திங்கள், 12 மார்ச், 2018

தெறித்தோடும் புரவிகள்...

எதிலும் நிலைக்காது,
ஒருமுகமாய் குவியாது
ஓடும் வழியெல்லாம்
சிதற விட்ட முயற்சிகளை

இழுத்து ஒருப்படுத்தி
நேர் செலுத்த
பரந்தாமன் பாதம்
வேண்டாம்.

அவன் வேதம்
உள்நிறுத்தி உணர வேண்டும்

பொய்த்தாள்

ஒரு கைல பேப்பர், ஒரு டீ (இல்லை காபி). இது பெரிய பாரம்பரியம். உலகத்துல எந்த பக்கம் போனாலும் இந்த ஸ்டைல் மட்டும் ஒரே மாதிரி தான்.

ஆனா இன்னைக்கு எப்பவும் போல இல்லை. நானும் எல்லா பேப்பரையும் புரட்டி பாத்துட்டேன். சொல்லி வைச்ச மாதிரி எல்லாரும் ஒரே மாதிரி தான். பிசிரு தட்டாம ஒரே மாதிரி எழுதி இருக்காங்க. 

எனக்கு நல்லா தெரியும். இது உண்மை இல்லை. வீட்டை விட்டு வெளிய வந்து  கத்தனும் போல இருந்தது. 

எவ்ளோ நேர்மையான ஆளு? அவரை போயி. சே!

இந்த நியூஸ் படிச்சிட்டு எவனெவன் என்ன பாடு படுத்துறானோ அந்த நல்ல மனுசனை? 

அப்ப இதுக்கு முன்னாடி நான் படிச்சு பகிர்ந்துகிட்ட எல்லா செய்தியும் இதே மாதிரி பெரிய புரட்டு தானா? 

சுவைக்காத டீ. பார்க்க சகிக்காத செய்தித்தாளோடு இப்படியா விடிய வேண்டும் இன்னைக்கு பொழுது?

நாளைக்கு வரலாறு பரிட்சைக்கு படிச்சுக்கிட்டிருக்கிற பையனின் தலை கோதி நகர்ந்தேன். 

இதே மாதிரி எத்தனை பொய் விதைக்கப்பட்டிருக்கிறதோ இந்த வரலாற்று புத்தகத்தில்!

ஞாயிறு, 11 மார்ச், 2018

குறுங்கதை

ஆங்காங்கே தீப்பட்ட மாதிரி  எரிச்சல். ரொம்ப கேர்லெஸ்ஸா   இருந்துட்டீங்கனு டாக்டர் சொன்னப்ப தலை சுத்திருச்சு. என்னன்னவோ மாத்திரை, ரெண்டு தடவை ஆபரேஷன் வேற. எவ்ளோ தான் செலவு பண்றது?
ஆனா பணத்த வச்சு என்ன பண்ண? என் சொத்தே உடம்பு தானே? இப்ப வந்த அறிவு அப்ப எங்க போச்சு? லைட்டா தெரிஞ்சப்பவே சுதாரிச்சிருக்கணும். விட்டுட்டேன்.

வெள்ள வேட்டி பளபளப்பில் கடந்து போன மாண்புமிகு டேஷ்க்கு இங்கே என்ன வேலை? இவன் எதோ பெரிய அறிவாளி மாதிரி பின்னால ரெண்டு பெரிய டாக்டர், கூடவே மாமா கணேஷ் (தொழில் ரீதியா வந்த பெயர்), குவாட்டர் சரசு அப்புறம் எவன் எவனோ. என்னமா ஜொலிக்கிறானுக!
மனசு பூரா பழைய கதை. அட பாவிகளா, விட்டுட்டோமோ!

 உடம்பு ரணம் மீறி எங்கெங்கோ வலித்தது.

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

பக்குவம்


சண்முகி அம்மாள் சமையல் பற்றி சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சுவை. அதுவும் தான் சமைத்த முறை பற்றியும், அதன் பின்னணி பற்றியும் அவங்க சொல்றதை  கேட்குறதுலயே பாதி  வயிறும் மனசும் நிரம்பிடும். சமையல் அனுபவத்தில் அம்மாவை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. ஒற்றை ஆளாக காய் வாங்குவதிலிருந்து பாத்திரம் அடுக்குவது வரைக்கும் ஆல் ரவுண்டர். கொஞ்ச நஞ்சமா என்ன? ஆறாவது வயதிலேயே கரண்டி தூக்கியவராயிற்றே.

