 

ஏழு மைல் தள்ளி இருக்குற வீட்ல இருந்து இதுக்குனே வண்டி எடுத்துட்டு போயி காத்திருந்து, வண்டிய பிட் பிட்டா நகத்தி நம்ம டர்ன் வர்ரப்ப கிடைக்கிற சந்தோசம் இருக்கே. அட அட. 

அது ஏன்டா வீட்டுக்கு வெளில இருக்குற காஸ் ஸ்டேஷனை விட்டுட்டு இவ்ளோ தூரம் வந்து அப்படி என்ன பெருசா மிச்சப்படுத்த போறேன்னு நானே  என்கிட்ட கேள்வி கேட்டிருக்கேன். ஆனா வேற யாரும் கேள்வி கேட்டதே இல்லை. அவங்க எல்லாம் 10, 15 மைலுக்கு மேல ஓட்டிட்டு வந்து எனக்கு முன்னாடியும் பின்னாடியும் நகட்டிட்டு இருக்காங்க.

ஏன்னா இதெல்லாம் ஒரு சம்பிரதாயம்.  

உங்களுக்கு அது சரியா புரியலைனா இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்றேன். ரெண்டு வருஷம் கழிச்சு இந்தியா போறப்ப ஆசை ஆசையா பாத்து தேடி பிடிச்சு  டீஷர்ட், கம்ப்யூட்டர், கடிகாரம், பொம்மை, கேமரானு வாங்கிட்டு போயி சொந்தக் காரங்கள பாக்க போனா "ஏன்டா சாக்லேட் வாங்கிட்டு வராம கண்ட கடியதை தூக்கிட்டு வந்திருக்க"னு கேப்பாங்க பாருங்க. அது மாதிரி தான்இதுவும்.  ஒரு சம்பிரதாயம். 

இந்த ஊருக்கு வந்துட்டா  முதல்ல SSN அப்ளை பண்ணனும். அதுக்கு அப்புறம் காஸ்ட்கோ மெம்பெர்ஷிப் அப்ளை பண்ணனும். அப்புறம் தான் மத்தவேலை பாக்கணும். 

கடைக்குள்ள போயி நம்ம எதுவும் பொருள் வாங்க வேணாம். அப்படியே முழு மாச கர்ப்பிணி மாதிரி அள்ளி போட்டுகிட்டு வண்டி வண்டியா நகரும் பாருங்க. அட அட. என்ன ஒரு அழகு?! 

அவ்வளவையும் அவங்களே சாப்பிடுவாங்களா இல்ல கடை போடுவாங்களானு ஆரம்பத்துல ரொம்ப சந்தேகமா தான் இருந்துச்சு. 

அப்புறம் தான் புரிஞ்சிச்சு. இதெல்லாம் ஒரு சம்பிரதாயம். வாங்கிட்டு போறதும். வந்து ரிட்டர்ன் பண்றதுக்கு வரிசைல நிக்கிறதும். 

ஷாப்பிங் பண்றதுல கூட எப்படி டிசிப்ளின் சொல்லிக் கொடுக்குறாங்க பாருங்க. கூட்டமே இல்லாத கடைக்கு போனா இந்த ஒழுக்கமெல்லாம் கத்துக்க முடியாதுங்கிறதால தான் கூட்டம் பிதுங்கிற நம்ம கடைக்கு தான் வருவாங்க. அது தான் அமெரிக்காங்கிறது. ட்  

அன்னைக்கு அப்படி தான் நம்ம கணேஷ்  டோஸ்ட் மாஸ்ட்டர்ஸ்ல ஸ்பீச் குடுக்கும் போது ஆகா ஓகோன்னு காஸ்ட்கோ புராணம் பாடுறாரு. அதுல ஒரு பைனல் டச் குடுத்தாரு பாருங்க. காஸ்ட்கோல பொண்ணு கிடைச்சிருந்தா கல்யாணமும் அங்கே தான் பண்ணிருப்பாராம். அட அட. அவ்ளோ நம்பிக்கை அந்த கடை மேல.  

அட,  ரிட்டர்ன் பண்றது ஈஸியா இருக்கும்னு யோசிச்சிருப்பாரோன்னு அப்புறம் லேட்டா  தான் புரிஞ்சது. 

அவ்வுளவு அதர பெருமை வாய்ந்த கடையோட லாரன்ஸ் எக்ஸ்பிரஸ் வே பிரான்ச்ல நானும் சுத்தி சுத்தி வரேன் 20 நிமிஷமா. பார்க்கிங் கிடைக்கவே  இல்லை. 

இதே நம்ம ஊரா இருந்தா புலம்பி தள்ளிருப்போம். இங்கே பழகிருச்சு. அமெரிக்காவுக்கு விசா கிடைக்கிறது ரொம்ப ஈஸி. ஆனா காஸ்ட்கோல வண்டி நிறுத்த இடம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.

ரெண்டாவது ரோல யாரோ கார் எடுக்க போற மாதிரி இருந்துச்சு. எப்படியாவது பிடிச்சிரணும்னு வண்டிய திருப்புறேன். டமால்னு ஒரு சத்தம். முன்னையும் பின்னையும் சின்ன அதிர்வு. 

வந்து விட்டான் பாருங்க ஒரு டுபாக்கூர் என் கார் மேல. புது BMW கார்ல முதல் டென்ட்.  

தேடி தேடி பாத்து பாத்து வாங்குன முதல் கார். அப்படியே கோவம் தலைக்கு மேல ஏறி கண்ணுல இருந்து வெடிச்சு கிளம்புது. இறங்கி போயி அவனை விடுற அடில பல்லு பத்தும் கழண்டு தொங்கணும். 

கொதிக்க கொதிக்க வண்டிய விட்டு இறங்குனா பழைய இத்துப்போன கார்ல இருந்து அமெரிக்க பெருசு ஒண்ணு இறங்குது. 

அப்படியே தலைல கைய வைக்கிறான். சாரிங்கிறான், வண்டிய வந்து தொட்டு தொட்டு பாத்து வருத்தப்படறான். 

அவன் முன்னாடி எதுமே நடக்காத மாதிரி ஹே ஹேனு நிக்கிறேன். என்ன கொடுமை சரவணன்?

அவனோட லைசென்ஸையும், இன்சூரன்ஸையும் எடுத்து நீட்டுறான். 

பல்ல கழட்ட போறேன்னு காரை விட்டு இறங்குன நான் அவன்கிட்ட பல்ல காட்டிட்டு நிக்கிறேன்.

இது உங்க ஊரு பாஸ். நீங்க அப்படியே ஓட்டிட்டு வந்து முன்னாடி, சைடுல, முடிஞ்சா காருக்கு மேல கூட இடிச்சுக்குங்க பாஸ். எங்க புதுக்கார விட உங்க பழைய காரு தான் மாஸ். ஓல்ட் இஸ் கோல்டு பாஸ்னு சொல்ற மாதிரி நிக்கிறேன். 

அட மானங்கெட்டவனேனு  எனக்குள்ள கொதிச்சுக்கிட்டிருந்த நம்ம ஊரு காட்டானுக்கு நான் அப்ப  சொன்னது ஒண்ணே ஒன்னு தான். 

இதெல்லாம் ஒரு சம்பிரதாயம் தம்பி.

தீர்க்கதரிசி

இரவு படுக்க போகும் முன்னாடி ஒரு standup கால் இருக்கும் எல்லா ஆண் மென்பொறியாளர்களுக்கும். இது அமெரிக்காவுக்கு வந்து குடியேறுன பழக்கமா இல்லை குடியேறுனவங்களோட பழக்கமான்னு தெரியலை.  வீட்டுல இருந்து தான் வேலை பாக்கணும்னு நிலைமை வரதுக்கு முன்னாடியே கூட இதே நிலைமை தான். ஆனா அப்பவும் இப்பவும் ஸ்டேட்டஸ் எடுக்குற நேரத்துல அப்படியே ஒரு வீடியோ பாத்துகிட்டு, பாட்டு கேட்டுகிட்டே வேலை  நடக்கும். என்ன தான் கவனம் வேற பக்கம் இருந்தாலும்  வேலை சுத்தமா  இருக்கணும்.

அப்படியென்ன ஆண்களுக்கு மட்டும்? கடல் கடந்த நாட்டோட வேலை செஞ்சிக்கிட்டுருக்கிற பெண் மென்பொறியாளர்கள் கொந்தளிச்சிர வேணாம். கொஞ்சம் பொறுங்க. 

எடுத்து, தண்ணி விட்டு, எல்லா பக்கமும் சுத்தமா தேச்சு, பக்கத்துல இருக்குற எந்திரத்துல அடுக்கி வைச்சு, கடைசில பட்டன தட்டி விட்டுட்டு தூங்க போறதுக்கு முன்னாடி நின்னுக்கிட்டே ஆண்கள் பண்ற வேலைய தான்  சொல்றேன்.

ஓ நீ தான் உங்க வீட்ல டிஷ் வாஷாரானு ஹி ஹீங்கிற என் நண்பன் சமையல் வேலை மட்டும் தான் பாப்பான். ஸ்டாண்டப்ல அவங்க வீட்டுல பெண்களுக்கு தான் முன்னுரிமை. 

சரி நம்ம கதைக்கு வருவோம். எப்பவும் போல facebookல தினா பக்கத்துல போட்டுருக்குற காமெடி கலாட்டாக்களை பாத்துகிட்டே பாத்திரம் கழுவி வைச்சுக்கிட்டு இருக்கேன். ஹே ஹேனு எதுக்குடா சிரிக்கிறானு மொறைச்சு மொறைச்சு பாக்குற பசங்க தூங்குறதுக்கு ரெடி ஆகிட்டு இருக்காங்க. திடிர்னு ஒரு தடங்கல். அப்படியே சிரிக்கிறதை நிப்பாட்டிட்டு சிந்தனைக்கு போயிட்டேன். எதுக்கு நம்ம மாரிமுத்து வாத்தியார் கால் பண்றாரு? 