நேற்று வரை தானுண்டு தன் வேலை உண்டென்று தான் இருந்தார்.  இதே போல் இதற்கு முன் எத்தனையோ முறை நடந்திருக்கிறது. திருவிழாவுக்கு வந்த சொந்தக்காரர்கள் ஒரே அடியாய் டேரா போட்டு அடித்த கூத்தெல்லாம் இந்த ஊருக்கே தெரியும். சண்முகி அம்மாளை அன்றைக்கு படுத்தின பாடெல்லாம். கேட்டா காது  வழியே இரத்தம் வந்திரும். கொஞ்சம் கூட ஒய்வு கிடைக்காமல் நாள் பூராவும் சமைத்து போட்டு, வேலை பாத்து இரவு தூங்கபோகையில் மணி இரண்டுக்கு மேலாகி விடும். அனால் அதெல்லாம் அவர் பெரிதாய் எடுத்துக் கொண்டதே இல்லை.

இந்த முறை வந்த பங்காளி கூட்டத்தின் சலம்பல் கொஞ்சம் ஓவராக தான்  இருந்தது. காரியத்துக்கு வந்தோமா, போனமான்னு இல்லாம வீட்டையே அலங்கோலம் படுத்திய பாடு இருக்குதே? அப்பா சாமி.

சரி, அதை விடுங்க. திடிர்னு சண்முகி அம்மாளுக்கு எங்கே இருந்து இவ்ளோ கோபம் வந்தது? வீட்டு பொறுப்பை என் கிட்ட கொடு இப்பவேனு இவ்ளோ பிடிவாதமா இருக்காங்க? அவனுகளை ஓட விடறேனா இல்லையானு பாருங்கறாங்க. எதுவும் புரியலை.

அவங்க கரண்டி பக்குவத்துல வாய் வழியே மூளைக்கு ஏறுன ருசி நம்பி குடுக்கலாம்ங்குது. அவங்களுக்கு தெரியாத பக்குவமாங்குது?  வயித்துப் பாட்டுக்குனு தலையாட்டுனது போதும்பா, கொஞ்சம் பாத்து பக்குவமா யோசினு சொல்லறாரு பக்கத்து வீட்டு மலையாள மாமா.  இன்னும் ஒரு முடிவுக்கும் வரலை மாமா! யோசிக்கிறேன்னு சொல்லிருக்கேன்.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

மறுபடி மறுபடி
திரைமுன் விரியும்
மறு ஒளிபரப்புகளில்
சேர்த்தல், மறைத்தல்,
மிகைப்படுத்தல் தூவி தூவி
ஒளிந்துகிடக்கும் உண்மை
எனக்கு மட்டுமேனும்
தெரியும் தூரத்தை
கடந்தாயிற்று!

அனுபவங்களோடு
அறிவு ஜீவிதத்தையும் கலந்து
ஒரு மசாலா கதை
தேற்ற தெரிந்த
தருணத்தில் தொலைத்தேன்
ஒரு வரலாறு
படைக்கிற யோக்கியத்தை!

சிரத்தை மிகு
உளியோடு
கை கோர்த்து,
நொடியென பறக்கும்
மணிகளை கடந்த பின்
கண்ணெல்லாம்
நிறையுமென் சிலையே!

ஊரார் கை கூப்பவோ
கை தட்டவோ
விழையவில்லை - யான்
உனை
நினைத்திட்ட கணத்தினில்
சூலெறி
செதுக்கப்பட்டேன் உன்னால்!


செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

இசை வெளி

ஆண் பாலா? பெண் பாலா?
ஆண்டவன் பாலா?
தெரியாது.

மழலையின் பாலும்
விளையாடும்
மெல்லிசையே - நீ
ஆண் பாலா? பெண் பாலா?
ஆண்டவன் பாலா?
தெரியாது!

நாசி வழி
உள் நுழைந்து 
நரம்பெல்லாம் நடமாடும்
காற்று உனை
பிறந்திட்ட கணம் தொட்டே
பிடித்திட்டேன்.

வெற்று வெளிகளில்
எப்பொருளும்
கனப்பதில்லையாம்
விஞ்ஞானம் சொல்லிக்கொடுத்தது!

பிடில் வழி,
யாழ் வழி,
குழல் வழி,
இனிக்கும் குரல் வழி
நடனமாடும் காற்றே!

நீ இல்லா 
வெற்று வெளிகளில்
எப்பொருளும்
கனப்பதில்லையாம்!

செவி வழி உன்னை
சுவாசிக்கிற தருணங்களில்
வாழ்வின் இனிமை
எடை ஏறி போக - புரிகிறது
நீயின்றி எப்படி எடையேறும்
பொருட்கள்?

புவியீர்ப்பு விசைக்கே
நீயன்றோ  விசை!

ஆண்பாலா? பெண் பாலா?
ஆண்டவன் பாலா?
தெரிய வேண்டாம்
உன் பால் சரணடைந்தே
இனிக்கிறது 
மூச்சு விடும் நொடியெல்லாம்!