கால் அட்டென்ட் பண்றதுக்கு முன்னாடி மாரிமுத்து வாத்தியார் பத்தி ஒரு அறிமுகம் குடுக்கலாம்னா ரொம்ப நேரமாகும். ஆகா ஓகோன்னு நான் சொல்லுவேன்னு எதிர் பார்த்தா அதான் இல்லை. எவன் தன் வாத்தியாரை பத்தி நல்ல படியா சொல்லுவான். சும்மா கழுவி கழுவி ஊத்துவேன்னு நீங்க நினைச்சா அதுவும் இல்லை. எங்க வாத்தியார் எல்லாத்துக்கும் மேல. குருங்கிறவர் எப்படியெல்லாம் இருக்க முடியுமோ அதுக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு. அவரை பாத்தி சொல்ல ஆரம்பிச்சா இன்னும் ரெண்டு நாவல் நீளும். 

மறுபடியும் கதைக்கு வரேன்.

"சார் எப்படி இருக்கீங்க சார்" அப்படினு கேட்டவுடனே "என்னம்மா தங்கம். எப்படிடா இருக்க. வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களாம்மா?" அப்படினு சார் பேசுற கேக்குறதுக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கும் தெரியுமா? அந்த குரல்லேயே கடல் தேசங்கள்லாம் கடந்து நம்ம தோலை தட்டிகிட்டு நிப்பாரு எங்க வாத்தியாரு. 

அவரோட இன்னொரு முகமும் நாங்க பாத்ததுண்டு. ஒரு நாள் மார்க் கம்மியா எடுத்த அன்னைக்கு அடிக்காத குறை தான். "நீயெல்லாம் சட்டி சுரண்ட தான் போறேன்"னு  அன்னைக்கு அவர் திட்டினத்துல மண்டைல உரைச்சு ஒழுக்கமா படிச்சு, காலேஜ் போயி காலேஜ் முதல் மாணவனா வந்து, மேல படிச்சு, வேலைக்கு போயி, வாத்தியார் ஆசிலயும் நல்லவங்க பழக்கத்துலயும் இன்னைக்கு அமெரிக்கா வரைக்கும் வந்து...

"என்னம்மா பண்ணிக்கிட்டு இருக்க?"னு சார் போன்ல கேட்டதுல மறுபடியும் நிகழ்வுக்கு வர்றேன்.

எப்படி சொல்வேன் சார் கிட்ட ... 'சார் சட்டி தான் சார் சுரண்டிடு இருக்கேனு??'

    

திங்கள், 28 மார்ச், 2022

அம்மா

அம்மா உன்னை
விடுவது  இல்லை
விரல்கள் பிடித்தே
நடக்கிறேன் இன்னும்


அம்மா உன்னை
கடப்பதுமுண்டோ
உன் விழிகள் சுமந்தே 
கடக்குது நாட்கள் 
 

கடந்தவர் கோடி
இருந்திட்ட போதும்
பெற்றவள் நீயே
நிற்கிறாய் நெஞ்சில் 


ஊட்டிய ஒரு வாய்
சுவைக்குது இன்னும்
காட்டிய சொந்தம்
கைவிட வில்லை 


உன்முகம் தூக்கி
திரிவதால் என்னை
வெறுத்திட எவருக்கும்
முடிவது இல்லை 


மகிழ்ந்திட நூறு
நிகழ்வுள்ள போதும்
உனதரு நேரம்
இணையது இல்லை 


அருகே நீயும் 
இருந்திடவில்லை 
இருந்தால் சுவைக்கும் 
வாராய் தாயே!

ஏதென புரியா
கதையது தெரியா
விழித்தேன் துடித்தேன்
உறக்கம் கலைத்தேன் 


தாலாட்டு பாடி 
தூங்க வைக்க 
மறுபடி பிறந்து 
வந்தாலென்ன?

உனக்கொரு மகனென 
சேர்ந்த சொத்து  
எனக்கொரு மகளென 
வந்தால் கூடும்  

உன்னிடம் பேசி 
செய்கிறேன் எதையும் 
நீ கேட்கும் கேள்விக்கு 
பதிலாய் வாழ்வேன் 

உந்தன் பிம்பம்
உதிர்வதும்  இல்லை
நீயாய் நானே 
வாழ்கிறேன் தாயே! 


Mom, I will not let go of you,
Still walking, holding your fingers.

Mom, how could I ever surpass you?
The days pass, carried by your gaze.

Though millions have come and gone,
You, the one who bore me, still stay in my heart.

The one bite you fed me still tastes sweet,
The bond you showed me has never been abandoned.

Because I walk, lifting your image in my mind,
No one can ever hate me.

Though there are countless events to enjoy,
None compare to your precious moments.

You are no longer by my side,
If you were, life would be sweeter—come, mother!

I don’t understand what this story is,
I woke up, struggled, and broke my sleep.

Singing a lullaby,
What if I was reborn to put you to sleep again?

As your son, the wealth I gained,
As a daughter, I would still come back to you.

I speak to you and do everything I can,
I’ll live my life as the answer to your every question.

Your reflection will never fade away,
For I live as you, my mother.

செவ்வாய், 30 நவம்பர், 2021

தியாகிகள்

 கடன் தந்தார் நெஞ்சம் போல் கலங்கவே கூடியிருந்தது கூட்டம். எதுக்கு இப்ப இவ்ளோ கவலை? அதுவும் எல்லாருக்கும்? 

நாட்டு மேல கடன் கூடிகிட்டே போகுதே. நம்ம சந்ததிகள் கடனாளியா வாழணுமோங்கிற கவலையா? வாய்ப்பில்லையே ராஜா. 

பெட்ரோல் விலை பத்தி..? கண்டிப்பா இருக்கவே இருக்காது. வேற இன்ன பிற கவலைகளை பட்டியல் போட்டா கூட உக்காந்து பேசி அலசி ஆராய்ஞ்சு மெகா சீரியல் பாக்குற அளவுக்கு சந்தோசப்பட்டிருப்போமே. 

ஒருவேளை தலைவர் படம் ரிலீஸ் ஆகி ஒரு மாசம் ஆச்சே, அடுத்த படம் பத்தி தலைவர் எப்ப சொல்வாருங்கிற கவலையா இருக்குமோ?

கழுவி கழுவி ஊற்றி கொண்டிருந்த டீக்கடைக்காரர் கம்பீரமாக பாய்லரை தட்டிக் கொண்டிருந்தார். இந்த ஒரு பிசினஸ் தான் பெரிய முதலைங்க வாய்ல இருந்து தப்பிச்சிருக்குங்கிற தெனாவட்டா இருக்கலாம். அவராவது சந்தோசமா இருக்காரே. சந்தோசம் தான். 

கையில கத்தி எடுத்தவன் கத்தக்கூட முடியாம தான் சாவன்ங்கிறது நம்ம சலூன் கடை ரமேஷ் விசயத்துல சரியாத்தான் போச்சாம். உழைக்கிறவன் உயர்வான்கிறது தப்பான பழமொழியாம். டீக்கடை காரருக்கு அறிவுரை சொல்லும் நம்ம  ரியல் எஸ்டேட் ரியாஸ்  எதுக்குமே கவலை பட்டதே இல்லை தான். 

கொரோனா சாப்பாட்டுக்கு கூட நாதியல்லாம ஊர் தாண்டி, ஸ்டேட் தாண்டி ஓட விட்டப்பகூட பணத்தை திங்க முடியும்னு நிருபிச்சவன் ரியாஸ். அதுவும் தான்தோன்றி தனமா தின்னாகூட பணம் பன்னி மாதிரி குட்டி போடும்னும்  புரிய வைச்சவன்.

காசு சேக்குறது ஒரு கலை. அத கத்துக்கிட்டவன் சேத்துட்டுக்கிட்டே போறான். மத்தவனெல்லாம் செலவழிச்சே அழிஞ்சு போறான்னு பிள்ளைக்கு தலைல குட்டி சொல்லிக்கிட்டு இருக்குற துரைக்கு அந்த கலை வசப்படாமலே போயிருந்தது.  ஆனாலும் பிள்ளைக்கு அட்வைஸ் பண்றத டீக்கடை முன்னாடி கூட நிப்பாட்டல. 

திடிர்னு டீக்கடை முன்னாடி இருந்த கூட்டத்துக்கு நடுவுல எவனோ வானத்துக்கு எகிறி குதிக்க பக்கத்துல இருக்கவன் அம்மானு அலற. என்னடா நடக்குது? 

சந்தோஷத்துல தலை கால் புரியாது சரி. கையும், கையில இருக்குற போனுமா தெரியாது?  போன் இடிச்சு பல்லு பேந்து அடி பட்டவன் அலர்ற சத்தம் கூட்டத்தோட ஹேங்கிற சத்தத்துல வெளிய கேக்கலை. 

ரோஹித் அடிச்ச சிக்சர்ல லட்ச ரூபாய் போனும் காலி, அடிபட்டவன் ரெண்டு பல்லும் காலி. 

லாக் டவுன்ல பட்ட கஷ்டமெல்லாம் பறந்து போச்சு அந்த கூட்டத்துக்கு. பல்லுபோனவன், செல்லு போனவன் தவிர. 

டீமோட வெற்றில நம்ம நாடு பட்ட கஷ்டமெல்லாம் காணாம போயிடும்னு நம்ம தலைவர் ________ சொன்னது உண்மை தான் போல.  

தேசமே பெரிசுன்னு நினைக்கற கூட்டம் இல்லையா! கண்ணெல்லாம் கலங்கி போனேன்.


ஞாயிறு, 7 நவம்பர், 2021

ரொம்ப நல்லவன்டா நீ

வெள்ளையும் சொள்ளையுமா வந்து நின்னப்ப இவன் பெரிய அப்பா டக்கருனு தான் நினைச்சேன். வேலைக்காரனா தான் சேந்தான். 

கொஞ்ச நாள்லயே நான் தான் அவனுக்கு பாஸ்ங்கிறதையே  மறக்கடிச்சான். இது ஒரு டெக்னீக். 

'ஆளப்பனார் நான் உங்கள் அடிமை'ன்னு தான் ஆரம்பிப்பானுக. நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமா நம்ம தான் இவனுககிட்ட அடிமையாயிருப்போம். 

இதுல இப்ப நிலைமை என்னனா சார்கிட்ட பேசும் போது இயற்கை உபாதையை கூட அடக்கி வைச்சுப்பேன்னா பாத்துக்கங்க. அடிமைக்கெல்லாம் அடிமைனு பேரு வைச்சா நல்லா இருக்காது, விட்டுறலாம். 

ஓகே, ஓகே. 'நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலைடா. யாருக்குடா இவ்ளோ பில்ட்-அப் கொடுக்கறான்ங்'கிற  உங்க மைண்ட் வாய்ஸ் நல்லா கேக்குது. 

ஆனா அதுல பாருங்க ஒரு சின்ன சிக்கல். 

சார், நம்ம ரெண்டு பேருக்குமே பொதுவான ஆளு. 

அவனை எனக்கு அறிமுகப் படுத்துனது எங்க ஊருல ஒரு பெரிய கை. ஊர்ல இருந்து வந்திருந்த  மாமா கூட போயிருந்தப்ப  தான் சார் அறிமுகமானாரு. 

'ரொம்ப நல்லவன்'னு சொன்னாங்க.

ரொம்ப குண்டா, கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு இப்ப யோசிச்சு பாத்தா ரொம்ப கேவலமா தான்  இருந்தான். இன்னைக்கு  எல்லாரும் நம்பி இருக்காதே நம்ம கதா நாயகனோட தயவை தான்.

இன்னைக்கு நீங்க அவனை பாக்கணுமே. கொஞ்சம் கூட சம்பந்தமே இருக்காது. 

இந்த கதையோட முடிவுல அவனோட பழைய போட்டோவ கண்டிப்பா பகிர்ந்துக்கிறேன்.  

இப்ப போட்டோவையும் பாருங்க. ஆம்பள, பொம்பள, விடலை பசங்க, பொடிசுகனு எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி. நம்ம ஆளு தான் இப்ப உலக அழகன்.  சூப்பர் ஸ்டார், காதல் மன்னன், கனவு கன்னி எல்லாம் சார் பக்கத்துல கூட நிக்க முடியாது. 

'சார் உலகமெல்லாம் சுத்திட்டு வந்தவரு' அப்படி இப்படினு பெரிய இண்ட்ரோவட தான் சாரோட அறிமுகம். 

நம்ம கிட்ட வேலை பாக்க போற பயலுக்கு என்ன ஒரு பில்ட்-அப்னு தோணுச்சு. 

இப்பவும் சொல்றேன். எப்படி பாத்தாலும் நம்ம ரேஞ்சுக்கு இவன் ஒரு ஆளே கிடையாது. ஆனா யாரும் ஒத்துக்க மாட்டேங்கிறாங்க.

சீட்டு விளையாட வருவான். சீட்டுக்கட்டை களைச்சு சும்மா சரக் சரக்னு அவன் போடுற அழகிருக்கே. வேற லெவல். 

காலங்காத்தால ஆரம்பிச்சு, மதியம் சாப்பாட்டுக்கு அப்புறம், சில சமயம் ரொம்ப நேரம் வரைக்கும் தூங்காம சீட்டாட்டம்னு நேரம் ஓடுச்சு. 

அப்பல்லாம் காசு வைச்சு சீட்டு விளையாட சார் ஒத்துக்கவே  மாட்டாரு. 

அதெல்லாம் இப்ப பழைய கதை. இப்ப எல்லாம் நம்மாளு எல்லா ஏரியாலயும் கல்லா கட்டுறாரு.

வெறும் சீட்டுக் கட்டோட எங்க நட்பு நிக்கல.  ரேஸுக்கெல்லாம் கூட்டிட்டு போயி கெத்து காட்டினான். 

ரேஸ் விடறதுல நம்ம ஆளு தலக்கு எல்லாம் தல. காரெல்லாம் உருண்டு, இடிச்சு, தீப்பிடிச்சு. யப்பா சாமி.  இந்த உட்டாலங்கடில்லாம் சினிமால தாண்டா பாத்துருக்கேன். அதுவே நம்ம கண்ணு முன்னாடி நடந்தா!? சும்மா தெரிக்க விட்டுருவாப்ல.

பாத்திங்களா? வேலைக்கார நாய்க்கு நான் குடுக்குற பில்ட்-அப்ப. அப்படிதான் ஆகிப் போச்சு. 

சாருக்கு என்ன பிடிக்கும்? எப்படி சார் கிட்ட பேசுறது? அவருக்கு புரிஞ்சிக்கிற மாதிரி எப்படி சொல்றது. இதெல்லாம் நல்லா தெரியலைனா சாரு பக்கத்துல கூட நிக்க முடியாது. 

என்ன கேட்டாலும் கேவலமா ஒரு பதில் வரும். அப்படி ஒரு வேலைக்காரன். 

சார் யாரு, சாருக்கு என்ன தான் தெரியும்? சார் குலம் கோத்திரம் என்ன? இப்படி எல்லாம் விசாரிக்கறதே ஒரு பொழைப்பா திரிஞ்சேன். 

அப்புறம் அதை மத்தவங்களுக்கும் எடுத்து சொல்லி என் பங்குக்கு நானும் 'சார் ரொம்ப நல்லவரு. பாத்து பக்குவமா பேசுனீங்கனா எல்லா வேலையும் நல்லா வைச்சு செய்வாரு'னு பிரமோட் பண்றதே வேலைனு திரிய ஆரம்பிச்சேன். 

அப்ப தான் சார் ஒரு ஜெர்க் அடிச்சாரு. 

எனக்கு இன்னொரு முகம் மட்டும் இல்லை, நெறய முகம் இருக்குனு. 

சும்மா தெரிக்க விட்றதுனா தெரியுமா? அது தான் நடந்தது.

டபுள், ட்ரிபிள் ஆகுறது கேள்வி பட்டிருக்கேன். நம்ம ஆளு அடிச்ச அடில ஆயிரம், பத்தாயிரம் மடங்குனு ஜம்ப் அடிச்சான் பாருங்க. 

என்ன மாதிரி ஒர்க் அவுட்னு தான் தெரியலை. பர்ஸ் பெரிசாச்சு, உடம்பு சிறிசாச்சு. 

சில பேர் வெயிட் லாஸ் பண்றேனு நோயாளி மாதிரி வந்து நிப்பாங்க. அப்புறம் நாளாக நாளாக அதுவே பார்த்து பழகிடும். 

ஆனா நம்ம ஹீரோ கதையே வேற. சும்மா ஜம்முனு வந்து நிக்கிறான். 

சாரை நம்ம ப்ரொமோட் பண்ண நிலைமை மாறி, இப்ப சார் தெரியும்னு சொன்னா தான்  நமக்கு ப்ரொமோஷன்கிற மாதிரி ஆயிருச்சு. 

'எனக்கு ஐ.ஜி ய தெரியும்னு' காமெடி பண்ணிட்டு திரியிற மாதிரி ஒரு நிலைமை. நம்ம ஜீக்கு தான் நம்மள தெரியவே தெரியாது. 

கொஞ்ச நஞ்ச நாளா என்ன? இந்த கருமாந்திரம் பிடிச்சவனோட வருஷக் கணக்குல பழகிருக்கேன். ஆனாலும் நம்மள ஒரு ஆளாவே மதிக்க மாட்டான். என்ன கொடுமை சார் இது?

இவனை எல்லாம் வச்சு செஞ்சிருக்கனும். ஆனா பண்ண முடியலை.

இடைல பெரிய ஹெல்த் ப்ராப்ளமாகி படுத்த படுக்கையா கிடந்தான். பிழைக்க வாய்ப்பில்லைனு எல்லா டாக்டரும் கைய விரிச்சுப்ப, வேண்டாத கடவுள் இல்லை. 

போகாத கோவில் இல்லை. இவனை விட்டா வேற நாதியில்லைங்கிற நிலைமை. என்ன பண்ண?

எல்லா நாட்டுல இருந்தும் பறந்தாங்க. அவன் டிரீட்மென்ட்டுக்கு செலவு பண்ண பணத்தை பாத்தப்ப தான் மிரண்டுட்டேன். சார் சாதாரண ஆளு அல்ல. இவன் எவ்ளோ பெரிய வேலைக்காரன்னு 

அப்பத்தான் புரிஞ்சிச்சு. இவன் வெறும் அப்பாடக்கர் மட்டும் இல்லை அம்மாடக்கர், அண்ணாடக்கர், அண்டர்டேக்கர், டக்கரோ டக்கர்.

இவ்ளோ தூரம் செலவு பண்ண ஒரு வேலைக்காரனுக்கு எப்படி பணம் வந்துச்சுங்கிறது தானே உங்க கேள்வி? 

வரக்கூடாதே?! எவனெல்லாம் நான் உங்களுக்கு வேலை செய்யத்தான் பொறந்திருக்கேன்னு சொல்லிட்டு திரியிறானோ, அவனெல்லாம் கொஞ்ச நாள்ல கணக்கில்லாம பணம் சேத்துருவானுகங்கறது  நமக்கு தெரியாததா என்ன? 

அப்படி இவன் யார் யார்கிட்டலாம் வேலை பாக்கிறாங்கிற லிஸ்ட் ரொம்ப ரொம்ப பெரிசு. 

நம்ம ஊரு அண்ணாச்சி தொடங்கி, பேங்க் ஆபீசர், இளைய ராஜா, சங்கர், ராஜா மௌலி, டாடா மட்டுமில்லை. உலக அளவுல பில் கேட்ஸ், லாரி பேஜ், எலான் மாஸ்க்க எல்லாருக்கும் நம்மாளு தான் வேலைக்காரன். என்ன தலை சுத்துதா? கொஞ்சம் பொறுமையா யோசிங்க. (தேவைப்பட்டா மறுபடியும் கதை ஆரம்பத்துல இருந்து கூட படிங்க)

இப்ப நீங்க ஓரளவுக்கு கண்டு பிடிச்சிட்டீங்க தானே? ஆமா அவனே தான். 

இந்த இடத்துல கொஞ்சம் இவனை பத்தி டீடைலா பேசி தான் ஆகணும்.

'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்துல நம்ம ரோபோ சங்கர் கேரக்டர் யாருன்னா நம்ம ஹீரோ தான்.   எதுவா இருந்தாலும் முதல்ல இருந்து ஆரம்பிக்கனும். எதையும் ஞாபகம் வச்சுக்கிற பழக்கம் கிடையவே கிடையாது. 

கொஞ்ச விஷயங்களை ஞாபகம் வைச்சுக்கிட்டு மீதிய ஊரு உலகமெல்லாம் இருக்குற தன்னோட அப்ரசிண்டுக கிட்ட கேட்டு தான் முடிவுக்கு வருவாப்ல. 

சாரோட மேத்தமேட்டிக்ஸ் கேக்கணுமே, ஆஹா ஓஹோ!

ஒன்னும் ஒன்னும் என்னடான்னு கேட்டா பத்துனுவான். எந்த வாத்தியார்ட்டடா  படிச்சான்?

அடுத்து பத்தும் ஒன்னும் பதினொன்னு சொன்னதும் அடிச்ச சரக்கு தெளிஞ்சிருச்சுன்னு நம்பி  பதினொன்னும், ஒன்னும் எவ்ளோன்னு கேட்டா அடுத்த செகண்ட் நூறும்பான். 

யப்பா சாமி இவன் கிட்ட பேசிக் கிட்டு இருந்தா நமக்கு கொஞ்சம் நஞ்சம் தெரிஞ்ச கணக்கும் மறந்து போயிரும். 

ஆனா பாருங்க, நம்ம சாரு தான் இப்ப எல்லாரோட கணக்கு வழக்கையும் பாத்துக்கிறாப்ல. சார் போடற கணக்குல தப்பே வராதாம். அடேங்கப்பா, என்னடா நடக்குதிந்த உலகத்துலே?

கணக்கு கூட வேணாம்பா. நேத்து ராத்திரி வரைக்கும் நல்லா பேசிட்டு இருந்துட்டு, காலைல ஹாய் சொல்லலாம்னு போனா நம்மள தெரியவே தெரியாதுன்னு சாதிக்கிறான். 

என்னென்னவோ சொல்லி பாத்தாச்சு. ம்ஹும் ஒரு பிரயோஜனமும் இல்லை. அந்த சீக்ரெட் கோட் என்னனு சொல்லுங்கறான். பெரிய கொள்ளைக் கூட்ட பாஸ் மாதிரி. 

அடங்கொப்பன் தன்னானே. கடைசி வரைக்கும் நீ யாருனு தெரியவே தெரியாதுன்னுட்டான். அவனுக்கு ஞாபக சக்தி இருக்கோ இல்லையோ அந்த சீக்ரெட் கோட் நம்ம தான் ஞாபகம் வைச்சுக்கணும். 

இன்னோரு கூத்தை கேளுங்க. நான் மறந்து போன என் கோட(code) வேற எவனோ ஒருத்தன் இவன்கிட்ட சொல்லி நான் குடுத்து வைச்சிருந்த பணத்தை லவட்டிட்டு போயிட்டான். 

எவ்ளோ எடுத்து சொன்னாலும் புரிய வைக்க முடியலை. எல்லாம் வேஸ்ட். அப்புறம் ரொம்ப நேரம் பேசி எங்க ரெண்டு பேருக்கும் புதுசா ஒரு கோட்னு முடிவு பண்ணிக்கிட்டோம். ஆனா என்ன பிரயோஜனம் போன பணம் போனது தான். 

என்னை மாதிரி எத்தனையோ பேருக்கு இவன்கிட்ட இதே ரோதனை தான். ஆனா அப்பறம் ஏன்டா இவனை நம்பி பணத்தை குடுக்குறீங்கனு கேட்டா, அதானே எனக்கும் தெரியலை.

எல்லார் சம்பள பணத்தையும் இவன்ட தான் குடுக்குறானுக. பேங்க் லோனுக்கு சார் கிட்டா தான் மாசம் மாசம் பணம் கட்டணும். போன் பில், கரண்டு பில், இன்சூரன்ஸ் பில் சகலமும் சார் நடத்துற A - Z சர்விஸ் மூலமா தான். 

அவ்வுளவு ஏன் டாக்டருக்கு பீஸ் கட்டி நம்ம உடம்ப செக் பண்ண போனா அவரே இவன் கிட்ட கேட்டு தான் நம்ம உடம்பு எப்படி இருக்குனு முடிவுக்கு வராரு. கடவுளை பாக்க கூட சார் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைச்சா தான் அப்பொய்ன்ட்மென்ட் கிடைக்கும். 

ஒரு நாள் மட்டும் நம்ம ஹீரோ லீவு போடட்டுமே சகலமும் அடங்கிரும். 

சாருக்கு பல மொழிகள் தெரியும். ஆனா ஒன்னு கூட நமக்கு தெரிஞ்ச மொழியா இருக்காது. இங்கிலிஷ் மாதிரி இருக்கும் ஆனா இங்கிலிஷ் கிடையாது. நமக்கு புரியிற மாதிரி இருக்கும் ஆனா புரியவே புரியாது. ஒவ்வொரு தடவை பேச போகும் போதும் இடைல ஒரு ஆளு கூடவே  இருப்பான். 

இவனே ஒரு எடுப்பு அதுல இவனுக்கு ஒரு தொடுப்பு. 

நம்ம சொல்றத எடுத்து சொல்லி, தேவைப்பட்டா 'அண்ணன் இந்த இடத்துல கொஞ்சம் நீங்க நோட்ஸ்  எடுத்துக்க, தேவைப்பட்டா சிப்ஸ் எடுத்துக்கனு' மானே தேனே போட்டுகிட்டுருப்பாரு. 

அதெல்லாம் நீ ஏன் போடறேனு நம்ம கேள்விலாம் கேட்கப்படாது. அப்புறம் ஒரு வேலையும் நடக்காது. 

சில சமயம் வேற ஒருத்தன் இருப்பான். பயங்கர கடுப்பா இருக்கும். வார்த்தைக்கு வார்த்தை ட்ரான்ஸ்லேட் பண்ணுவான். இடைல நீங்க இப்படிலாம் சொல்ல கூடாதுனு  நமக்கு அட்வைஸ் வேற  பண்ணுவான். கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம 'போய் படிச்சவன் எவனாவது இருந்தா கூட்டிட்டு வா'னு கேவலமா திட்டுவான்.  நாகரிகம் இல்லாத நான்சென்ஸ். இவனுங்களுக்கு தான் இந்த காலத்துல மரியாதை. கலி காலம்ங்க!

இது தான் நம்ம கதாநாயகனோட பழைய படம் 


இப்ப கைக்கு அடக்கமா ஒரு சைஸ், மடில வைச்சிக்கிற மாதிரி ஒரு சைஸ், இன்னும் எத்தனையோ அவதாரம். நாளொரு மேனி பொழுதொரு வெர்சன். 





ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

நடத்துனர்

வாயுயர்த்தி 

வழி பிடித்து

நாள் முழுதும் 

நடை நடந்து


வியர்வையிடை 

ஊடுருவி 


நின்றது யார் 

நகர்ந்தது யார் 

கண்கொத்தி பாம்பாகி 

கணக்கெழுதி 


தடுமாறும் 

வழியேனும் 

ஒற்றைக் கம்பி

ஒருச்சாய்த்து 

நிலை பிடித்து 


பை நிறையும் 

பணம் காக்க 

நாயாகி  

நகருமென் 

நாட்களுக்கு 

இடைநிறுத்த 

தேனீரே 

வாய்த்த பணம்   

பெரும் 

பேரமிர்தம்  


 

புதன், 25 ஆகஸ்ட், 2021

ராஜாங்கம் 2

 ஆஸ்பத்திரி நெடி வெளில தெரியாம இருக்கனு நினைக்கிறேன். லெயோனார்ட் ஆஸ்பத்திரியை சுத்தி அழகழகா பூ இருக்கும். டாக்டருக்கு காத்திருக்கிற நேரத்துல அங்கே இருக்க குட்டி கார்டென பாத்துகிட்டு  இருந்தா நேரம் ஈஸியா நகர்ந்திடும். தாத்தா கூட டாக்டர் பாக்க நான் தான் கூட போவேன். போனவுடனே டோக்கன் வாங்கணும். அப்புறம் அந்த நம்பர் கூப்பிடற வரை வெயிட் பண்ணனும். மத்த ஆஸ்பத்திரி போனா சுத்தி சுவரைத் தான் பாக்கணும். இல்லைனா பக்கத்துல உக்காந்திருக்கிற நபரோட எதையவது பேசிட்டு இருக்கலாம். நமக்கு அதுலெல்லாம் சுவாரிஸ்யம் இல்லை. கர்டென்ல இருக்குற ஒவ்வொரு பூவா பாத்துக்கிட்டிருந்தா பாதி வியாதி போயிரும்னு நினைக்கிறேன். அவ்ளோ அழகு. 


தாத்தா டாக்டர்ட பேசுறப்ப எதோ பக்கத்துக்கு வீட்டுக்காரர்ட பேசுற மாதிரி ரொம்ப கேசுவலா பேசுவாரு. ஒரு தடவைக்கு மூணு தடவ எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுப்பாரு. அதே மாதிரி எந்த டாக்டரும் தாத்தா கிட்ட பந்தா காட்டினதா ஞாபகமே இல்லை. ரொம்ப இயல்பா பேச வைச்சிருவாரு. எங்க ஊரு கைராசி டாக்டர் வீடு வரைக்கும் வந்து தாத்தாவை பாத்திட்டு போவாரு. தாத்தா மேல அவ்ளோ பிரியம். 

தாத்தா அடிக்கடி செக்கப்புனு மதுரைக்கு வேற போவாரு. அப்பவும்  தாத்தா கூட நான் போயிருக்கேன். சும்மா சன்னல் சீட்டுகிட்ட உக்காந்து வேடிக்கை பாக்குறதுக்கு தான். மத்தபடி நம்ம கூட போறதால ஒரு பிரயோஜனமும் இல்லை. பஸ்ல போறதுனா ஒரு சந்தோசம். அதே ஊர்க தான் திரும்ப திரும்ப கடந்து போறோம். ஆனா அப்பப்ப நிகழற  சின்ன சின்ன மாற்றங்களை ரசிக்க முடியும்.  புதுசா முளைக்கிற கட்டிடங்கள். பச்சை பசேர்னு இருந்த நிலங்கள் திடீர்னு பொட்டலா போறதுலாம் சிமிண்ட் செடி வளக்குறதுக்கு அப்பல்லாம் தெரியாது. ஒன்னும் புரியாம கடந்த நாட்கள். ரொம்ப நாள் வரைக்கும் நம்ம அரை டிக்கட்டு தான்.

-- தாத்தா கை பிடித்து நாளை